

கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கூடைப் பந்துப் போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்திய ராணுவ அணியும், பெண்கள் பிரிவில் சத்தீஸ்கர் அணியும் சாம்பியன் பட்டத்தை வென்றன.
ஆடவர் இறுதிப்போட்டியில் இந்திய ராணுவ அணி 6 புள்ளி கள் வித்தியாசத்தில் சென்னை ஐஓபி அணியை வீழ்த்தியது. இந்திய ராணுவ அணியின் கோபால்ராம் 17 புள்ளிகள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.
பெண்கள் பிரிவில் சத்தீஸ்கர் அணி 6 புள்ளிகள் வித்தியாசத்தில், கேரள மின்வாரிய அணியை வென்றது. சத்தீஸ்கர் அணியின் பூனம்சதுர்வேதி 48 புள்ளிகள் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
ஆண்கள் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்த இந்திய ராணுவ அணிக்கு ரூ. ஒரு லட்சம் மற்றும் பிஎஸ்ஜி சுழல் கோப்பை வழங்கப்பட்டது. ஐஓபி அணிக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
பெண்கள் பிரிவில் முதல் பரிசை வென்ற சத்தீஸ்கர் அணிக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப் சுழல் கோப் பை வழங்கப்பட்டது. கேரள மின்வாரிய அணிக்கு ரூ. 25 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
பிஎஸ்ஜி அறங்காவலர் எல்.கோபால கிருஷ்ணன், சி.ஆர்.ஐ. பம்ப் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் மற்றும் கோவை மாவட்ட கூடைபந்து கழகத் தலைவர் ஜி. செல்வராஜ், சீமா தலைவர் வி.லஷ்மிநாராயணசாமி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
பிஎஸ்ஜி விளையாட்டு சங்கத் தலைவர் ஆர்.ருத்ரமூர்த்தி, தமிழ் நாடு கூடைபந்து கழக தலைவர் தலைவர் சி. ராஜூசத்தியா, கோவை மாவட்ட கூடைப்பந்து கழக துணைச் செயலாளர் டி.பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.