Last Updated : 03 Dec, 2019 09:51 PM

 

Published : 03 Dec 2019 09:51 PM
Last Updated : 03 Dec 2019 09:51 PM

மறக்க முடியுமா இந்த நாளை? பவுலர்களின் காட்ஃபாதர் நிகழ்த்திய சாதனை; இதுவரை முறியடிக்க முடியாத அதிசயம்

அவர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர்...

களத்தில் ஒழுக்கம், எதிரணி வீரர்களிடம் நல்ல நட்பு, உதாரணமான பந்துவீச்சு என ஜென்டில்மேன் விளையாட்டான கிரிக்கெட்டில் கடைசி வரை ஜென்டில்மேனாக இருந்து ஓய்வு பெற்றார்.

அவரைப் பற்றி கள உதாரணம் சொல்ல வேண்டுமானால் 1987-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் முக்கியமான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் ஜாபரை மன்கட் அவுட் செய்திருந்தால் மே.இ.தீவுகள் பிரதான சுற்றுக்குள் சென்றிருக்கும்.

ஆனால், முக்கிய கடைசி ஓவரில் ஜாபர் கரீஸை விட்டு வெளியே வந்ததைப் பார்த்தும் மன்கட் அவுட் செய்யாமல் எச்சரித்தது அனுப்பி ஜென்டில்மேன் என அவர் கிரிக்கெட் உலகிற்கு நிரூபித்தார். அந்தப் போட்டியில் பாகிஸ்தான் வென்று பிரதான சுற்றுக்குள் சென்றது, அவர் மன்கட் அவுட் செய்யத் தவறியதால், மே.இ.தீவுகள் லீக் சுற்றோடு வெளியேறியது.

அவர் நினைத்திருந்தால் மன்கட் அவுட் செய்து மே.இ.தீவுகள் அணியை அடுத்த சுற்றுக்கு அழைத்துச் சென்றிருக்க முடியும். ஆனால், கிரிக்கெட் போட்டிக்கென்று இருக்கும் வகுக்கப்படாத மரபுகளை, நெறிகளை மிகவும் கடைப்பிடித்ததாலேயே இன்றும் பந்துவீச்சாளர்களின் காட் ஃபாதர் என்று அழைக்கப்படுகிறார்.

இப்போது யாரென்று புரிந்திருக்கும்... ஆம் அவர்தான் கோர்ட்னி வால்ஷ்.

1984 முதல் 2000 ஆண்டு வரை கிரிக்கெட் உலகைத் தனது அசுரத்தனமான பந்துவீச்சால் மிரள வைத்தவர். கடந்த 1986-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி இலங்கை அணிக்கு எதிராக ஷார்ஜா கோப்பையில் வால்ஷ் நிகழ்த்திய இந்த சாதனையை இதுவரை உலகில் எந்தப் பந்துவீச்சாளரும் முறியடிக்கவில்லை.

இலங்கைக்கு எதிராக பந்து வீசிய கோர்ட்னி வால்ஷ் 4.3 ஓவர்கள் வீசி 3 மெய்டன்கள் எடுத்து ஒரு ரன் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதாவது ஒரு ரன்னுக்கு 5 விக்கெட் வீழ்த்திய வால்ஷின் சாதனை இன்றளவும் எந்த நாட்டுப் பந்துவீச்சாளராலும் முறியடிக்கப்படவில்லை.

இன்றுதான் வால்ஷ் சாதனை நிகழ்த்திய நாள். இதை மறக்க முடியுமா?

கோர்ட்னி வால்ஷ் குறிப்பிடும்போது மற்றொரு பந்துவீச்சாளரான கர்ட்லி ஆம்புரோஸைத் தொடாமல் இருக்க முடியாது. கடந்த 1980களிலும், 1990களிலும் இந்த இருவரும் உலக அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து தனி ராஜ்ஜியத்தை நடத்தினார்கள். இருவரும் சேர்ந்து 421 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள் என்பது தனிக்கதை.

ஓ.கே. விஷயத்துக்கு வருவோம்...

ஷார்ஜாவில் கடந்த 1986-ம் ஆண்டு சாம்பியன்ஷ் டிராபி போட்டி நடந்தது. டிசம்பர் 3-ம் தேதி இலங்கை மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையே இந்த ஆட்டம் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீவுகள் அணி 45 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் சேர்த்தது.

