Last Updated : 30 Nov, 2019 05:53 PM

 

Published : 30 Nov 2019 05:53 PM
Last Updated : 30 Nov 2019 05:53 PM

மறக்க முடியுமா இந்த நாளை: 'கிரிக்கெட் பிதாமகனின் அறிமுகம்'; அடுத்த போட்டியிலேயே அணியிலிருந்து நீக்கம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாராலும் தொடமுடியாத இடத்தில் தனது சாதனையை வைத்துள்ளவர், கிரிக்கெட் விளையாடும் பல ஜாம்பவான்களின் ஆதர்ஷ நாயகன், கிரிக்கெட்டின் பிதாமகன் என்று வர்ணிக்கப்படுபவர் டொனால்ட் பிராட் மேன்.

ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள கூட்டமுந்தரா நகரில் கடந்த 1908-ம் ஆண்டு, ஆகஸ்ட் 27-ம் தேதி பிறந்தவர் டொனால்ட் பிராட்மேன். அதன்பின் அங்கிருந்து சிட்னி நகருக்கு இடம் பெயர்ந்து கிரிக்கெட் விளையாடிப் பழகி ஆஸ்திரேலிய அணியில் பிராட்மேன் இடம் பெற்றார்.

டெஸ்ட் போட்டிகளில் டான் பிராட்மேன் வைத்துள்ள சராசரியை இதுவரை எந்தநாட்டு பேட்ஸ்மேன்களும் முறியடிக்கவில்லை. 20 ஆண்டுகள் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய பிராட்மேன் 52 டெஸ்ட் போட்டிகளில் 6 ஆயிரத்து 996 ரன்கள் சேர்த்து தனது சராசரியை 99.94 என வைத்துள்ளார். இவரின் 20 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் 29 சதங்கள் அடங்கும்.
சாதனைகளை பலர் முறியடித்தி்ருக்கலாம் அது காலமாற்றம். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் பிராட்மேன் வைத்துள்ள சராசரியை இதுவரை எந்த வீரரும் நெருங்கக் கூடமுடியவில்லை என்பது மாற்றம் ஒன்றே மாறாதது என்பதையே கேள்விக்குள்ளாக்குகிறது.

பல கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதர்ஷ நாயகனாக இருந்துவரும் டான் பிராட்மேன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்றுதான் அறிமுகமான நாள். வேடிக்கை என்னவென்றால் பிராட்மேன் அறிமுகமானபின் அடுத்தபோட்டியிலேயே அவரை நீக்கியது ஆஸ்திரேலிய அணி என்றால் நம்ப முடிகிறதா....... பார்க்கலாம்..

கடந்த 1928-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடருக்காக ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டது. இரு அணிகளும் இன்றுவரை கவுரவம் மிக்க தொடராகவும், பாரம்பரியத்தை காக்கும் தொடராகவும் ஆஷஸ் இருந்து வருகிறது. அந்த பெருமை மிகு தொடரில்தான் பிராட்மேன் அறிமுகமாகினார்.

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பிரிஸ்பேனில் நடந்தது. பிராட்மேனின் மீது அதிக அளவு நம்பிக்கை வைக்காத ஆஸ்திரேலிய அணி அவரை தொடக்க வீரராக களமிறக்கவில்லை. மாறாக, முதல் இன்னிங்ஸில் 7-வது இடத்திலும், 2-வது இன்னிங்ஸில் 6-வது இடத்திலும் பிராட்மேன் களமிறக்கப்பட்டார்.

மிகுந்த எதிர்பார்ப்போடும், கிரிக்கெட் கனவுகளோடும் களமிறங்கிய பிராட்மேனுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. முதல் இன்னிங்ஸில் 18 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து 19 ரன்களுடன் பிராட்மேன் வந்தார். பிராட்மேனை மீது நம்பிக்கை வைத்திருந்த அணி நிர்வாகத்துக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 678 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது

2-வது டெஸ்ட் போட்டியில் சாதித்துவிட வேண்டும் என்ற துடிப்புடன், ஊக்கத்துடன் பிராட்மேன் பயிற்சியில் ஈடுபட்டார். டிசம்பர் 14 முதல் 20-ம் தேதி வரை நடந்த அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. ஆனால், மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த பிராட்மேன் 2-வது போட்டியில் திடீரென்று நீக்கப்பட்டார். பிராட்மேன் யூ சிட் ஹியர் என்ற குரலை மட்டுமே கேட்டு பிராட்மேன் அதிர்ந்தார். விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் தன்னுடைய பெயர் இல்லாதது கண்டு உடையவில்லை நம்பிக்கையோடு காத்திருந்தார். தன்னை நிரூபிக்க வாய்ப்பை எதிர்நோக்கி இருந்தார். இந்த 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டில் வென்றது.

3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிசம்பர் 29-ம்தேதி நடந்தது. இதில் மீண்டும் பிராட்மேனுக்கு ஆஸ்திரேலிய அணியில் வாய்ப்பு கிடைத்தது. இந்த போட்டியில் அனைத்து ரசிகர்களையும், நிர்வாகத்தையும் தனது ஆட்டத் திறமையைால்திரும்பிப் பார்க்கவைத்தார் பிராட்மேன். தான் களமிறங்கிய 2-வது போட்டியில் முதல் இன்னிங்ஸில் 79 ரன்களையும், , 2-வது இன்னிங்ஸில் சதம் அடித்து 112 ரன்கள் சேர்த்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

ஆனாலும் அப்போது இருந்த இங்கிலாந்து அணியின் வல்லமையை எதிர்க்க முடியாத ஆஸ்திரேலிய அணி தோற்றது. 3 விக்கெட்டில் இங்கிலாந்து அணி வென்றது.

4-வது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு பெற்ற பிராட்மேன் முதல் இன்னிங்ஸில் 40 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 58 ரன்களும் சேர்த்தார். 5-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய பிராட்மேன் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து 123 ரன்களில் ஆட்டமிழந்தார், 2-வது இன்னிங்ஸில் 37 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-4 என்ற கணக்கில் தொடரை இழந்தாலும், டான் பிராட்மேன் என்ற இளம் வீரரை கண்டறிய முடிந்தது. அதன்பின் பிராட்மேனின் வளர்ச்சியும்,பேட்டிங் திறமையும் உலகளவில் ரசிக்கப்பட்டது.

கடந்த 1948-ம் ஆண்டு ஓவலில் நடந்த டெஸ்ட் போட்டியில் பிராட் மேன் விளையாடியபோது, அவரின் டெஸ்ட் சராசரியை 100 சதவீதம் என்று உயர்த்திக்கொள்ள 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அவர் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். அந்த டெஸட் போட்டியோடு அவர் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். 338 முதல் தர போட்டிகளில் பங்கேற்றுள்ள பிராட்மேன், 28 ஆயிரத்து 67 ரன்கள் குவித்து, 95.14 சராசரி வைத்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் 99.94 சராசரி வைத்துள்ள பிராட்மேனின் சாதனை இதுவரை எந்த வீரராலும் முறியடிக்கமுடியவில்லை.

பிராட்மேன் மறைந்து 8 ஆண்டுகளுக்குப்பின் 2009-ம் ஆண்டு ஐசிசி கிரிக்கெட் ஹால் ஆப் பேமில் இடம் பெற்றார், மேலும், நைட்வுட் விருது வழங்கப்பட்ட முதல் ஆஸ்திரேலிய வீரரும் பிராட்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x