Published : 05 Dec 2019 08:45 AM
Last Updated : 05 Dec 2019 08:45 AM

ஆஸி. அடித்தது 401 ரன்கள், இங்கிலாந்து எடுத்ததோ 174 ரன்கள், இங்கிலாந்தின் அதிசய வெற்றி எப்படி? : அதுதான் பாப் விலிஸ்

மறைந்த பாப் விலிஸின் கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் பல பயங்கர பந்து வீச்சுகளை வீசியிருக்கலாம் ஆனாலும் மனதில் பதிந்த பந்து வீச்சு என்றால் அது 1981ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தை சாத்தியமேயில்லாத ஒரு வெற்றிக்கு பாப் விலிஸ் இட்டுச் சென்றதே. மறக்க முடியுமா அந்த நாளை? ஹெடிங்லே டெஸ்ட் போட்டி இன்றும் இங்கிலாந்து ரசிகர்கள் மட்டுமல்ல, வானொலியில் பிபிசி வர்ணனையில் கேட்டு ரசித்த இந்திய ரசிகர்களாலும் மறக்க முடியாத ஒரு டெஸ்ட் போட்டியாகும் அது.

எப்படி ஆஸ்திரேலியா கொல்கத்தாவில் 2001-ல் இந்தியாவுக்கு பாலோ ஆன் கொடுத்து தோல்வி கண்டதோ அதே போல் இந்த டெஸ்டெ போட்டியிலும் கிம் ஹியூஸ் இங்கிலாந்துக்கு பாலோ ஆன் கொடுத்தார் ஆனால் போத்தமின் ஒரு அரக்க பேட்டிங் இன்னிங்ஸினாலும் பாப் விலிஸின் அதை விடவும் அரக்க பந்துவீச்சிலும் ஆஸ்திரேலியா மண்ணைக் கவ்வியது. சற்றும் எதிர்பாராத அதிசய வெற்றி இங்கிலாந்துக்கு, ஆஸி.க்கோ திகைக்கவைத்த தோல்வி. இதிலிருந்து மீள ஆஸ்திரேலிய அணிக்கு சிலகாலம் தேவைப்பட்டது.

ஆஸ்திரேலிய அணிக்கு கிம் ஹியூஸ் கேப்டன், இங்கிலாந்து அணிக்கு மைக் பிரியர்லி கேப்டன். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 401/9 டிக்ளேர். தொடக்க வீரர் ஜான் டைசன் 102, கேப்டன் கிம் ஹியூஸ் 89. இயன் போத்தம் 6 விக்கெட்டுகள், பாப் விலிஸ் விக்கெட் இல்லை.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி பாய்காட், கூச், கேட்டிங், கோவர், போத்தம், பாப் டெய்லர் போன்ற ஜாம்பவான்கள் இருந்தும் டெனிஸ் லில்லி, டெரி ஆல்டர்மேன், ஜெஃப் லாசன் ஆகியோரது ஆக்ரோஷத்துக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் 174 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பாலோ ஆன் ஆடிய இங்கிலாந்து மீண்டும் சரிவுக்குள்ளாகி 135/7 என்று படுகேவலமான தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போதுதான் இங்கிலாந்தின் மீட்பர் இயன் போத்தம் ஆடிய ஒரு அதிரடி இன்னிங்ஸ் இன்று வரை டெஸ்ட் போட்டிகளில் யாரும் எண்ணத் துணியாத ஒரு அசாத்தியமான இன்னிங்ஸ் ஆகும் அது, கபில்தேவின் 175 ரன்களுக்கு இணையானது.

148 பந்துகளில் 27 பவுண்டரிகள் 1 சிக்சர் அடங்கிய 149 ரன்களை எடுத்தார் இயன் போத்தம், அவருக்கு உறுதுணையாக கிரகாம் டில்லே 56 ரன்களையும் கிறிஸ் ஓல்ட் 29 ரன்களையும் எடுக்க 135/7-லிருந்து 356 ரன்களை எட்டியது இங்கிலாந்து, ஒரே ஓவரில் டெனிஸ் லில்லியை 26 ரன்கள் விளாசினார் இயன் போத்தம்.

இந்த இன்னிங்சுக்குப் பிறகும் இங்கிலாந்து பாதுகாப்பில் இல்லை, காரணம் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்கு வெறும் 130 ரன்களே. ஆஸ்திரேலிய அணி கிரேம் உட் விக்கெட்டை 10 ரன்களில் போத்தமிடம் பறிகொடுத்து 13/1 என்ற நிலையிலிருந்து 56/1 என்று வெற்றியை நோக்கி பயணித்த போதுதான் வேகப்பந்து வீச்சின் மைல்கல் பந்து வீச்சு என்று வர்ணிக்கும் பாப் விலிஸின் அந்தப் பந்து வீச்சு நடந்தேறியது. கேப்டன் கிம் ஹியூஸ், கிரகாம் யாலப், ஆலன் பார்டர் டக் அவுட் ஆகி பாப் விலிஸின் ஆக்ரோஷத்திற்கு இரையாகினர். அடுத்த 55 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா, 36.1 ஓவரில் 111 ரன்களுக்குச் சுருண்டு அதிர்ச்சித் தோல்வி கண்டது.

பாப் விலிஸ் 15.1 ஓவர் 3 மெய்டன் 43 ரன்களுக்கு 8 விக்கெட். எகிறு பந்து வீச்சுடன் ஸ்விங்கையும் கலக்கும் வித்தையை அவர் அன்று ஆஸ்திரேலியாவுக்குக் காட்டி விட்டார். இந்தத் தோல்வியிலிருந்து மீள ஆஸ்திரேலியாவுக்கு சிலகாலம் பிடித்தது.

பாப் விலிஸின் இந்தப் பந்து வீச்சுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைக்கவில்லை, ஆனால் இந்தப் பந்து வீச்சுக்கு வாய்ப்பளித்த இயன் போத்தம் ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார், மறக்க முடியாத இந்த ஹெடிங்லே டெஸ்ட் போட்டிதான் இன்றும் பாப் விலிஸ் பற்றி நம்மை வியந்து வியந்து பேச வைக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x