Published : 05 Dec 2019 04:13 PM
Last Updated : 05 Dec 2019 04:13 PM

தோனி தோனி என மைதானத்தில் குரல் எழுப்பி ரிஷப் பந்த்தைக் கிண்டல் செய்ய வேண்டாம்: கோலி வேண்டுகோள்

ரிஷப் பந்த் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பைத் தவறவிட்டால் மைதானத்தில் தோனி தோனி என குரல் எழுப்பி அவரைக் கிண்டல் செய்ய வேண்டாம் என்று கோலி கேட்டுக் கொண்டுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக முதல் 20 - 20 போட்டியை இந்திய அணி வெள்ளிக்கிழமை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இன்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, மேற்கிந்தியத் தீவுகளுடான போட்டி குறித்து பத்திரிகையாளர்களுக்குப் பதிலளித்தார்.

இதில் ரிஷப் பந்த்தின் சமீபத்திய ஆட்டம் குறித்து பத்திரிகையாளர்கள் கோலியிடம் கேள்வி எழும்பினர். அதற்கு ரிஷப் பந்த்துக்கு ஆதரவாக கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோலி கூறுகையில், ''ரிஷப் பந்த் அவரது திறமையை நிரூபிப்பதற்கு தேவையான இருப்பை வழங்குவது அனைவரது பொறுப்பு என்று நினைக்கிறேன். போட்டியின்போது அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பைத் தவறவிட்டால் நீங்கள் மைதானத்தில் தோனி தோனி என்று குரல் எழுப்பி அந்த இளம் விக்கெட் கீப்பரைக் கிண்டல் செய்ய வேண்டாம். இது மரியாதையாக இல்லை. எந்த வீரருக்கு இந்த நிலைமை வரக்கூடாது. உங்கள் நாட்டுக்காக விளையாடும்போது நிச்சயம் உங்களின் ஆதரவு கிடைக்க வேண்டும்” என்றார்.

முன்னதாக, இந்திய அணியில் இருக்கும் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்தைக் குறைகூறாமல் இருங்கள், அவரின் விருப்பத்துக்கு ஏற்றவாறு செயல்பட விடுங்கள் என்று இந்திய அணி வீரர் ரோஹித் சர்மாவும், பந்த்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்திய அணியில் விக்கெட் கீப்பிங்கிற்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த எம்.எஸ்.தோனி, உலகக்கோப்பை போட்டிக்குப் பின் விளையாடாமல் இருந்து வருகிறார். தோனி ஒருவேளை ஓய்வு அறிவித்தால், பேட்டிங்கிலும், கீப்பிங்கிலும் சிறந்து விளங்கும் வீரரைத் தயார் செய்யும் முனைப்பில் இளம் வீரர் ரிஷப் பந்த்துக்கு தேர்வுக் குழு அதிகமான வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

இங்கிலாந்து தொடரில் சிறப்பாக ஆடிய ரிஷப் பந்த், அதன்பின் பெரிய அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை. இருப்பினும், தோனிக்கு அடுத்து சிறந்த விக்கெட் கீப்பரை உருவாக்கும் முனைப்பில் ரிஷப் பந்த்துக்கு தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் ரிஷப் பந்த் இடம் பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x