Published : 07 Dec 2019 07:49 AM
Last Updated : 07 Dec 2019 07:49 AM

சிம்மன்ஸ் பயந்தது நடந்தே விட்டது; விரட்டல் மன்னன் விராட் கோலியின் அபார இன்னிங்ஸ்: பெரிய இலக்கை விரட்டி இந்தியா வெற்றி

ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் விராட் கோலி தனது அதிக பட்ச டி20 ஸ்கோரான 94 ரன்களை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ இந்திய அணி மே.இ.தீவுகள் நிர்ணயித்த 208 ரன்கள் என்ற வெற்றி இலக்கை அனாயசமாக ஊதி 209/4 என்று 18.4 ஓவர்களில் விரட்டி தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

விராட் கோலி முதல் 10 பந்துகளில் 7 ரன்கள் 20 பந்துகளில் 20 ரன்கள் ஆனால் அடுத்த 30 பந்துகளில் 74 ரன்கள் என்று விளாசித்தள்ளினார். அவர் 50 பந்துகளில் 6 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 94 நாட் அவுட் என்று டி20யில் தனது அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோரை எட்டினார், முதல் 20 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்தால் சதம் கண்டிருப்பார்.

மே.இ.தீவுகள் பயிற்சியாளர் அன்று விராட் கோலியை எப்படி வீழ்த்துவது என்று தெரியவில்லை, ஒரே தருணத்தில் 2 பவுலர்களை வீசச் செய்யலாமா அல்லது அவரை ஒரு ஸ்டம்புடன் ஆடச் செய்யலாமா என்று நகைச்சுவையாக கோலியின் மகாத்மியம் பேசினார், அவர் பயந்தது நடந்தே விட்டது, கோலிக்கு எப்படி வீசுவது என்று தெரியவில்லை. ஒஷேன் தாமஸ் போன்ற பவுலர்கள் இருந்திருந்தால் வேகத்தில் கொஞ்சம் கோலியை மிரட்டியிருப்பார், ஆனால் அவரும் இல்லை. வில்லியம்சன் என்ற ஒரு பவுலரை கோலி வெளுத்து வாங்கினார். 3.4 ஓவர் 60 ரன்களை அவர் விட்டுக் கொடுத்தார். இதில் 5 சிக்சர்கள் கொடுத்தார். ஒரே ஓவர் பிட்ச், ஷார்ட் பிட்ச் என்று கோலிக்கு போட்டுப் போட்டுக் கொடுத்தார்.

காட்ரெல் சிறப்பாக வீசி 4 ஓவர் 24 ரன்கள் ஒரு விக்கெட் என்று அசத்த, ஜேசன் ஹோல்டர் தன் முதல் ஓவரிலேயே கே.எல்.ராகுலுக்கு ஷார்ட் பிட்சாக வீசி 3 பவுண்டரிகள் கொடுத்தார், இதில் ஒரு பவுண்டரி ராகுலின் பிரெஞ்ச் கட், லெக் ஸ்டம்ப்பை உரசும் தூரத்தில் பவுண்டரிக்குப் பறந்தது. அப்போது முதல் ஹோல்டருக்கு எதுவும் சரியாக இல்லை அவர் 4 ஓவர் 46 ரன்கள் விளாசப்பட்டார்.

இந்தியாவில் 6வது வெற்றிகர விரட்டலைச் சாதித்தனர் விராட் கோலியும் ராகுலும். கே.எல் ராகுல் அமைத்த அடித்தளத்தில்தான் கோலி விரட்டலை வெற்றிகரமாக்க முடிந்தது, ராகுல் 40 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 62 ரன்கள் எடுத்து இடது கை சுழற்பந்து வீச்சாளர் பியரிடம் ஆட்டமிழந்தார், ரோஹித் சர்மா சோபிக்கவில்லை 10 பந்துகளில் 8 ரன்கள் என்று பியர் பந்தை ஸ்வீப் ஆட முயன்று டீப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார், பியர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும் சிக்கனம் போதவில்லை அவர் 44 ரன்களை விட்டுக் கொடுத்தார். 3 சிக்சர்களையும் கொடுத்தார்.

