

மறைந்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரும் அச்சுறுத்தும் வகை பவுலருமான பாப் விலிஸின் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் விளாசிய இந்திய நட்சத்திர வீரர் சந்தீப் பாட்டீல், பாப் விலிஸ் பவுலிங், அவரது மறைவு குறித்து தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
1982 இங்கிலாந்துக்கு இந்திய அணி சென்றிருந்த போது சந்தீப் பாட்டீல் எடுத்த 129 ரன்களில் 6 பவுண்டரிகளை ஒரே ஓவரில் பாப் விலிஸ் பந்து வீச்சில் விளாசினார், அதுவும் சும்மா இல்லை, பாட்டீல் தன் சொந்த ஸ்கோரான 80 ரன்களிலிருந்து 104 ரன்களுக்குப் பாய்ந்த 6 பவுண்டரிகள் ஆகும் இது.
இதோடு மட்டுமல்லாமல் 1983 உலகக்கோப்பை அரையிறுதியில் மீண்டும் பாப் விலிசை தொடர் பவுண்டரிகள் விளாசினார். அரையிறுதியில் சந்தீப் பாட்டீல் 29 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார். அப்போதுதான் இறுதிப்போட்டிக்கு முன்பாக விவ் ரிச்சர்ட்ஸ், சந்தீப் பாட்டீலுக்கு கை கொடுத்து பாப் விலிஸ் பந்து வீச்சை விளாசியதை சிலாகித்ததாக பாட்டீல் குறிப்பிடுகிறார்.
தி இந்து ஸ்போர்ட்ஸ்டார் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
இறுதிப் போட்டிக்கு முன்பாக விவ் ரிச்சர்ட்ஸ் என் கைகளைக் குலுக்கி பாப் விலிஸ் பந்து வீச்சுக்கு எதிரான இன்னிங்ஸிற்காக என்னைப் பாராட்டினார். நானும் விவ் ரிச்சர்ட்ஸும் நண்பர்களானோம், இதற்கு பாப் விலிஸ்தான் காரணம். இதனை நான் விலிஸிடமே தெரிவித்துள்ளேன்.
அவர் மறைவு எனக்கு வருத்தமளிக்கிறது, அவர் பயங்கரமான ஒரு பவுலர். களத்துக்கு வெளியே ஒரு ஜெண்டில்மேன். நான் அவரது ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் அடித்ததை அனைவரும் நினைவு கூருகின்றனர், ஆனால் அவர் பந்து வீச்சை நான் சவுகரியமாக ஆடினேன் என்று கூற முடியாது. தன்னுடைய எழுச்சி மிகு வேகத்தினால் பேட்ஸ்மென்கள் மனதில் பயத்தை ஏற்படுத்தக் கூடியவர்.
அவர் பந்து வீசுவதை நெருக்கமாக, கவனமாகப் பார்க்க வேண்டும் பந்து கையிலிருந்து ரிலீஸ் ஆனவுடன் நாம் இடிக்குத் தயாராக வேண்டும். பந்து ஒவ்வொன்றும் இடி போல் இறங்கும்.
நான் 6 பவுண்டரிகள் அடித்ததை வைத்து அவரை மதிப்பிடக்கூடாது, அவர் நாம் நினைப்பதை விட பயங்கரமான பவுலர், ஆனால் அன்று நான் சதம் எடுத்தவுடன் என்னை தட்டிக் கொடுத்தார், எத்தனை பேருக்கு இந்த குணம் வரும்? உண்மையில் என் மீது அவருக்கு எரிச்சல்தான் ஏற்பட வேண்டும், ஆனால் அவர் என்னைப் பாராட்டித் தட்டி கொடுத்தார். அவர் பந்து வீச்சை எதிர்கொள்வது அவ்வளவு மகிழ்ச்சியானதல்ல.
ஏனெனில் அதற்கு அடுத்த டெஸ்ட்டிலேயே அவரது பவுன்சரினால் என் ஹெல்மெட்டில் ஒன்று கொடுத்தார். நான் 6 பவுண்டரிகள் அடித்தேன், அவர் என் ஹெல்மெட்டில் அடித்தார், அவ்வளவுதான் தீர்ந்தது, அவரிடமிருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை. களத்தில் எந்த எதிரணி வீரரையும் நடுவரையும் அவர் வசைபாடியதில்லை. ஓரு மனிதனாக விரும்பத்தக்க வேகப்பந்து வீச்சாளர் பாப் விலிஸ்.
-விஜய் லோகபாலி, தி இந்து ஸ்போர்ட்ஸ்டார்