Published : 26 Nov 2019 08:38 AM
Last Updated : 26 Nov 2019 08:38 AM

டேவிஸ் கோப்பை டென்னிஸில் 6-வது முறையாக ஸ்பெயின் சாம்பியன்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரரான ரபேல் நடாலை உள்ளடக்கிய ஸ்பெயின் அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் நேற்று முன்தினம் இரவு மாட்ரிட் நகரில் ஸ்பெயின் - கனடா அணிகள் மோதின. முதலில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஸ்பெயின் ராபர்டோ பவுதிஸ்டா அகுட், கனடாவின் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிமை எதிர்த்து விளையாடினார்.

இதில் ராபர்டோ பவுதிஸ்டா அகுட் 7-6 (7-3), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற ஸ்பெயின் 1-0 என முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 2-வது ஆட்டத் தில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், கனடாவின் டெனிஸ் ஷாபோலோவை எதிர்த்து விளையாடினார். இதில் 6-3, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் நடால் வெற்றியை வசப்படுத்தினார்.

இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் கனடாவை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின். அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றதில் ரபேல் நடாலின் பங்களிப்பு அதி முக்கியத்துவம் பெற்றிருந்தது. இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதியில் ஸ்பெயின் அணி 0-1 என பின்தங்கியிருந்த நிலையில் நடால் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தால் தொடர்ச்சியாக ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்று அணியை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறச் செய்திருந்தார்.

மேலும் இந்தத் தொடரில் 8 ஆட்டங்களில் பங்கேற்று அனைத்திலும் எதிரணி வீரர்களை வீழ்த்தினார். ரபேல் நடாலின் சிறப்பான ஆட்டத்தால் ஸ்பெயின் அணி பட்டம் வெல்வது இது 4-வது முறையாகும். 2004, 2009 மற்றும் 2011-ம் ஆண்டுகளிலும் ரபேல் நடால் தனது நாட்டுக்கு கோப்பை வென்று கொடுத்திருந்தார்.

இந்த ஆண்டு ரபேல் நடாலுக்கு சிறப்பானதாக அமைந்துள்ளது. பிரெஞ்சு ஓபன், அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற அவர், தற்போது டேவிஸ் கோப்பையையும் வென்றெடுத்துள்ளார். மேலும் ஆண்டை நம்பர் ஒன் வீரராகவும் நடால் நிறைவு செய்துள்ளார். டேவிஸ் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற அணியானது கோப்பையுடன் சுமார் ரூ.15 கோடியை பரிசாக தட்டிச் சென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x