Last Updated : 01 Dec, 2019 02:01 PM

 

Published : 01 Dec 2019 02:01 PM
Last Updated : 01 Dec 2019 02:01 PM

ஸ்டார்க் மிரட்டல் பந்துவீச்சு: பாலோ-ஆன் பெற்றது பாக்.; யாசிர் ஷா சதம்: மின்னொளியில் தாக்குப் பிடிப்பார்களா?

மிட்ஷெல் ஸ்ட்டார்க்கின் மிரட்டல் பந்துவீச்சால் அடிலெய்டில் நடந்து வரும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 302 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் பெற்றது.

பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் யாசிர் ஷா சதம் அடித்து 113 ரன்களில் ஆட்டமிழந்தார். பாபர் ஆஷம் 3 ரன்களில் சதத்தைத் தவறவிட்டு 97 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரைத் தவிர மற்ற வீரர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் விதத்தில் பேட் செய்யவில்லை.

ஆஸ்திரேலியா தரப்பில் மிரட்டலாகப் பந்து வீசிய மிட்ஷெல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 12-வது முறையாக ஸ்டார்க் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

சதத்தை நெருங்கிய பாபர் ஆஷத்தை, பவுன்ஸர் மூலம் காலி செய்து வெறுப்பின் உச்சத்துக்கு மிட்ஷெல் கொண்டு சென்றார். விலகிச் சென்ற பந்தை தேவையில்லாமல் தொட்டு, ஆட்டமிழந்துவிட்டோமே என்ற ஆதங்கத்தோடு பாபர் ஆஷம் வெளியேறினார்.

வார்னரின் 335 ரன்கள், லாபுசாங்கேவின் சதம் ஆகியவற்றால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 589 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. பாகிஸ்தான் 302 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. இதனால், 287 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி இருந்ததால், பாலோ ஆன் வழங்கியது ஆஸ்திரேலிய அணி.

முன்னதாக, நேற்றைய 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி, 6 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் சேர்த்திருந்தது. பாபர் ஆஷம் 43 ரன்களிலும், யாசிர் ஷா 4 ரன்னிலும் இன்றைய 3-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

நிதானமாக ஆடிய பாபர் ஆஷம் அரை சதம் அடித்தார். யாசிர் ஷா தனது முதலாவது டெஸ்ட் அரை சதத்தை நிறைவு செய்தார். சதத்தை நோக்கி பாபர் ஆஷம் நகர்ந்தார்.

மிட்ஷெல் ஸ்டார்க் வீசிய பவுன்ஸரைத் தேவையில்லாமல் தொட்டு விக்கெட் கீப்பர் பைனிடம் கேட்ச் கொடுத்து பாபர் ஆசம் 97 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் 7-வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தனர்.

பிரிஸ்பேன் போட்டியில் சதம் அடித்த பாபர் ஆஷம் இந்த போட்டியிலும் சதம் அடிக்க முற்பட்டு 3 ரன்னில் கோட்டைவிட்டார்.

அடுத்து வந்த ஷாகீன் அப்ரிடி கால்காப்பில் வாங்கி வெளியேறினார். இதனால் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த ஸ்டார்கிற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்பாஸ் தடுத்து விளையாடியதால் முடியவில்லை.

8-வது விக்கெட்டுக்கு அப்பாஸ், யாசிர் ஷா ஓரளவுக்கு ரன்கள் சேர்த்தனர். அப்பாஸ் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய யாசிர் ஷா டெஸ்ட் அரங்கில் தனது முதலாவது சதத்தை 192 பந்துகளில் பதிவு செய்தார். 43 ரன்கள் சேர்த்திருந்தபோது நாதன் லயான் வீசிய பந்தில் லாபுசாங்கே கேட்சை தவறவிட்டதற்கு தண்டனையாக ஷா சதம் அடித்தார். கம்மின்ஸ் பந்துவீச்சில் 113 ரன்னில் யாசிர் ஷா ஆட்டமிழந்தார்.

94.4 ஓவர்களில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 302 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பாலோ-ஆன் பெற்று 287 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்ஸை பாகிஸ்தான் அணி ஆடி வருகிறது. பகலிரவு ஆட்டத்தில் நண்பகல் நேரத்தை பாகிஸ்தான் கடத்திவிட்டது. ஆனால், மின்னொளியில் நடக்கும் பாதி ஆட்டத்தைக் கடத்துவதுதான் அந்த அணிக்கு மிகப்பெரிய சிரமமாக இருக்கும்.

ஏனென்றால் மாலை நேரத்தில் காற்றின் ஈரப்பதத்தால் பந்துகள் வேகமாகவும், அதேசமயம், மின்னொளியில் பிங்க் பந்தை எதிர்கொண்டு ஆடுவதும் பெரும் சிரமமாக இருக்கும். இதனால், மின்னொளியில் பாகிஸ்தான் தாக்குப்பிடித்து ஆடுவது கடினமாகத்தான் இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x