Last Updated : 06 Dec, 2019 03:27 PM

 

Published : 06 Dec 2019 03:27 PM
Last Updated : 06 Dec 2019 03:27 PM

மறக்க முடியுமா இந்த நாளை? அதிவேக பெர்த் பிட்ச்சில் இதயத் துடிப்பை எகிற வைத்த இந்தியா-மே.இ.தீவுகள் ஆட்டம்: திருப்புமுனை ஏற்படுத்திய சச்சின்

கோப்புப்படம்

ஆஸ்திரேலியாவில் 1991-92 ஆம் ஆண்டு நடந்த பென்ஸன் அன்ட் ஹெட்ஜஸ் வேர்ல்டு சீரிஸ் முத்தரப்பு ஒருநாள் தொடரை கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.

களத்தில் மோதிய இந்தியா, மே.இ.தீவுகள், ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளுமே உலக சாம்பியன்கள், 1992-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டி வேறு நடக்க இருந்த நேரத்தில் இந்தப் போட்டி நடந்ததால் ஒவ்வொரு அணியும் சளைத்தவர்கள் இல்லை என்ற ரீதியில்தான் மோதினர்.

டிசம்பர் 6, 1991

அதிலும் இந்தியா-மே.தீவுகள் அணிகளுக்கு இடையே நடந்த அந்த முதல் லீக் ஆட்டமே, ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைத்தது. அந்தப் போட்டி நடந்த நாள்தான் இன்று, 1991-டிசம்பர் 6-ம் தேதி.

அசாருதீனின் அற்புதமான கேப்டன்ஷிப், கடைசி நேரத்தில் ஸ்லிப்பில் பிடித்த கேட்ச், சச்சின் வீசிய திருப்புமுனை ஓவர், மே.இ.தீவுகள் வீரர்களையே மண்ணைக் கவ்வ வைத்த இந்திய வீர்களின் கலக்கலான பந்துவீச்சு என்று பல சிறப்பு அம்சங்களைக் குறிப்பிட முடியும்.

இத்தனைக்கும் இந்திய அணியில் எந்த பேட்ஸ்மேனும் பெரிய அளவுக்கு ஸ்கோர் ஏதும் இந்தப் போட்டியில் செய்யவில்லை. கபில்தேவ், ரவி சாஸ்திரி, ஸ்ரீகாந்த், அசாருதீன், மஞ்சரேக்கர் என போட்டியை எந்த சூழலிலும் திருப்பிவிடும் வல்லமை படைத்த பேட்ஸ்மேன்கள் இருந்தபோதிலும் இந்திய அணி குறைவான ஸ்கோரைத்தான் எடுத்தது.

ஆனால், மே.இ.தீவுகளை குறைந்த ஸ்கோருக்குள் சுருட்டுவதற்கு இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் நடத்திய 4 முனைத் தாக்குதல் இருக்கிறதே! வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. கபில் தேவ், மனோஜ் பிரபாகர், சுப்ரத்தோ பானர்ஜி, ஸ்ரீநாத் ஆகியோரின் ஒவ்வொரு ஓவரும் ஏதாவது ஒரு திருப்புமுனையுடன் நகர்ந்தது.

இதில் இந்தியப் பந்துவீச்சாளர் சுப்ரத்தோ பானர்ஜியைப் பற்றி குறிப்பிட வேண்டும். ஏனென்றால் இந்திய அணியில் அந்தப் போட்டியில்தான் பானர்ஜி அறிமுகம். இந்திய அணிக்குக் கிடைத்த சிறந்த பந்துவீச்சாளராக பானர்ஜி அப்போது இருந்தாலும், 6 ஒருநாள் போட்டிகளோடு அவர் கிரிக்கெட் உலகத்திலிருந்து காணாமல் போய்விட்டார்.

வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியமான ஓவரை, எந்தவிதமான அனுபவமும் இல்லாத 18 வயது சச்சின் டெண்டுல்கரை வீசச் செய்த அசாருதீனின் துணிச்சலான கேப்டன்ஷிப், கனக்கச்சிதமாக பந்துவீசிய சச்சின் என போட்டியை வர்ணிக்க ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

மிரட்டிய கரிபியன்ஸ்

அந்த நேரத்தில், மே.இ.தீவுகள் அணியின் பந்துவீச்சும், பேட்டிங்கும் உலக அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது. அதிவேகமாக பந்துவீசக் கூடிய மார்ஷல், பவுன்ஸரில் மிரட்டும் ஆம்புரோஸ், கம்மின்ஸ், பேட்டர்ஸன் என பந்துவீச்சில் எதிரணி பேட்ஸ்மேன்களை தண்ணீர் குடிக்க வைக்கும் வீரர்கள் இருந்தார்கள்.

