

நேபாளத் தலைநகர் காத்மாண்டு நகரில் நடந்து வரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடந்த 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் ஒரு தங்கம் உள்பட 4 பதக்கங்களை வென்றனர்.
நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் 13-வது தெற்காசியப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவுகள், பூடான், நேபாளம் ஆகிய 7 நாடுகளின் வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
26 வகையான விளையாட்டுகளில் மொத்தம் 2,700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்தியா சார்பில் 15 விளையாட்டுப் பிரிவுகளில் 487 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள்.
காத்மாண்டு நகரில் உள்ள தசரத் அரங்கில் இன்று நடந்த 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர்கள் ஒரு தங்கம், ஒரு வெள்ளியையும், மகளிர் பிரிவில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
ஆடவர்களுக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் அஜய் குமார் சரோ பந்தயத் தொலைவை 3:54:18 வினாடிகளில் வந்து தங்கத்தைக் கைப்பற்றினார்.
2-வதாக இந்திய வீரர் அஜீத் குமார் 3:57:18 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். வெண்கலப் பதக்கத்தை நேபாள வீரர் தன்கா கார்கி 3:50:20 வினாடிகளில் வந்து வென்றார்
மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சந்தா 4:34:51 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தையும், இந்திய வீராங்கனை சித்ரா பாலக்கிஸ் 4:35:46 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். தங்கப் பதக்கத்தை இலங்கை வீராங்கனை உடா கபுரலாகே தட்டிச் சென்றார்.
இந்தியா இதுவரை 6 தங்கம், 11 வெள்ளி, 4 வெண்கலம் உள்பட 21 பதக்கங்களை வென்றுள்ளது. தற்போது போட்டி நடத்தும் நேபாளம் 28 பதக்கங்களுடன் முதலிடத்திலும் இந்தியா 2-வது இடத்திலும் உள்ளது.