

திருமணத்துக்கு முன் எல்லோரும் சிங்கம்தான். ஆனால், 50 வயதுக்குப் பின்புதான் திருமணத்தின் உண்மையான அர்த்தம் தெரியவரும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கலகலப்பாகத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பாரத் மேட்ரிமோனி நிறுவனம் சார்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மகேந்திர சிங் தோனி நேற்று பங்கேற்றார். அப்போது அவரிடம் திருமண வாழ்க்கை குறித்துப் பேசுமாறு கேட்டுக்கொண்டனர். மிகவும் கலகலப்பாகவும் தோனி திருமண வாழ்க்கை குறித்துப் பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியதாவது
எனக்கும் சாக்ஷிக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இன்றுவரை வீட்டில் அவர்தான் அனைத்தையும் கவனிக்கிறார். அவருடைய நிர்வாகம் நடக்கிறது.
நான் ஒருபோதும் என் மனைவியின் செயலுக்கும், வழியிலும் இடையூறு செய்தது இல்லை. எனக்குத் தெரியும் என் மனைவி மகிழ்ச்சியாக இருந்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன். என் மனைவி சொல்லும் அனைத்தும் விஷயத்துக்கும், செய்யும் செயல் அனைத்துக்கும் நான் ஆம், சரி என்று சொன்னால் மட்டுமே அவர் மகிழ்ச்சியாக இருப்பார்.
அனைத்து ஆண்களும் திருமணத்துக்கு முன் சிங்கம் போல இருந்திருக்கலாம். ஆனால், திருமணத்துக்குப் பின் எல்லாம் மாறிவிடும். வயதான காலத்தில்தான் கணவருக்கும், மனைவிக்கும் இடையிலான உறவு பலமாகும்.
திருமணத்தின் உண்மையான தாத்பரியமே 50 வயதைக் கடந்த பின்தான் உணர முடியும். 55 வயதை அடையும்போது, அதுதான் காதலின் உண்மையான வயது என்று நான் கூற முடியும். உங்களுடைய அன்றாட வழக்கமான செயலில் இருந்து விலகிச் செல்ல முயல்வது அங்கிருந்துதான் தொடங்கும்".
இவ்வாறு தோனி தெரிவித்தார்.
உலகக்கோப்பை போட்டிக்குப் பின் எந்தவிதமான தொடரிலும் தோனி பங்கேற்றாமல் ஒதுங்கியே இருந்து வருகிறார். தோனி ஓய்வு அறிவிப்பாரா அல்லது தொடர்ந்து விளையாடுவாரா என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. ஆனால், 2020-ம் ஆண்டு நடக்கும் 13-வது ஐபிஎல் போட்டிக்குப் பின்புதான் தோனி தனது எதிர்காலத்தைப் பற்றி அறிவிப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.