

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி 278 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தியா நிர்ணயித்த 413 ரன்கள் இலக்கை விரட்டிய இலங்கை அணி நேற்றே இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. போட்டியின் கடைசி நாளான இன்று, முதல் பந்திலேயே கேப்டன் மாத்யூஸ் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் அந்த விக்கெட்டை வீழ்த்தினார். தொடர்ந்து தினேஷ் சந்திமல் 15 ரன்களுக்கு மிஷ்ராவின் அற்புதமான சுழலில் வீழ்ந்தார்.
அடுத்தடுத்து வந்த திரிமன்னே, முபாரக், கருணரத்னே என இலங்கை வீரர்கள் சொற்ப ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, இலங்கை அணி 128 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. கிட்டத்தட்ட இந்தியாவின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில், மழையால் ஆட்டம் தடைபட்டது. இதனால் மதிய உணவு இடைவேளை குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரே எடுக்கப்பட்டது.
இடைவேளைக்கு பிறகு வீசப்பட்ட 2-வது ஓவரிலேயே மிஷ்ரா கடைசி விக்கெட்டை வீழ்த்த, 134 ரன்களுக்கு இலங்கை ஆட்டமிழந்து தோல்வியைத் தழுவியது. ஆட்டநாயகனாக இந்திய வீரர் கே.எல்.ராகுல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
"நட்சத்திர வீரர் சங்கக்காரா ஓய்வு பெறுவதற்கு முன் ஆடும் கடைசி போட்டி இது என்பதால், வெற்றி பெற வேண்டும் என நினைத்தோம், ஆனால் போட்டியின் முடிவு பெரும் ஏமாற்றமாக அமைந்தது" என போட்டிக்குப் பிறகு இலங்கை கேப்டன் மேத்யூஸ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அஸ்வினின் பந்துவீச்சை வெகுவாகப் புகழ்ந்துள்ளார்.
முரளி விஜய் - சாஹா விலகல்
முன்னதாக, இன்றைய நாள் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னரே, காயம் காரணமாக இந்திய வீரர்கள் முரளி விஜய் மற்றும் விருத்தமான் சாஹா இருவரும் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இன்றைய போட்டியில் சாஹாவுக்கு பதிலாக ராகுல் விக்கெட் கீப்பிங் பொறுப்பை கவனித்து வருகிறார்.