Published : 05 Dec 2019 11:17 AM
Last Updated : 05 Dec 2019 11:17 AM

‘ஆண்டின் சிறந்த ஜோக்’ - பும்ரா ‘பேபி பவுலரா?’ - நெட்டிசன்களிடம் சிக்கிச் சின்னாபின்னமான பாக். ஆல்ரவுண்டர்

உலகின் தலை சிறந்த பவுலர் என்று பெரிய பெரிய கிரிக்கெட் பண்டிதர்களே ஒப்புக் கொண்ட இந்தியாவின் புதுப்புயல் ஜஸ்பிரித் பும்ராவை ‘பேபி பவுலர்’ என்று பாகிஸ்தானின் முன்னாள் ஆல் ரவுண்டர் அப்துல் ரசாக் வர்ணித்து நெட்டிசன்களின் கிண்டல் வலையில் வசமாக சிக்கினார்.

கிரிக்கெட் பாகிஸ்தான் என்ற இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் அப்துல் ரசாக், தான் கிளென் மெக்ரா, வாசிம் அக்ரம் போன்ற ஜாம்பவான்களை எதிர்கொண்டிருப்பதாகவும் தனக்கு பும்ரா ஒரு பேபி பவுலர்தான் என்றும் தான் பேட்டிங் செய்தால் பும்ரா பந்து வீச்சை ஆதிக்கம் செலுத்தி, அடித்து ஆடியிருப்பேன் என்றும் கூறியிருந்தார்.

இது போதாதா? இந்திய நெட்டிசன்களின் ‘ட்ரோல் ஆர்மி’இடம் சிக்கினார் அப்துல் ரசாக். உடனே கிளென் மெக்ராவுக்கு எதிராக இவரது பேட்டிங் சராசரி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் சராசரி என்று எடுத்துப் போட்டு கடும் கிண்டல் செய்து வருகின்றனர்.

மேலும் சிலர் 2011 உலகக்கோப்பையில் முக்கியமான கட்டத்தில் முனாப் படேலிடம் ஆட்டமிழந்ததையும் சுட்டிக்காட்டி கேலி செய்து வருகின்றனர்.

அப்துல் ரசாக் மீது எழுந்த கிண்டல்களில் ஒரு சில இதோ:

“உலகின் சிறந்த பவுலர் அப்துல் ரசாக்தான் போங்கள்”

”2011 உலகக்கோப்பையில் 116 கிமீ வேகம் வீசிய முனாப் படேலிடம் ரசாக் அவுட் ஆனார்”

“உங்களுக்கு கிரிக்கெட்டில்தான் எந்த விருதும் கிடைக்கவில்லை, அதனால் ’ஆண்டின் சிறந்த ஜோக்’ விருதை பெற விரும்புகிறீர்களா?”

இன்னொரு ட்விட்டர்வாசி, என்ன மெக்ராவை ஆடியிருக்கிறீர்களா, டெஸ்ட்டில் மெக்ராவுக்கு எதிராக ரசாக்கின் சராசரி 10 என்றும் ஒருநாள் போட்டியில் 13 என்றும் இன்னொருவர் கலாய்த்துள்ளார்.

இன்னொரு வலைவாசி, “ரசாக் உங்கள் சராசரியே மொத்தம் அனைத்து வடிவங்களிலும் 30க்குக் கீழ்தான், நீங்கள் பும்ராவை அடித்து ஆடுவீர்களா?” என்று கேட்டுள்ளார்.

இவ்வாறு நுணலும் தன் வாயால் கெடும் என்பதற்கு அப்துல் ரசாக் உதாரணமாகியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x