இவர்களின் பந்துவீச்சை சிறிது தவறாகக் கணித்து ஆடினாலும் பேட்ஸ்மேன்கள் முகத்தில் எலும்புகள் இடம் மாறிவிடும் அளவுக்கு பந்துவீச்சில் ஆவேசமும், துல்லியமும் இருந்தது.

அதேபோல பேட்டிங்கில், ஹெயின்ஸ், வாலஸ், லாரா, ரிச்சார்ட்ஸன், ஹூப்பர், ஆர்தர்டன், வில்லியம்ஸ் என களத்தில் நங்கூரமிட்டு விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்கள் இருந்தார்கள். இவர்களைக் களத்தில் இருந்து கிளப்புவது என்பது சாதாரண பணியல்ல. அதை எளிதாக இந்தியப் பந்துவீச்சாாளர்கள் செய்து காட்டினார்கள்.

இந்த இரு அணிகளும் மோதிக்கொண்ட பரபரப்பான, த்ரில்லான ஆட்டத்தைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம்.

அதிவேக பெர்த் மைதானம்

பெர்த் நகரில் உள்ள டபிள்யுஏசிஏ மைதானம் அப்போது உலக அளவில் அதிவேகமான பிட்ச்சைக் கொண்டுள்ள மைதானமாகும். இந்த பெர்த் ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் விளையாடுவதற்கே அச்சப்பட்டதும் உண்டு. ஆடுகளத்தில் அதிவேகத்தில் பந்துகள் பேட்ஸ்மேனை நோக்கி வரும். இப்போது இருக்கும் பெர்த் ஆடுகளம் அதில் பாதி அளவுகூட இல்லை.

145 கி.மீ. வேகத்தில் வீசப்படும் பந்து ஆடுகளத்தில் பட்டவுடன் பேட்ஸ்மேனின் கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து விடும். பெர்த் ஆடுகளம் அந்த 1990கள் காலகட்டத்தில் உலகப் புகழ் பெற்றது.

இந்த பென்ஸன் அண்ட் ஹெட்ஜஸ் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய மண்ணில் 1991-க்கு முன் இந்தியாவும், மே.இ.தீவுகள் அணியும் மோதிக் கொண்டதில்லை. 1992-ம்ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக நடந்த போட்டி என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.

126க்கு ஆட்டமிழந்த இந்திய அணி

பெர்த் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இந்தப் போட்டி நடந்தது. டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணியின் கேப்டன் ரிச்சார்ட்ஸன் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த இந்திய அணி 47.4 ஓவர்களில் 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ரவி சாஸ்திரி அடித்த 33 ரன்கள்தான் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர். இந்த ரன்களையும் ரவி சாஸ்திரி தடவித் தடவி 110 பந்துகளில் சேர்த்தார் என்றால் மே.இ.தீவுகள் பந்துவீச்சு எவ்வாறு இருந்திருக்கும் எனப் புரிந்துகொள்ளலாம். பிரவிண் ஆம்ரே 20 ரன்களும், மஞ்சரேக்கர் 15 ரன்களும் எடுத்ததுதான் ஓரளவுக்கு கவுரவமான ஸ்கோர்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீகாந்த், ரவி சாஸ்திரி தொடக்க ஜோடி நிலைக்கவில்லை. ஸ்ரீகாந்த் 3 ரன்களிலும், மஞ்சரேக்கர் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இந்த கேட்ச் பிடிக்கப்பட்டது குறித்து மஞ்சரேக்கருக்கு சந்தேகம் இருந்தபோதிலும் அப்போதெல்லாம் மூன்றாவது நடுவர் இல்லை என்பதை மவுனமாக மஞ்சரேக்கர் வெளியேறினார். 18 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் சேர்த்திருந்தது.

18 வயதில் களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர் லாங் ஆன் திசையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் தூக்கி அடிக்க ரிச்சர்ட்ஸிடம் கேட்ச் ஆனது. ஒரு ரன்னில் சச்சின் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

இந்தத் தொடர் முழுவதுமே கேப்டன் அசாருதீன் எதிர்பார்த்த அளவுக்கு ஸ்கோர் செய்யவில்லை. முதல் போட்டியிலுமே அதேபோன்று 6 ரன்களில் ஆட்டமிழந்தார். சாஸ்திரிக்கு கல்லி பகுதியில் லாரா எடுத்த கேட்ச் மிக அற்புதமாக இருந்தது.

