

இங்கிலாந்து முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய வர்ணனையாளருமான பாப் விலிஸ் காலமானார். இவருக்கு வயது 70.
உடல் நலக்குறைவு காரணமாக அவர் இறந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இங்கிலாந்துக்காக 90 டெஸ்ட் போட்டிகள் 64 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பாப் விலிஸ் ஆடியுள்ளார். 1971-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்காக அறிமுகமான பாப் விலிஸ் 1984ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
இரண்டு முழங்கால்களிலும் அறுவை சிகிச்சை நடந்த பின்பும் தன் வேகத்தைக் குறைக்காமல் வலியுடனேயே வீசினார் பாப் விலிஸ். 325 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், இயன் போத்தமுக்குப் பிறகு 4வது இடத்தில் உள்ள இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பாப் விலிஸ்.
1981 ஆஷஸ் தொடர் பாப் விலிஸின் ஆக்ரோஷ திறமைகளை அரங்கேற்றிய தொடராகும், ஹெடிங்லீ டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் 43 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பாப் விலிஸ். இந்தப் பந்து வீச்சு இங்கிலாந்து ரசிகர்கள், பண்டிதர்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற ஒரு ஆட்டமாகும்.
பந்து உள்ள வலது கையை பின்பக்கமாகவும் முன் பக்கமாகவும் ஆட்டி ஆட்டி நீண்ட தூரம் ஓடி வந்து பந்தை குத்தி அளவுக்கு அதிகமாக எழுப்பும் பவுலர் ஆவார் பாப் விலிஸ். இவர் கிறிஸ் ஓல்ட், பால் ஆலட் ஒரு காலத்தில் இங்கிலாந்தின் அச்சுறுத்தும் வேகப்பந்து வீச்சு கூட்டணியாவார்கள்.
மே.இ.தீவுகளுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் ஆண்டி ராபர்ஸ்ட் வேகப்பந்து வீச்சு என்றால் என்னவென்று இங்கிலாந்து பேட்ஸ்மென்களுக்குக் காட்டினார் என்றால் வேகப்பந்து வீச்சை விளையாடியே பழக்கப்பட்ட மே.இ.தீவுகளின் வலுவான பேட்டிங் வரிசைக்கு தன் பங்குக்கு வேகப்பந்து வீச்சின் எல்லையைத் தொட்டுக்காட்டிய பாப் விலிசை மறக்க முடியுமா?
வர்ணனையிலும், பத்தி எழுத்திலும் பேட்டிகளிலும் இங்கிலாந்து மோசமாக ஆடும் போது கடும் விமர்சனங்களை தயங்காமல் முன் வைத்தவர். நாசர் ஹுசைனின் பேட்டிங் தோல்விகளைக் கடுமையாக விமர்சித்தவர் பாப் விலிஸ். இதனையடுத்து இந்தியாவுக்கு எதிராக முத்தரப்பு தொடர் இறுதியில் சதம் அடித்த நாசர் ஹுசைன், தன் மட்டையை பாப்விலிஸ், இயன் போத்தம், ஜொனாதன் ஆக்னியு ஆகியோர் அமர்ந்திருந்த வர்ணனை பாக்சை நோக்கி ஆட்டியதையும் மறக்க முடியாது.
எத்தனையோ அற்புதமான டெஸ்ட் தருணங்களையும் வர்ணனையில் கிரிக்கெட் நுணுக்கங்களையும் கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு கற்றுத் தந்த பாப் விலிஸ் இன்று நம்மிடையே இல்லை.