Last Updated : 30 Nov, 2019 04:00 PM

 

Published : 30 Nov 2019 04:00 PM
Last Updated : 30 Nov 2019 04:00 PM

தோனியின் எதிர்காலம் என்ன? -பிசிசிஐ தலைவர் கங்குலி பதில்

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் எம்.எஸ். தோனியின் எதிர்காலம் குறித்து முடிவு எடுப்பதற்கு போதுமான கால நேரம் இருக்கிறது, இன்னும் சில மாதங்களில் தெளிவாகிவிடும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார்

உலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக இருந்தே தோனியின் பேட்டிங் ஃபார்மில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தன. உலகக்கோப்பை போட்டியில் தோனியின் பேட்டிங்கில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக தோனியின் பேட்டிங், ரசிகர்களை வெறுப்பின் உச்சத்துக்குத் தள்ளியது. இதனால், உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி அரையிறுதியோடு வெளியேறிய நிலையில் தோனி ஓய்வு எடுக்கத் தொடங்கினார்.

மே.இ.தீவுகள் தொடர், தென் ஆப்பிரிக்கத் தொடர், வங்கதேசத் தொடர், நடைபெற உள்ள மே.இ.தீவுகள் தொடரிலும் தோனியின் பெயர் பரிசீலிக்கப்படவில்லை. இதனால் தோனி விரைவில் ஓய்வு பெற உள்ளாரா என்ற பேச்சு எழுந்தது.

ஆனால், அதுகுறித்து எந்தவிதமான கருத்தையும் தோனி தெரிவிக்கவில்லை. தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் பேசுகையில், ஓய்வு என்பது தோனியின் சொந்த முடிவு இதில் நாம் தலையிட முடியாது " எனத் தெரிவித்தார்

இந்த சூழலில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடந்த சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், " 2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டித் தொடர் முடிந்தபின் தோனியின் எதிர்காலம் குறித்த தெளிவான முடிவு கிடைத்துவிடும் " எனத் தெரிவித்திருந்தார்.

அதற்கு ஏற்றார்போல், மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் பங்கேற்க வந்திருந்த தோனியிடம் நிருபர்கள் ஓய்வு குறித்து கேட்டனர். அப்போது அவர் கூறுகையில், " ஜனவரிவரை என்னிடம் யாரும் எதுவும் கேட்காதீர்கள்" எனத் தெரிவித்துச்சென்றார்.

இந்நிலையில் கொல்கத்தாவில் நேற்று தனியார் நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி வந்திருந்தார். அப்போது அவரிடம், தோனியின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ என்ன முடிவு எடுத்துள்ளது என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு கங்குலி பதில் அளிக்கையில், " தோனியின் எதிர்காலம் குறித்து முடிவு எடுப்பதற்கு போதுமான அவகாசம், காலம் இருக்கிறது. இன்னும் 3 மாதங்களில் தோனியின் எதிர்காலம் குறித்த தெளிவான தகவல் எங்களுக்குக் கிடைத்துவிடும். தோனியின் எதிர்காலத்தை எவ்வாறு அணுகுவது குறித்து அணியின் நிர்வாகத்துக்கு நன்கு தெரியும்.

நாங்கள் தெளிவாக இருக்கிறோம். ஆனால், சில விஷயங்களை பொது வெளியில் நாம் பேச முடியாது. தோனி குறித்து முழுமையான தகவல் கிடைத்தவுடன், சரியான நேரத்தில் நீங்கள் அறிவீர்கள்.

பிசிசிஐ, தேர்வுக்குழுவினர், தோனி இடையை வெளிப்படைத்தன்மை இருக்கிறது. தோனி போன்ற சாம்பியன் வீரரை, உலகின் தலைசிறந்த, இந்தியாவின் கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்டவரை அணுகும்போது, சில ரகசியமாகத்தான் சில விஷயங்களை நாங்கள் வைத்திருக்க வேண்டும். மற்ற வகையில் வாரியம், தேர்வுக்குழுவின் நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x