கேப்டன் அசாரூதீன் (6), ஆம்ரே (20), கபில் தேவ் (5), பிரபாகர் (13), கிரண்மோர் (4), ஸ்ரீநாதா (0) என வரிசையாக விக்கெட்டுகள் வீழ்ந்தன. 47.4 ஓவர்களில் இந்திய அணி 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

மே.இ.தீவுகள் தரப்பில் கர்ட்லி ஆம்புரோஸ் 8.4 ஓவர்கள் வீசி 3 மெய்டன், 9 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் மார்ஷல், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

4 முனைத் தாக்குதல்

127 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கியது மே.இ.தீவுகள் அணி. 1983-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் 183 ரன்கள் சேர்த்து, அதை அடிக்கவிடாமல் மே.இ.தீவுகள் அணியைச் சுருட்டிய இந்தியப் பந்துவீச்சு இந்தப் போட்டியிலும் எதிரொலித்தது என்றே குறிப்பிடலாம்.

தொடக்கம் முதல் முடிவு வரை மே.இ.தீவுகள் அணிக்கு நெருக்கடி தரும் விதத்திலேயே இந்தியப் பந்துவீச்சு இருந்தது.
முதலில் மனோஜ் பிரபாகரும், கபில் தேவும் தங்களின் வேகப்பந்துவீச்சு தாக்குதலைத் தொடர்ந்தார்கள். ஆட்டத்தின் தொடக்கமே பரபரப்பாக இருந்தது.

கபில் தேவ் தான் வீசிய முதல் ஓவர் முதல் பந்திலேயே மே.இ.தீவுகள் வீரர் கெயின்ஸை வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார். வாலஸ் 11 ரன்னில் பிரபாகர் பந்தில் போல்டாகி வெளியேறினார், அடுத்து சிறிது நேரத்தில் ரிச்சர்ட்ஸன் 12 ரன்னில் கபில் தேவ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கிரண் மோரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து மே.இ.தீவுகள் அணி இந்திய அணியின் பந்துவீச்சுக்குத் தடுமாறியது.

அச்சுறுத்திய லாரா

லாராவும், கூப்பரும் களத்தில் நின்று அணியை முன்னெடுத்துச் சென்றார்கள். ஆனால், மே.இ.தீவுகள் அணியில் ஆம்புரோஸ் பவுன்ஸரில் எவ்வாறு மிரட்டினாரோ அதேபோன்று இந்திய அணியில் ஸ்ரீநாத் தெறிக்கவிட்டார். ஹூப்பரை 12 ரன்களிலும், ஆர்தர்ட்டனை டக் அவுட்டிலும் க்ளீன் போல்டாக்கி வெளியேற்றி ரசிகர்களின் பாராட்டுகளை ஸ்ரீநாத் அள்ளினார். இந்த ஆட்டத்திலும் ஸ்ரீநாத் வீழ்த்திய இரு விக்கெட்டுகளும் முக்கியமானவையாக இருந்தன.

விக்கெட்டுகள் வீழ்ந்தபோதிலும் லாரா சளைக்காமல் நின்று விளையாடினார். போட்டியைப் பார்த்த ரசிகர்கள் அனைவருக்கும் இது கவலையாகவே இருந்தது, எந்தநேரத்திலும் லாராவின் பேட்டிங் ஆட்டத்தை மாற்றிவிடும் திறன்படைத்தது என்பதால், ரசிகர்கள் லாராவின் மீது கவனத்துடனே இருந்தார்கள்.

பானர்ஜி, ஸ்ரீநாத் கூட்டணி

ஆனால், தனது அறிமுகப் போட்டியிலே அசத்தலாகப் பந்துவீசிய பானர்ஜி, 3 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து சபாஷ் வாங்கினார். பானர்ஜியின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கிரண் மோரிடம் கேட்ச் கொடுத்து லாரா 14 ரன்களில் வெளியேறியபோது ரசிகர்கள் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

அதன்பின் மார்ஷல், வில்லியம்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி பானர்ஜி திருப்புமுனையை ஏற்படுத்தினார். 76 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து மேற்கிந்தியத் தீவுகள் தோல்வியை நோக்கி தடம் மாறியது. 9-வது விக்கெட்டுக்கு ஆம்புரோஸ், கம்மின்ஸ் சேர்ந்து ஆட்டத்தின் போக்கை மாற்றினர்.

