Last Updated : 28 Nov, 2019 08:35 PM

 

Published : 28 Nov 2019 08:35 PM
Last Updated : 28 Nov 2019 08:35 PM

மறக்கமுடியுமா இந்த நாளை: ஃபீல்டர்களின் காலம்; பந்துவீசாமல், பேட்டிங் செய்யாமல் அணியை வெல்ல வைத்து ஆட்ட நாயகன் விருது பெற்ற வீரர்

கிரிக்கெட்டின் எந்த பிரிவு (டி20,டெஸ்ட், ஒருநாள்) போட்டியாக இருந்தாலும் பேட்டிங்கில் நன்றாக ஸ்கோர் செய்தவருக்கும், துடிப்பாக பந்துவீசி முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியவருக்குமே ஆட்டநாயகன் விருது பெரும்பாலும வழங்கப்படுவது வழக்கம்.

கிரிக்கெட்டில் ஒருநேரத்தில் பேட்ஸ்மேன்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமே ஆட்டநாயகன் விருது கொடுத்து அலங்கரித்துப் பார்க்கப்பட்டது. பீல்டிங் செய்யும் பீல்டர்களுக்கு ஏதாவது ஒருபோட்டியில் அரிதினும் அரிதாகவே அவர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு வந்தது.

அனைத்தையும் நிறவெறித்தடைக்குப்பின் கிரி்க்கெட் விளையாட வந்தபின் தென் ஆப்பிரிக்க அணி மாற்றிக்காட்டியது. கிரிக்கெட் உலகம் சிறப்பாக பீல்டிங் செய்பவர்கள் பக்கமும் தனது கவனத்தை திருப்பியது. கடந்த 1992-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ஜான்டி ரோட்ஸ் ஒவ்வொரு போட்டியிலும் செய்த பீல்டிங்குகள், பிடித்த கேட்சுகள், ரன் அவுட்கள் இன்றும் ரசிகர்கள் கண்களில் படமாகத் தெரியும்.

ஜான்டி ரோட்ஸ்க்கு முன்பாக பல நல்ல பீல்டர்கள், கழுகுப்பார்வை கொண்டுபார்த்துக் கொண்டு பந்தை கவ்விக் கொண்டு வரும் பீல்டர்கள் இருந்தார்கள். குறிப்பாக ஜேக் ஹோப்ஸ், நீல் ஹார்வே, கோலின் பிளான்ட், டோனி லாக், ஆஷ்லே மாலட், டெரேக் ராண்டால் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

மேற்கிந்தியத்தீவுகள் அணியிலும் திறமைவாய்ந்த பீல்டர்கள் 1980கள் காலகட்டத்தில் இருந்தார்கள். லியாரே கான்ஸ்டாடைன், கேரி சோபர்ஸ், கிளைவ் லாயுடு, விவியன் ரிச்சார்ட்ஸ், ரோஜர் ஹார்ப்பர் ஆகியோரைக் குறிப்பிடலாம். அதில் குறிப்பிடத்தகுந்தவர்தான் மே.இதீவுகள் வீரர் கஸ் லோகே.

ஒரு அணியைச் சேர்ந்த வீரர் அணிக்காக விளையாடி பந்துவீசாமல், பேட்டிங் செய்யாமல் ஆட்டநாயகன் விருதை பெற்ற கதை தெரியுமா.கிரிக்கெட்டின் மறக்கமுடியாத அந்த நிகழ்வு அரங்கேறிய நிகழ்வு இன்று. ஆமாம், ஆட்டநாயகன் விருது பெற்ற வீரர் யார் . அந்த ஆட்டநாயகன் விருது பெறுவதற்கு காரணமாக இருந்த அந்த ஆட்டம் எங்கு எப்போது நடந்தது?. சிறிது ரீவைன்ட் செய்து பார்க்கலாம்....

மே.இ.தீவுகள் வீரர்கள் கஸ் லாகி

கடந்த 1986-ம் ஆண்டு, நவம்பர் 28-ம் தேதி ஷார்ஜாவில் மேற்கிந்தியத்தீவுகள், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில்தான் இந்த நிகழ்வு நடந்தது. மே.இ.தீவுகள் அணி வீரர் கஸ் லாகி என்ற வீரர்தான் பந்துவீசாமல் , பேட்டிங் செய்யாமல் பீல்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது வென்றார்.

