

வெலிங்டன் நகரில் நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது ரசிகர் ஒருவர் இனரீதியாக என்னைப் பார்த்து அவதூறாகப் பேசியது என் மனதை வேதனைப்படுத்தியுள்ளது என்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
நியூஸிலாந்துக்கு இங்கிலாந்து அணி பயணம் மேற்கொண்டுள்ளது. வெலிங்டன் நகரில் முதல் டெஸ்ட் போட்டி நடந்தது. இதில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கும், நியூஸிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 615 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 197 ரன்களுக்கு ஆட்டமிழந்து இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் கடைசி வரிசையில் இறங்கிய ஆர்ச்சர் நீண்டநேரம் களத்தில் இருந்தார். 50 பந்துகளைச் சந்தித்த ஆர்ச்சர் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆர்ச்சர் ஆட்டமிழந்து வெளியேறியபோது அரங்கில் இருந்த ஒரு ரசிகர் ஜோப்ரா ஆர்ச்சரைப் பார்த்து இனரீதியான வார்த்தைகளை அவதூறாகப் பேசியுள்ளார். குறிப்பாக அவரின் நிறத்தைக் குறிப்பிட்டு தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
அதன்பின் ஓய்வறைக்குச் சென்ற ஜோப்ரா ஆர்ச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் மிகுந்த வேதனையுடன் பகிர்ந்துள்ளார். அதில் " என்னுடைய அணியைக் காப்பாற்றுவதற்காக நான் களத்தில் இருந்து விளையாடியதற்காக ஒருவர் என்னை இனரீதியாக என் மனதைப் புண்படுத்தும் வகையில் பேசியது வேதனையாக இருக்கிறது. இந்தப் போட்டியைக் காண வந்திருந்த ரசிகர் கூட்டம் அற்புதமாக இருந்தது. ஆனால், அதில் ஒருவர் இங்கிலாந்து அணியைக் குறிப்பிட்டு அதில் என்னை மட்டும் இனரீதியாக விமர்சித்தார்" என்று தெரிவித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள பர்படாஸ் நாட்டில் பிறந்து, இங்கிலாந்தில் வளர்ந்தவர் ஜோப்ரா ஆர்ச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோப்ரா ஆர்ச்சர் இனரீதியான வார்த்தைகளால் தாக்கப்பட்டதற்கு நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கோரியுள்ளது. அந்த அணி வெளியிட்ட அறிக்கையில், "நியூஸிலாந்து கிரிக்கெட் அணி ஜோப்ரா ஆர்ச்சரை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரும். ஆர்ச்சரை இனரீதியாகப் பேசிய அந்த ரசிகர் அரங்கில் இருந்து சென்றுவிட்டார். இருப்பினும் கண்காணிப்பு கேமிரா உதவியுடன் தேடி வருகிறோம்.
நியூஸிலாந்து எப்போதும் இனரீதியான வார்த்தைகள், தாக்குதலை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. இந்த விவகாரம் விரைவில் போலீஸாரிடம் ஒப்படைக்கப்படும். அடுத்து ஹேமில்டனில் நடக்கும் ஆட்டத்தில் கூடுதல் கண்காணிப்புடன் செயல்படுவோம்" எனத் தெரிவித்துள்ளது.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், "ஜோப்ரா ஆர்ச்சருக்கு நடந்த சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். மிகவும் வருத்தப்படுகிறோம். இங்கிலாந்து கிரிக்கெட் அணி எதிரணியாக இருக்கலாம். ஆனால் எங்கள் நண்பர்கள். ஒருபோதும் இனரீதியான தாக்குதலைத் தாங்கமாட்டோம்" எனத் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே ஜோப்ரா ஆர்ச்சர் தனிப்பட்ட முறையில் கிரிக் இன்போ தளத்துக்கு அளித்துள்ள பேட்டியில், "என் நிறத்தைக் குறிப்பிட்டு அந்த ரசிகர் என்னைத் திட்டினார். அதுமட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமிலும் என்னைத் துரத்தி வந்து மோசமான வார்த்தைகளால் திட்டினார். இங்கிலாந்தில் இப்போட்டி நடந்திருந்தால் எனக்கு இந்த நிலை நடந்திருக்குமா" எனக் கேட்டுள்ளார்.