Last Updated : 26 Nov, 2019 05:37 PM

 

Published : 26 Nov 2019 05:37 PM
Last Updated : 26 Nov 2019 05:37 PM

தோனி எப்போது அணிக்குள் திரும்பி வருவார்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு: ஆசிய லெவனில் பங்கேற்கும் 7 வீரர்கள் யார்?

உலகக்கோப்பை போட்டிக்குப் பின் இந்திய அணிக்குள் தேர்வாகாமல் ஒதுங்கி இருந்துவரும் விக்கெட் கீப்பர் தோனி எப்போது மீண்டும் அணிக்குள் வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.

உலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக இருந்தே தோனியின் பேட்டிங் ஃபார்மில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவந்தன. அவரின் ஆட்டத்தில் துடிப்பில்லை, சூழலுக்குத் தகுந்த மாதிரி பேட் செய்வதில்லை என்ற காட்டமான வசைகள் சமூக வலைதளங்களில் எழுந்தன.

முன்னாள் வீரர்கள் கவாஸ்கர், மஞ்சரேக்கர், சேவாக் ஆகியோரும் தோனி பேட்டிங் செய்யும் விதத்தை மாற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். ஆனால், உலகக்கோப்பை போட்டியில் தோனியின் பேட்டிங்கில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஆப்கானிஸ்தான், இங்கிலாந்துஅணிகளுக்கு எதிராக தோனியின் பேட்டிங், ரசிகர்களை வெறுப்பின் உச்சத்துக்குத் தள்ளியது. இதனால், உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி அரையிறுதியோடு வெளியேறிய நிலையில் தோனி ஓய்வு எடுக்கத் தொடங்கினார்.

ராணுவத்தில் பயிற்சியில் ஈடுபட்ட தோனி, மேற்கிந்தியத் தீவுகள் செல்லும் இந்திய அணியில் தனது பெயரைப் பரிசீலிக்க வேண்டாம் என தேர்வுக்குழுவிடம் கேட்டுக்கொண்டார். அதன்பின் தென் ஆப்பிரிக்கத் தொடர், வங்கதேசத் தொடர், மேற்கிந்தியத் தீவுகள் தொடர் ஆகியவற்றிலும் தோனி தேர்வு செய்யப்படவில்லை.

இதனால் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு ஏதும் அறிவிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இதுகுறித்து எந்தவிதமான பதிலும் அளிக்கத் தேர்வுக்குழுவினர் மறுத்துவிட்டனர்.

இதற்கிடையே அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய அணி நியூஸிலாந்து சென்று முழுமையான தொடரில் விளையாடுகிறது. அதன்பின் 2020 ஜனவரி மாதம் உள்நாட்டில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுடன் தொடரில் விளையாடுகிறது. கடைசியாக மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்க அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

2020 ஐபிஎல் சீசனுக்கு முன்பாக இந்திய அணி விளையாடும் கடைசி ஒருநாள் தொடர் இதுவாகத்தான் இருக்க முடியும். ஆனால், இந்தத் தொடரில் தோனி தேர்வாவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தாலும் உறுதியில்லை. ஆனால், 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் வங்கதேசம் அணி தங்கள் நாட்டில் இரு டி20 போட்டிகளை நடத்துகிறது. ஆசிய லெவன் வீரர்கள் மற்றும் உலக லெவன் வீரர்களுக்கு இடையே இந்தப் போட்டி நடக்கிறது.

இந்தப் போட்டிகள் 2020 மார்ச் 18 மற்றும் 21-ம் தேதிகளில் நடக்க உள்ளது. இந்தப் போட்டிகளை ஐசிசி அங்கீகரித்துள்ளது. இந்தப் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணியில் இருந்து 7 வீரர்களை வங்கதேச கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ அமைப்பிடம் கேட்டுள்ளது. அதில் முதல் வீரர் தோனி. அதன்பின் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, ஹர்திக் பாண்டியா, புவனேஷ் குமார், ஜடேஜே ஆகியோரை அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி கூறுகையில், "வங்கதேசம் அடுத்த ஆண்டு ஆசிய லெவன், உலக லெவன் இடையே டி20 போட்டி நடத்தவிருக்கிறது. இதில் 7 இந்திய வீரர்களை அனுப்ப பிசிசிஐ அமைப்பிடம் கேட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

வங்கதேச வாரியத்தின் கோரிக்கையை பிசிசிஐ ஏற்றுக்கொண்டால் இந்தப் போட்டிகளில் தோனி விளையாடுவார். ஆனாலும், இன்னும் தோனியின் எதிர்கால வாழ்க்கை எதிர்பார்ப்புக்கு உள்ளதாகவும், ரகசியமாகவுமே இருந்து வருகிறது. மீண்டும் இந்திய அணிக்குள் வருவாரா என்பது தோனி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x