

பாகிஸ்தான் அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தில் ஒரு விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் குவித்தது. அடிலெய்டில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் மாற்றமும் செய்யப்படவில்லை. மாறாக பாகிஸ்தான் அணியில் நசீம்ஷா, இம்ரான்கான் ஆகியோர் நீக்கப்பட்டு மொகமது அப்பாஸ், முகமது முஸா சேர்க்கப்பட்டனர்.
முகமது முஸாவுக்கு இது அறிமுக ஆட்டமாக அமைந்தது. பேட்டிங்கை தொடங்கிய ஆஸ் திரேலிய அணி முதல் விக்கெட்டை விரைவாக இழந்தது. ஜோ பர்ன்ஸ் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஷாஹீன்ஷா அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து டேவிட் வார்னருடன் இணைந்த மார்னஸ் லபுஷான் ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். எந்தவித தாக்கமும் இல்லாத பாகிஸ்தான் பந்து வீச்சை மீண்டும் ஒருமுறை இந்த ஜோடி வெளுத்து வாங்கியது.
டேவிட் வார்னர் 156 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் தனது 23-வது சதத்தையும், லபுஷான் 169 பந்துகளில், 14 பவுண்டரிகளுடன் தனது 2-வது சதத்தையும் விளாசினர். இவர்கள் இருவரும் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற பிரிஸ்பன் டெஸ்டிலும் சதம் விளாசியிருந்தனர்.
இந்த ஜோடியின் அபார ஆட்டத்தால் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 73 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர்
228 பந்துகளில், 19 பவுண்டரிகளுடன் 166 ரன்களும், லபுஷான் 205 பந்துகளில், 17 பவுண்டரிகளுடன் 126 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.