

ஆசிய வில்வித்தை சாம்பியன் ஷிப்பில் இந்தியாவின் தீபிகா குமாரி தங்கப் பதக்கமும், அங்கிதா பகத் வெள்ளிப் பதக்கமும் வென்று டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
21-வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் தாய்லாந்தில் உள்ள பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ரீகர்வ் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி சகநாட்டைச் சேர்ந்த அங்கிதா பகத்தை எதிர்த்து விளையாடினார். இதில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய தீபிகா குமாரி 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
2-வது இடம் பிடித்த அங்கிதா பகத் வெள்ளிப் பதக்கம் பெற்றார். முன்னதாக தீபிகா குமாரி 7-2 என்ற கணக்கில் மலேசியாவின் நூர் அஃபீசா அப்துல் ஹலிலையும், ஈரானின் ஸஹ்ரா நேமதியை 6-4 என்ற கணக்கிலும் தாய்லாந்தின் நரிசாரா குன்ஹிரஞ்சாயோவை 6-2 என்ற கணக்கிலும் வீழ்த்தி அரை இறுதியில் கால் பதித்திருந்தார்.
அரை இறுதியில் வியட் நாமின் குயட்டை 6-2 என்ற கணக்கில் வென்று இறுதி சுற்றில் நுழைந் திருந்தார். அதேவேளையில் அங்கிதா பகத், ஹாங் காங்கின் லாம் சுக் சிங் அடாவை 7-1 என்ற கணக்கிலும் வியட்நாமின் நுயென் தி பூங் 6-0 என்ற கணக்கிலும், கஜகஸ்தானின் அனஸ்தஸ்ஸியா பன்னோவாவை 6-4 என்ற கணக்கிலும், பூட்டானின் கர்மாவை 6-2 என்ற கணக்கிலும் வீழ்த்தி இறுதி சுற்றில் நுழைந்திருந்தார்.
இறுதி சுற்றில் விளையாடியதன் மூலம் தீபிகா குமாரியும், அங்கிதா பகத்தும் டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர்.