அந்தக் காலகட்டத்தில் மே.இ.தீவுகள் அணி பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் உலக அணிகளை மிரட்டியது. இப்போது இருக்கும் சொத்தை வீரர்கள் போல் அல்ல.

அதிரடியாக ஆடிய ரிச்சார்ட்ஸன் சதம் அடித்து 109 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கிரினீட்ஜ் 67 ரன்களில் வெளியேறினார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 132 ரன்கள் என்ற வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
அடுத்து வந்த நம்பிக்கை நாயகன் ரிச்சார்ட்ஸ் 39, ஹார்பர் 15 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அடுத்ததாக 249 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆனால் மே.இ.தீவுகள் அணியில் உள்ள பந்துவீச்சாளர்கள் உலக அணிகளை உருட்டி எடுக்கும்போது இலங்கை அணி நிலைமை என்னாகும்?

இலங்கை அணியில் அப்போது ரணதுங்கா, அரவிந்த் டி சில்வா, குருசிங்கே, திலகரத்னே, மகானாமா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தும் மே.இ.தீவுகள் அணியின் அசுரத்தனமான பந்துவீச்சு முன் நிற்க முடியவில்லை.

அதிலும் மால்கம் மார்ஷல், பெஞ்சமின் பந்துவீச்சில் பவுன்ஸரை தவறாகக் கணித்து அடிக்க முற்படும் பேட்ஸ்மேன்களின் கன்னம் காணாமல் போகும். வால்ஷ் அறிமுகமாகி ஒரு ஆண்டு நிறைவடைந்து இருந்ததால், பந்துவீச்சில் துடிப்பு, துள்ளல், துல்லியம், மிரட்டல் இருந்தது.

மார்ஷல், கிரே, பெஞ்சமின், வால்ஷ் என 4 வேகப்பந்து வீச்சாளர்களின் பந்தும் மின்னல் வேகத்தில் களத்தில் பாய்ந்தது. இலங்கை வீரர்கள் சீட்டுக்கட்டுபோல் சரிந்து வெளியேறினர்.

அதிலும் கடைசி 5 விக்கெட்டுகளும் வால்ஷின் பந்துவீச்சுக்கு இரையாகின.

அந்தப் போட்டியில் மகானாமா 13 ரன்களும், குருசிங்கே 19 ரன்களும்தான் இரட்டை இலக்க ரன்கள். மற்ற வீரர்கள் அனைவருமே ஒரு ரன், 2 ரன், டக் அவுட் என ஒற்றைப்படை ரன்னில் வருவதும் போவதுமாக இருந்தார்கள்.

28 ஓவர்கள் வரைதான் தாக்குப் பிடித்த இலங்கை அணி 55 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்களில் படுதோல்வி அடைந்தது.

மே.இ.தீவுகள் அணி தரப்பில் மிரட்டலாகப் பந்துவீசிய வால்ஷ் 4.3 ஓவர்கள் வீசி 3 மெய்டன்கள் எடுத்து ஒரு ரன் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

இலங்கை அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 4-0 என்று மே.இ.தீவுகள் அணி கைப்பற்றியது.

ஒருநாள் கிரிக்கெட் உலகில் இதுவரை கோர்னி வால்ஷ் வைத்துள்ள ஒரு ரன்னுக்கு 5 விக்கெட் சாதனையை எந்த நாட்டு வீரரும் இதுவரை சமன் செய்யவில்லை. அதுமுறியடிக்க முடியாமல் இருந்து வருகிறது.

அதேபோல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் வால்ஷ் வித்தியாசமான சாதனையையும் வைத்துள்ளார். என்ன என்று கேட்கிறீர்களா? டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான முறை டக் அவுட்டில் அதாவது 43 முறை டக் அவுட்டில் ஆட்டமிழந்த ஒரே வீரர் வால்ஷ் மட்டும்தான்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக 500 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் வால்ஷ். இதில் 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வால்ஷ் 519 விக்கெட்டுளை வீழ்த்தியுள்ளார். இதில் 3 முறை பத்து விக்கெட்டுகள், 22 முறை 5 விக்கெட்டுகள் அடங்கும். 205 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வால்ஷ் 227 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x