

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொலகத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதுவரை நடந்த 7 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி கண்டுள்ள கொல்கத்தா, இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்கியது.
161 ரன்கள் என்ற இலக்கை விரட்ட உத்தப்பா மற்றும் காம்பீர் துவக்க வீரர்களாக ஆடவந்தனர். சென்ற போட்டியைப் போன்றே, இன்றும் இருவரும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 11 ஓவர்கள் வரை இருவரும் ஆட்டமிழக்காமல் அணியின் ஸ்கோரை 100 ரன்களைத் தாண்டி வேகமாக எடுத்துச் சென்றனர்.
12-வது ஓவரில் உத்தப்பா பார்னெல் பந்துவீச்சில் 47 ரன்களுக்கு (34 பந்துகள், 5 பவுண்டரி, 1 சிக்ஸர்) ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடவந்த பாண்டேவுடன் இணைந்த காம்பீர், 39 பந்துகளில் அரை சதத்தை அடைந்தார்.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய கேப்டன் காம்பீர், அணியை வெற்றிக்கு அருகில் எடுத்துச் சென்றார். 17 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டபோது, காம்பீர் 69 ரன்களுக்கு (56 பந்துகள், 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள்) ஆட்டமிழந்தார். ஆனால் அதிக சிரமமின்றி 18.2 ஓவர்களிலேயே கொல்கத்தா வெற்றி இலக்கை எட்டியது.
முன்னதாக டாஸில் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்த டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை எடுத்தது.
ஆரம்பத்தில் சிறிது தடுமாறிய அந்த அணி, ஜாதவ் மற்றும் டுமினியின் அதிரடி ஆட்டத்தால் 160 ரன்களை தொட்டது. டுமினி, 28 பந்துகளில் 40 ரன்களும், ஜாதவ் 15 பந்துகளில் 26 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.