இந்திய அணி மொத்தம் 120 ரன்களையே பவுண்டரிகளில் குவிக்க மே.இ.தீவுகள் 134 ரன்களை குவித்தது, ஆனாலும் தோல்வியைத் தழுவியது.

மே.இ.தீவுகளின் அதிரடி:

டாஸ் வென்ற இந்திய அணி சோதனை முயற்சிகளைக் கைவிட்டு முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. வாஷிங்டன் சுந்தரிடம் பந்தை கொடுத்தார் கோலி, ப்ளே என்றவுடன் எவின் லூயிஸ் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாச 13 ரன்கள் முதல் ஓவரில் விளாசப்பட்டது. லெண்டில் சிம்மன்ஸ், தீபக் சாஹரின் முதல் ஓவரிலேயே வெளியேறினார்.

தீபக் சாஹரின் ஒரு ஓவரை புரட்டி எடுத்தனர் எவின் லூயிஸ், பிராண்டன் கிங் ஆகியோர் வெளுத்து வாங்கினர், 2 சிக்ஸ் ஒரு பவுண்டரியுடன் 19 ரன்களை வாரி வழங்கிய ஹாட்ரிக் மன்னன் தீபக் சாஹர் 2 ஓவர் 27 ரன்களை வாரி வழங்க 5வது ஓவரில் எவின் லூயிஸ் புவனேஷ்வர் குமாரையும் விட்டு வைக்காமல் டீப் பாயிண்டில் மிகப்பெரிய சிக்சரையும் அடுத்து ஒரு பவுண்டரியையும் அடித்து பிறகு மீண்டும் வாஷிங்டன் சுந்தர் வீசிய பவர் ப்ளேயின் கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ் விளாசி 17 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 40 ரன்கள் என்று கதிகலக்கி விட்டு சுந்தரிடம் அதே ஓவரில் ஸ்வீப் ஆடப்போய் எல்.பி.ஆகி வெளியேறினார்.

ஷிம்ரன் ஹெட்மையர்

பிராண்டன் கிங், வாஷிங்டன் சுந்தர் ஓவரில் 2 பவுண்டரிகளை விளாச சுந்தர் அனாலிசிஸ் தகிடுதத்தம் போட்டு 3 ஓவர் 34 ரன்கள் என்று ஆனது. மறு முனையில் ஷிம்ரன் ஹெட்மையர், ஜடேஜா, யஜுவேந்திர சாஹல் ஆகியோரை தலா 1 சிக்ஸ் விளாசினார். 23 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த பிராண்டன் கிங்கை ஜடேஜா ஸ்டம்ப்டு முறையில் வீழ்த்திய போது வெஸ்ட் இண்டீஸ் அணி 10.1 ஓவரில் 101/3.

அதன் பிறகு ஹெட்மையரும் பொலார்டும் இணைந்தனர், போலார்ட் தன் பங்குக்கு ஷிவம் துபேயின் அசட்டுத்தன ஷார்ட் பிட்ச் பந்துகளை ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸ் விளாசினார். ஜடேஜாவின் 4வது ஓவரில் ஹெட்மையர் ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரி விளாசி 40ரன்களை கடந்தார். மறுமுனையில் பொலார்ட் சாஹலை சிக்ஸ் விளாச ஸ்கோர் 14வது ஓவரில் 141 என்று ஆனது. ஜடேஜா 4 ஒவர் 30 ரன் ஒரு விக்கெட். 15வது ஓவரில் புவனேஷ்வர் குமார் 3 ரன்களையே கொடுத்து முடக்கினார். பெரிய சிக்சர் மூலம் ஹெட்மையர் அரைசதம் எடுத்து 18வது ஓவரை சாஹல் வீச அவரிடம் 56 ரன்களில் வெளியேறினார், அதே ஓவரில் பொலார்டையும் சாஹல் வீழ்த்த 17.3 ஓவர்களில் 173/5. ஓவருக்கு 10 ரன்கள் என்பதிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் இறங்கவேயில்லை. சாஹல் சரியாக வீசவில்லை, இவருக்குப் பதிலாக குல்தீப் யாதவ்வை வைத்திருக்க வேண்டும். வாஷிங்டன் சுந்தருக்குப் பதில் அஸ்வினையே வைத்திருக்கலாம், டி20யில் 52 விக்கெட்டுகளுடன் முதலிடம் வகிக்கும் அஸ்வினை வெளியில் வைத்து அழகு பார்ப்பது இந்திய அணியாக மட்டுமே இருக்க முடியும்.

