

பிரீமியர் பாட்மிண்டன் லீக்கின் 5-வது சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி முதல் பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரில் அவாதே வாரியர்ஸ், பெங்களூரு ராப்டர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், ஹைதராபாத் ஹென்ட்டர்ஸ், சென்னை சூப்பர் ஸ்டார்ஸ், வட கிழக்கு வாரியர்ஸ், புனே செவன் ஏசஸ் ஆகிய 7 அணிகள் கலந்து கொள்கின்றன.
21 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரின் ஆட்டங்கள் பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், லக்னோ ஆகிய நகரங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 5-வது சீசனுக்கான ஏலம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ஹைதராபாத் ஹென்ட்டர்ஸ் அணி உலக சாம்பியனான பி.வி.சிந்துவை ரூ.77 லட்சத்துக்கு ஏலம் எடுத்து அவரை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது.
பலத்த போட்டிக்கிடையே உலகின் முதல் நிலை வீராங்கனையான சீன தைபேவின் டாய் ஸூ யிங்கை ரூ.77 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது நடப்பு சாம்பியனான பெங்களூரு ராப்டர்ஸ் அணி. இந்திய வீரரான சாய் பிரணீத்தை ரூ.32 லட்சத்துக்கு பெங்களூரு ராப்டர்ஸ் ஏலம் எடுத்தது. உலக தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனையான பெய்வன் ஹெங்கை ரூ.39 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது அவாதே வாரியர்ஸ்.
பிடிஐ