Last Updated : 01 Dec, 2019 05:09 PM

 

Published : 01 Dec 2019 05:09 PM
Last Updated : 01 Dec 2019 05:09 PM

காற்றில் பறக்குமா லோதா பரிந்துரைகள்? உச்ச நீதிமன்றத்தின் அனுமதி கோர பிசிசிஐ பொதுக்குழு முடிவு; அமித் ஷா மகனுக்குப் புதிய பதவி

பிசிசிஐ நிர்வாகிகள் பதவியை முறைப்படுத்தி அளித்த ஓய்வு பெற்ற நீதிபதி லோதா குழுவின் பரிந்துரைகளை நீர்த்துப் போகச்செய்யும் விதத்தில் புதிய முடிவுகளை எடுத்து அதற்கு உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோர பிசிசிஐ பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையிலான குழு, பிசிசிஐ நிர்வாகத்துக்கு வருபவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும், எத்தனை ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டும் என்ற பரிந்துரைகளை அளித்தது. அந்தப் பரிந்துரைகளில் திருத்தம் செய்யப்பட்டு, பிசிசிஐ பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் டி20 போட்டியில் மேட்ச் பிக்ஸிங், ஸ்பாட் பிக்ஸிங் உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததையடுத்து, அதை விசாரிக்க நீதிபதி முத்கல் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. அவர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் பிசிசிஐ நிர்வாகத்தைச் சீரமைக்கவும், வெளிப்படையான நிர்வாகம் நடத்தவும் பரிந்துரைகளை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையில் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

நீதிபதி லோதா குழு, பிசிசிஐ நிர்வாகத்துக்கு யார் வர வேண்டும், தகுதிகள், எத்தனை ஆண்டுகள் பதவி வகிக்க வேண்டும் உள்பட பரிந்துரைகளை அளித்தது.

அதன்படி பிசிசிஐ தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர் பொருளாளர் பதவிக்கு வரும் நிர்வாகிகள் 70 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது. அமைச்சராகவோ அல்லது அரசுப் பதவியில் இருக்கக் கூடாது. 9 ஆண்டுகள் பிசிசிஐ நிர்வாகப் பொறுப்பில் இருந்திருக்கக் கூடாது என்று பரிந்துரைத்தது.

மேலும், ஒவ்வொரு நிர்வாகியும் 3 ஆண்டுகளுக்கு மேல் பதவிக்காலம் இருக்க வேண்டும். 2 முறை தொடர்ந்து பதவி வகித்தால் அடுத்து 3 ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் பொறுப்புக்கு வர முடியும். 3 முறைக்க மேல் பதவி வகித்தல் கூடாது. ஆர்டிஐ வரம்பில் பிசிசிஐ வர வேண்டும் எனப் பரிந்துரைகளை அளித்தது.

இந்தப் பரிந்துரைகளால் நாடு முழுவதும் மாநில அளவில் பிசிசிஐ அமைப்பில் இருந்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பதவி விலகினர்.

இந்நிலையில் பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல் நடந்து முடிந்து புதிய நிர்வாகம் பொறுப்புக்கு வந்துள்ளது. பிசிசிஐ தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பொறுப்பேற்ற பின் மும்பையில் இன்று முதல் முறையாக பிசிசிஐ அமைப்பின் 88-வது பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில்தான் லோதாவின் பரிந்துரைகளை, சீர்திருத்தங்களை மாற்றி அமைப்பது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்குப் பொதுக்குழுவும் ஒப்புதல் வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட லோதா குழு என்பதால் நீதிமன்ற அனுமதியில்லாமல் பரிந்துரைகளை மாற்றி அமைத்தால் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதால், உச்ச நீதிமன்றத்தின் அனுமதியைக் கோர உள்ளனர்.

இதன்படி தற்போது பிசிசிஐ மாநிலப் பொறுப்பு, பிசிசிஐ பொதுக்குழுவில் ஒரு நிர்வாகி 3 ஆண்டுகள் என்ற அடிப்படையில் 2 முறை பதவி இருந்தால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு எந்தவிதமான பதவியும் இல்லாமல் இருத்தல் வேண்டும். அதை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது பிசிசிஐ தலைவராக இருக்கும் கங்குலி கடந்த அக்டோபர் 23-ம் தேதி பதவி ஏற்றார், அடுத்த ஆண்டு அவர் பதவியில் இருந்து விலகிவிட வேண்டும். ஏற்கெனவே கொல்கத்தா பிசிசிஐ அமைப்பில் 6 ஆண்டுகள் தலைவராக இருந்துவிட்டால், 2024-ம் ஆண்டுவரை எந்தப் பதவிக்கும் கங்குலி வரக்கூடாது. இந்தப் பரிந்துரை மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா மகன் ஜெய் ஷாவுடன் பிசிசிஐ தலைவர் கங்குலி : படம்

இந்தப் பரிந்துரைக்கு உச்ச நீதிமன்றம் சம்மதம் வழங்கினால் உள்துறை அமைச்சர் அமித் ஷா மகனும் பிசிசிஐ செயலாளராக இருக்கும் ஜெய் ஷாவுக்கும் கூடுதல் ஆண்டுகள் பதவி கிடைக்கும். ஜெய் ஷாவின் பதவிக் காலமும் ஒரு ஆண்டில் முடிகிறது.

மேலும், பிசிசிஐ சார்பில் ஐசிசி கூட்டத்தில் பங்கேற்கும் பிரதிநிதியாக ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் ராகுல் ஜோரி பிசிசிஐ அமைப்பின் பிரதிநிதியாக இருந்தநிலையில், அவரை மாற்றிவிட்டு ஜெய் ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி ஐசிசி கூட்டம் உலகில் எங்கு நடந்தாலும், அங்கு பிசிசிஐ சார்பில் ஜெய்ஷா பங்கேற்பார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே கிரிக்கெட் ஆலோசனைக் குழுவைக் கலைத்துவிட்டு புதிய குழு அமைப்பது தொடர்பாக வரும் 3-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற பின் முடிவு எடுக்கலாம் என்று முடிவு பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x