ஆம்புரோஸ், கம்மின்ஸ்

பேட்டிங் செய்வதற்கு ஆம்புரோஸின் உயரம் பல நேரங்களில் அவருக்குத் தடையாக இருந்திருக்கிறது. தனக்கு பேட்டிங் வராவிட்டாலும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஏதாவது ஷாட் அடித்து ஆம்புரோஸ் முயல்வார். அவ்வாறு அடித்த ஷாட்கள் இந்தப் போட்டியில் அவருக்கு சிக்ஸரையும், பவுண்டரியையும் பெற்றுக் கொடுத்தன.

கம்மின்ஸ் நிதானமாக பேட் செய்ய ஆட்டம் மீண்டும் மே.இ.தீவுகள் அணியின் பக்கம் சென்றது. ஆம்புரோஸ் 17 ரன்கள் சேர்த்திருந்தபோது ரன் அவுட் செய்யப்பட்டு ஆட்டமிழக்க ஆட்டம் பரபரப்பின் பிடிக்குள் வந்தது. 113 ரன்களுக்கு 9-வது விக்கெட்டை இழந்தது மே.இ.தீவுகள் அணி.

ஆனாலும் மனம் தளராத கம்மின்ஸ், கடைசி விக்கெட்டான பேட்டர்ஸனை வைத்து ஆட்டத்தை மெல்ல நகர்த்தினார். பிரதானப் பந்துவீச்சாளர்களான ஸ்ரீநாத், கபில்தேவ், பிரபாகர், பானர்ஜி ஆகியோர் தலா 10 ஓவர்களை முடித்துவிட்டனர்.

திக்திக் 41-வது ஓவர்

41-வது ஓவரை யாருக்கு வழங்கலாம், ரவி சாஸ்திரியா அல்லது இளம் வீரர் சச்சினான என்ற கேள்வி கேப்டன் அசார் மனதில் எழுந்தது. வெற்றிக்கு 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. துணிச்சலாக முடிவெடுத்த அசாருதீன், சச்சின் மீது நம்பிக்கை வைத்து அளித்தார்.

முதல் 4 பந்துகளில் ரன் ஏதும் அடிக்கவில்லை. 5-வது பந்தை பேட்டர்ஸன் தட்டிவிட்டு 3 ரன்கள் எடுத்தார். ஆட்டம் டையில் நின்றது. அந்த ஓவரின் கடைசிப் பந்தில் ஒரு ரன் எடுத்தால் மே.இ.தீவுகள் அணியின் வெற்றி உறுதியாகிவிடும்.

சச்சினிடம் பேசிய அசாரூதின், அவுட்சைட் ஆப்-ஸ்டெம்பில் பந்துவீசக் கூறினார். இக்கட்டான தருணத்தில் ஸ்லிப்பில் ஃபீல்டர்களை நிற்க வைப்பது என்பதே துணிச்சலான விஷயம். ஏனென்றால், ஒரு ரன்னுக்கு பேட்ஸ்மேன் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் அடிக்க முடியும்.

அதுமட்டுமல்லாமல் இன்னும் கைவசம் 9 ஓவர்கள் வரை இருந்தது என்பதால், வெற்றிக்கான அனைத்து வாய்ப்புகளும் மே.இ.தீவுகள் பக்கமே இருந்தன. ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக சச்சின் அவுட்சைட் ஆப்-ஸ்டெம்பில் பந்துவீச, அதை கம்மின்ஸ் கட் செய்தார்.

எதிர்பார்த்துக் காத்திருந்த அசாரூதின் 2-வது ஸ்லிப்பில் டைவ் அடித்து கேட்ச் பிடித்தவுடன் இந்திய வீரர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார்கள். ஆட்டம் டையில் முடிந்தது. வெற்றியின் விளிம்புவரை சென்ற மே.இ.தீவுகள் அணி வெற்றியைப் பற்றிக்கொள்ளத் தவறவிட்டது. ஆட்டநாயகனாக 9 ரன்களுக்கு 3 விக்கெட் வீழ்த்திய ஆம்புரோஸ் தேர்வு செய்யப்பட்டார்

இந்தப் போட்டியில் அசாரூதினின் கேப்டன்ஷிப், கடைசி நேரத்தில் சச்சினைப் பந்துவீசச் செய்த முடிவு பலராலும் பாராட்டப்பட்டது. இந்தியப் பந்துவீச்சு மீண்டும் தன்னை சிறந்து தாக்கும் அணி என்று நிரூபித்தது.

இந்த முத்தரப்பு தொடரில் இறுதி ஆட்டத்துக்கு இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் தகுதி பெற்றன. 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை வென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x