உலக பாட்மிண்டன்: 3-வது சுற்றில் சாய்னா, ஸ்ரீகாந்த், பிரணாய்

உலக பாட்மிண்டன்: 3-வது சுற்றில் சாய்னா, ஸ்ரீகாந்த், பிரணாய்
Updated on
1 min read

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், ஸ்ரீகாந்த், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றான 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற 2-வது சுற்றில் சர்வதேச தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சாய்னா 21-13, 21-9 என்ற நேர் செட்களில் ஹாங்காங்கின் சியூங் கன் யீயை வீழ்த்தினார். சாய்னா தனது 3-வது சுற்றில் ஜப்பானின் சயாகாவை எதிர்கொள்கிறார்.

சர்வதேச தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்த் தனது 2-வது சுற்றில் 21-14, 21-15 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் சூ ஜென் ஹாவை தோற்கடித்தார். ஸ்ரீகாந்த் தனது 3-வது சுற்றில் ஹாங்காங்கின் ஹூ யூனை சந்திக்கிறார். அவருடன் இதுவரை 2 முறை மோதியுள்ள ஸ்ரீகாந்த், அந்த இரண்டிலும் வெற்றி கண்டுள்ளார்.

மற்றொரு 2-வது சுற்று ஆட்டத்தில் எச்.எஸ்.பிரணாய் 21-14, 21-19 என்ற நேர் செட்களில் உகாண்டாவின் எட்வின் எகிரிங்கை வீழ்த்தினார். பிரணாய் தனது அடுத்த சுற்றில் உலகின் 7-ம் நிலை வீரரான டென்மார்க்கின் விக்டர் ஆக்ஸெல்சென்னை சந்திக்கிறார். இதற்கு முன்னர் விக்டருடன் 2 முறை மோதியுள்ள பிரணாய், அந்த இரண்டிலும் தோற்றுள்ளார். எனவே அடுத்த சுற்றை தாண்ட பிரணாய் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவரான இந்தியாவின் காஷ்யப் தனது 2-வது சுற்றில் 21-17, 13-21, 18-21 என்ற செட் கணக்கில் வியட்நாமின் டியென் மின் குயனிடம் தோல்வி கண்டார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி 21-10, 21-18 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் சூயே சென்-ஊ டி ஜுங் ஜோடியை வீழ்த்தியது. இந்திய ஜோடி தங்களின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பானின் ரெய்க்கா காக்கிவா-மியூக்கி மேடா ஜோடியை சந்திக்கிறது.

மற்றொரு மகளிர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் பிரதன்யா காட்ரே-சிக்கி ரெட்டி ஜோடி தோல்வி கண்டது. ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் பிரணவ் சோப்ரா-அக் ஷய் தேவால்கர் ஜோடி தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in