

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார்.
ஹாமில்டன் நகரில் நடை பெற்று வரும் இந்த டெஸ்டில் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 375 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டாம் லேதம் 105, மிட்செல் 73 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராடு 4, கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.
தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 269 ரன்களுக்கு 5 விக்கெட்கள் என்ற நிலையில் நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது. அபார மாக விளையாடிய கேப்டன் ஜோ ரூட் 412 பந்துகளில், 22 பவுண்டரிகளுடன் இரட்டை சதம் விளாசி னார். இதன் மூலம் நியூஸிலாந்து மண்ணில் இரட்டை சதம் விளாசிய முதல் வெளிநாட்டு கேப்டன் என்ற சாதனையை நிகழ்த்தினார் ஜோ ரூட்.
இதற்கு முன்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெயில் அதிகபட்சமாக 197 ரன்கள் சேர்த் திருந்தார். ஜோ ரூட்டுக்கு உறு துணையாக விளையாடிய போப் 75 ரன்னில், நெய்ல் வாக்னர் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 193 ரன்கள் சேர்த்திருந்தது.
சிறிது நேரத்தில் ஜோ ரூட்டை, மிட்செல் சாண்ட்னர் வெளியேற்றினார். 441 பந்துளை சந்தித்த ஜோ ரூட், ஒரு சிக்ஸர், 22 பவுண்டரிகளுடன் 226 ரன்கள் விளாசினார். தொடர்ந்து கிறிஸ் வோக்ஸ் (0), ஜோப்ரா ஆர்ச்சர் (8), ஸ்டூவர்ட் பிராடு (0) ஆகியோர் நெய்ல் வாக்னர் பந்தில் நடையை கட்ட இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 162.5 ஓவர்களில் 476 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
நியூஸிலாந்து தரப்பில் நெய்ல் வாக்னர் 5 விக்கெட்களை வீழ்த்தினார். 101 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 34 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்தது.
ஜீத் ராவல் 0, டாம் லேதம் 18 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் கேன் வில்லியம்சன் 37, ராஸ் டெய்லர் 31 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 5 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூஸிலாந்து அணி இன்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.