சிறப்பாக பீல்டிங் செய்ததற்காக கஸ் லாகிக்கு அந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அந்த போட்டியில் மட்டும் 2 ரன்அவுட்களையும், 3 கேட்சுகளையும் பிடித்து ஏறக்குறைய பாகிஸ்தான் அணியின் 5 முக்கிய விக்கெட்டுகள் சரிய கஸ் லாகி முக்கியக் காரணமாக அமைந்தார் என்பதால் அந்த விருது வழங்கப்பட்டது

ஷார்ஜாவில் நடந்த இந்த போட்டியில் கஸ் லோகேயின் அற்புதமான ரன்அவுட்கள், சிறப்பு வாய்ந்த கேட்சுகள்தான் பாகிஸ்தானை மே.இ.தீவுகள் அணியால் எளிதாகச் சுருட்ட முடிந்து வெற்றியும் பெறமுடிந்தது.

அப்போது இருந்த பாகிஸ்தான் அணியை நிச்சயம் இப்போதுள்ள சொத்தை அணி அல்ல. பந்துவீச்சு, பேட்டிங்கில் எதிரணியை தண்ணி குடிக்கவைக்கும் வலிமையான அணியாகஇருந்தது. அந்த அணியில் முடாசர் நாசர், சலீம் மாலிக், ரமீஸ் ராசா, மியான்தத், இஜாஸ் அகமது, இம்ரான் கான், வாசிம் அக்ரம், சலீம்யூசுப் என வலிமையான பேட்ஸ்மேன்களும் பந்துவீச்சாளர்களும் இருந்த காலகட்டம்.

மே.இ.தீவுகள் வீரர்கள் கஸ் லாகி

மேற்கியத்தீவுகள் அணியும் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல. உலகக்கோப்பையை 2 முறை வென்று 3-வது முறையாக இறுதிப்போட்டிவரை சென்று வலிமையாக இருந்த. அந்த அணியில் அப்போது கிரீனிட்ஜ், கெயின்ஸ், ரிச்சார்ட்ஸன், ரிச்சார்ட்ஸ், கஸ் லாகி, துஜான், ஹார்ப்பர் என பேட்டிங்கிற்கு பட்டாளமே இருந்தது. பந்துவீச்சில் வால்ஷ், மார்ஷல், பெஞ்சமின், கிரே ஆகிய ஜாம்பவான்களும் இருந்த அற்புதமான காலம்

மேற்கிந்தியத்தீவுகள் அணியின் வலிமைக்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு பாகிஸ்தான் அணியிலும் பந்துவீச்சும், பேட்டிங்கும் அமைந்திருந்தது. ஆனால், அந்த போட்டியில் கஸ் லாகியின் முத்தாய்ப்பான 3 கேட்சுகளும், பீல்டிங்கும், எதிர்பாராத விதமாக அமைந்த 2 ரன் அவுட்களும்தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றின.

பாகிஸ்தான் பேட்டிங் வரிசையில் தூணாக இருந்த மியான்தத், ஆசிப் முஸ்தபாவை ரன் அவுட் செய்தார் கஸ் லோகி. அதேபோன்று, தொடக்கஆட்டக்காரர்கள் முடாசர் நாசர், சலீம் யூசுப், இஜாஸ் அகமது ஆகியோரையும் கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார் கஸ் லோகி.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 43.4 ஓவர்களில் 143 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் அணியில்அதிகபட்சமாக மியான்தத் 32 ரன்களும், ரமீஸ் ராசா 44 ரன்களும்சேர்த்தனர். மே.இ.தீவுகள் தரப்பில் வால்ஷ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

மே.இ.தீவுகள் வீரர்கள் கஸ் லாகி : சமீபத்திய படம்

144 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் புறப்பட்ட மே.இ.தீவுகள் அணி 33.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும்இழந்து 145 ரன்கள்சேர்த்து வெற்றி பெற்றது.

தொடக்க ஆட்டக்காரர் கிரீனிட்ஜ் 74 ரன்களில் ஆட்டமிழந்தார், ஹெயின்ஸ் 59 ரன்களிலும், ரிச்சார்ட்ஸன் 5 ரன்களிலும் கடைசி வரைஆட்டமிழக்காமல் இருந்தனர். தொடக்கஆட்டக்கார்ரகள் கெயின்ஸ், கிரீனிட்ஜ் முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்து வெற்றியைஏறக்குறைய உறுதி செய்தார்கள்.

இந்த போட்டியில் பேட்டிங் செய்யாமல், பந்துவீசாமல் 2 ரன்அவுட்கள், 3 கேட்சுகள் பிடித்த கஸ் லோகிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அந்த மறக்கமுடியாத நாள் இன்றுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x