

வங்கதேச கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சைப் ஹசன் தன்னுடைய விசா காலம் முடிந்த பின்பும் இந்தியாவில் தங்கி இருந்ததால், அவருக்கு மத்திய குடியேற்றத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
இதையடுத்து 21 ஆயிரத்து 600 ரூபாய் அபராதத்தைச் செலுத்திவிட்டு விமானம் மூலம் வங்கதேசத்துக்கு சைப் ஹசன் புறப்பட்டுச் சென்றார்.
இந்தியாவுக்கு வந்த வங்கதேச அணி 3 டி20 போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதற்காக அந்த நாட்டு அணி வீரர்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை சார்பில் விசா வழங்கப்பட்டு இருந்தது. டி20 தொடரில் 1-2 என்ற கணக்கிலும், டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கிலும் வங்கதேசம் அணி இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது.
இதையடுத்து தொடரை முடித்துக் கொண்டு வங்கதேச வீரர்கள் தங்களின் விசா காலம் முடிவதற்குள் அதாவது கடந்த திங்கள்கிழமையே தங்கள் நாட்டுக்குப் புறப்பட்டுவிட்டனர். ஆனால், சைப் பசன் மட்டும் கொல்கத்தாவில் தங்கி இருந்தார். சைப் ஹசனின் விசா காலம் முடிந்து இரு நாட்கள் கூடுதலாக கொல்கத்தாவில் தங்கி இருந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை கொல்கத்தா டம்டம் விமான நிலையத்தில் இருந்து வங்கதேசத்துக்கு விமானம் மூலம் செல்ல விமான நிலையத்துக்கு சைப் ஹசன் வந்தார். அவரின் விசாவைப் பார்த்த இந்திய குடியேற்ற அதிகாரிகள் விசா காலம் முடிந்த பின்பும் இந்தியாவில் கூடுதலாக 2 நாட்கள் தங்கி இ ருந்துள்ளீர்கள் என்று சைப் ஹசனிடம் கேள்வி எழுப்பி அவரைத் தடுத்தனர்.
இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள வங்கதேச நாட்டின் துணைத் தூதருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விமான நிலையத்துக்கு வந்த துணைத் தூதர் டோபிக் ஹசன், வங்கதேச வீரர் சைப் ஹசனை அபராதம் செலுத்தி விடுவித்து நாட்டுக்கு அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து வங்கதேச தூதரகத்தின் துணைத் தூதர் டோபிக் ஹசன் கூறுகையில், "சைப் ஹசனின் விசா காலம் 2 நாட்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. ஆனாலும், அவர் விமான டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை. புதிய விதிகளின் படி கூடுதலாக தங்கி இருந்த நாட்களுக்கு ரூ.21 ஆயிரத்து 600 செலுத்தி அதன்பின் கொல்கத்தாவில் இருந்து டாக்கா புறப்பட்டுச் சென்றார்" எனத் தெரிவித்தார்.
சைப் ஹசன் ஏற்கெனவே இந்தியா வந்திருந்தபோது, அவருக்கு 6 மாதங்கள் விசாவை மத்திய அரசு வழங்கி இருந்தது. ஆனால், அந்த விசா காலம் முடிந்தது தெரியாமல் அவர் கொல்கத்தாவில் தங்கி இருந்தபோதுதான் குடியேற்றத் துறை அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்டார்.