

ஆயிரக்கணக்கான மக்களிடம் பணம் பெற்று வீடுகளை வழங்காமல் ஏமாற்றிய அமரப்பள்ளி குழுமத்துக்கு எதிரான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பட்டியலில் தோனியின் பெயரையும் சேர்க்க வேண்டும் என்று புகார்தாரர்கள் வலியுறுத்தினர்.
டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு கடந்த மாதம் 27-ம் தேதி அமரப்பள்ளி குழுமத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் அனில் குமார் சர்மா, குழும உறுப்பினர்கள் ஷிவ பிரியா, மோகித் குப்தா உள்ளிட்டோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. இந்த வழக்கில் தோனியின் பெயரையும் சேர்க்க வேண்டும் எனக் கூறி புகார்தாரர்கள் சார்பில் ரூபேஷ் குமார் சிங் மனு அளித்துள்ளார். இவர்கள் மீது ஐபிசி பிரிவு 406, 408, 420, 120பி ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து நிதியைப் பெற்ற அமரப்பள்ளி குழுமம் வீடு கட்டித் தருவதாக உறுதியளித்தது. ஆனால் குறித்த காலக்கெடுவுக்குள் வீடுகள் கட்டி முடிக்கப்படவில்லை. இதுகுறித்து பணம் செலுத்தியவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அமரப்பள்ளி குழுமம் முதல்தர குற்றத்தைச் செய்துள்ளது என்று காட்டமாகத் தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல், மத்திய அரசின் தேசிய கட்டுமானக் கழகம் கட்டிமுடிக்கப்படாமல் இருக்கும் வீடுகளைக் கட்டி முடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த அமரப்பள்ளி குழுமம் தொடர்பாகக் கணக்குத் தணிக்கையை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, அமரப்பள்ளி குழுமத்தின் பிராண்ட் தூதராக 6 ஆண்டுகள் இருந்தது தெரியவந்ததது.
இந்தக் குழுமத்தின் விளம்பரத்துக்காக தோனி நடித்துக் கொடுத்துள்ளார். இதற்காக தோனிக்கு ரூ.42 கோடி வழங்கியுள்ளனர். ஆனால், பெரும்பகுதி பங்குகளை வைத்திருக்கும் ரிதிஸ்போர்ட் நிறுவனம் மூலம்தான் தோனி விளம்பரத்தில் நடித்தார்.
இதில் விளம்பரத்தில் நடித்தமைக்காக அமரப்பள்ளி நிறுவனம் தங்களுக்கு விளம்பர நிலுவைத் தொகை தரவில்லை எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு நிலுவையில் இருக்கிறது.
இந்நிலையில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வட்டாரங்கள் கூறுகையில், "அமரப்பள்ளி குழுமம் தோனியின் பெயரையும் புகழையும் பயன்படுத்திதான் வாடிக்கையாளர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்துள்ளது. தோனியின் புகழ், பெயரைப் பார்த்துத்தான் மக்கள் பணத்தைச் செலுத்தியுள்ளார்கள்.
வீடு வாங்கும் ஆசையில் ஏராளமான மக்கள் ரூ.2,647 கோடி செலுத்தியுள்ளார்கள் என்று புகார்தாரர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பணம் வேறு பல வழிகளில் திருப்பி விடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தனர்.
புகார்தாரர்களில் ஒருவரான ரூபேஷ் குமார் சிங் நிருபர்களிடம் கூறுகையில், "அமரப்பள்ளி ஊழல் தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமரப்பள்ளி குழுமம் ஏராளமான திட்டங்களைத் தொடங்கி மக்களை ஏமாற்றிவிட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தக் குழுமத்துக்கு எதிரான புகாரில் தோனியின் பெயரையும் குறிப்பிட வேண்டும்" எனத் தெரிவித்தார்.