

இங்கிலாந்தில் கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்துக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓதுங்கியே இருக்கிறார். மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணம், தென் ஆப்பிரிக்கா, வங்கதேச அணிகளுக்கு எதிரான உள்நாட்டு தொடரில் அவர் கலந்து கொள்ளவில்லை.
அடுத்த மாதம் உள்நாட்டில் நடைபெற உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3 டி 20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் தோனி பங்கேற்கவில்லை. இதற்கிடையே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் டி 20 தொடருக்கு பிறகு தோனி தனது எதிர்கால கிரிக்கெட் குறித்து முடிவு செய்வார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் நேற்று முன்தினம் தெரிவித்தன.
இந்நிலையில் மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தோனியிடம், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடுப்பில் இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த தோனி, ஜனவரி மாதம் வரை என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம் என சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
-பிடிஐ