Published : 07 Dec 2019 08:16 AM
Last Updated : 07 Dec 2019 08:16 AM

என் முதல் பாதி இன்னிங்சில் மோசமாக ஆடினேன்.. இளம் பேட்ஸ்மென்கள் அதை பின்பற்ற வேண்டாம்: வெற்றிக்குப் பிறகு விராட் கோலி சுய விமர்சனம்

ஹைதராபாத் டி20 போட்டியில் மே.இ.தீவுகள் பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்து தன் அதிகபட்ச ஸ்கோரான 94 ரன்களை எடுத்த கேப்டன் விராட் கோலி இலக்கை மிக அழகாக விரட்டி 208 ரன்கள் இலக்கை 18.4 ஓவர்களில் அனாயசமாக ஊதினார்.

ஆனாலும் அவர் முதல் 20 பந்துகளி 20 ரன்களைத்தான் எடுக்க முடிந்தது, கொஞ்சம் அப்போது பெரிய இலக்கு என்பதால் கே.எல்.ராகுலுக்கு நெருக்கடி அதிகரித்தது, ஆனால் சவாலை ராகுல் நம்பிக்கையுடன் எதிர்கொண்டார். அடுத்த 30 பந்துகளில் கோலி 74 ரன்களை விளாசினார், 6 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 94 என்ற சர்வதேச டி20 அதிகபட்ச ஸ்கோரை எட்டினார்.

இந்நிலையில் ஆட்டம் முடிந்து அவர் கூறியதாவது:

என் பேட்டிங்கைப் பார்க்கும் இளம் பேட்ஸ்மென்களுக்குச் சொல்கிறேன் என் இன்னிங்சின் முதல் பாதியைப் நீங்கள் பின்பற்ற வேண்டாம், அந்தப் பகுதியில் நான் மோசமாக பேட் செய்தேன். ராகுல் மீது அழுத்தத்தை செலுத்த விரும்பவில்லை. ஆனாலும் என்னால் ரன்களை விரைவாக எடுக்க முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக ஹோல்டரின் அந்த ஒரு ஓவர் சிக்கியது.

நான் என் பேட்டிங்கை பகுத்தாராய்ந்தேன். அப்போதுதான் உணர்ந்தேன் நான் பந்துகளை ஸ்லாக் செய்யும் அதிரடி ஆட்டக்காரன் அல்ல என்பதை, நான் பந்துகளை டைமிங்கில் ஆடி ரன்களை எடுப்பவன் என்பதை உணர்ந்தேன். என் பாணியை மாற்றினேன். காற்றில் பந்துகளை தூக்கி அடிப்பதை நான் ஊக்குவிப்பவன் அல்ல. தாறுமாறு அடிதடி கிரிக்கெட் ஆடுவது நோக்கமல்ல.

ஒன்று ரோஹித் அல்லது நான் கடைசி வரை நிற்பது அவசியம். அடிப்படை என்னவெனில் டி20-க்காக என் ஆட்டத்தை நான் பெரிய அளவில் மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. நான் அனைத்து வடிவங்களிலும் ஆடுபவன், அனைத்திலும் ரன்கள் எடுக்க விரும்புகிறேன்.

பெரிய இலக்கை விரட்டும் போது நிறைய கவனச்சிதறல்கள் ஏற்படுகிறது, ஸ்கோர் போர்டு அதில் ஒன்று, ஒரு 4-5 டாட்பால்கள் விட்டால் அழுத்தம் அதிகரிக்கிறது மீண்டும் ஆட்டத்தில் கவனம் செலுத்துவது சவாலாகிறது. ஜமைக்காவில் வில்லியம்ஸ் என்னை ஆட்டமிழக்கச் செய்த போது அவர் நோட்புக்கை எடுத்து என் பெயர் மீது அடித்தார். அன்று முதல் எனக்கும் அவருக்கும் ஒரு சிறு விளையாட்டு மோதல் இருந்து வருகிறது, இன்று என் முறை. கடினமாக ஆடவேண்டும் அதே வேளையில் எதிரணி வீரர்களை மதிக்க வேண்டும்.

என்றார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x