கடைசியில் ஹோல்டர் 2 சிக்சர்களுடன் 9 பந்துகளில் 24 எடுக்க, ராம்தின் 11 ரன்களை எடுக்க மே.இ.தீவுகள் 207/5. ஹாட்ரிக் மன்னன் தீபக் சாஹர் 4 ஓவர் 56 ரன்கள் விளாசப்பட்டார், புவனேஷ்வர் குமார் ஒரு ஓவர் 3 ரன்கள் தவிர பின்னி எடுக்கப்பட்டு 36 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஷமியை கொண்டு வர வேண்டும்.

விரட்டும் போது ஷிகர் தவண் இல்லாத குறையை ராகுல் போக்கி அதிரடியாக ஆடி ரன் விகிதத்தை 9 ரன்களுக்கும் கீழ் செல்லாமல் பராமரித்து வந்தார், அவர் அரைசதம் எடுத்து அதிவேக 1000 டி20 ரன்களை எடுத்த 3வது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

அதன் பிறகு கோலியின் தாண்டவம்:

முதல் 20 பந்துகளில் கோலி 20 ரன்களையே எடுத்தார் ஒரு கட்டத்தில் வெற்றிக்குத் தேவைப்படும் ரன் விகிதம் 11.9 ஆக அதிகரித்தது. ஹெய்டன் வால்ஷ் அருமையான ஒரு ஓவரை வீச கோலி இன்சைடு எட்ஜ் பவுண்டரி அடித்தார். அடுத்த ஓவரில் கோலிக்கு ஹோல்டர் ஸ்லோ பவுன்சர் வீச டாப் எட்ஜ் சிக்ஸ் ஆனது, பிறகு ஒரு புல்டாசை கோலி பவுண்டரிக்கு விரட்டினார். பவுலரின் நோ-பாலை இவரே நடுவரிடம் கூறுகிறார், எதிரணி வீரர்களுடன் கொஞ்சம் காரசாரமாகவே நடந்து கொண்டார், பெரிய வீரருக்கு இவையெல்லாம் அழகல்ல, ரன் ஓடும் போது பவுலர் குறுக்காக வருவது சகஜம் தான் உடனே ஸ்கூல் பையன் போல் ‘அவன் என் மேல மோதிட்டான்’ ரக புகார்களுடன் அவர் இன்னிங்ஸ் நடந்து கொண்டிருந்தது.

ராகுல் ஆட்டமிழந்த போது இந்தியாவுக்கு 39 பந்துகளில் 78 ரன்கள் தேவை. இரு மடங்கு. ரிஷப் பந்த் இறங்கிய முதல் பந்தே மிகப்பெரிய சிக்ஸ் விளாசினார், பிறகு இன்னொரு சிக்ஸ் விளாசி 18 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி அதற்குள் பேய் மூடிற்கு வந்திருந்தார் ஹோல்டரை ஓரே ஓவரில் 19 ரன்கள் விளாசினார். 34 பந்துகளில் 55 ரன்கள் என்று சமன்பாடு மாறியது. ஷ்ரேயஸ் அய்யர் பொலார்டிடம் 4 ரன்களில் கேட்ச் ஆனார். ஷிவம் துபே பந்தையே எதிர்கொள்ள வேண்டியில்லாமல் 19வது ஓவரில் வில்லியம்சை 2 சிக்சர்கள் விளாசி கிங் கோலி விரட்டலை முடித்து வைத்தார். ஆட்ட நாயகன் விராட் கோலிதான், வேறு யாருக்கும் கொடுக்க முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x