

சங்கக்காரா என்ற நட்சத்திர வீரர் இந்தத் தொடருடன் ஓய்வு பெறுகிறார். எனவே கடைசி முறையாக அவர் கால்காப்பைக் கட்டுவது இந்தத் தொடரில் இலங்கை ரசிகர்களுக்கு ஒரு உணர்வுபூர்வமான தருணம்.
“ஆக்ரோஷம், அனுபவமின்மை, மாற்றம்” போன்ற வார்த்தைகள் இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நாளை (புதன்) தொடங்கும் சூழலில் ரீங்காரமிட்டு வருகின்றன.
கடந்த டிசம்பரில் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் ஆக்ரோஷமான இன்னிங்ஸினால் இந்தியா வெற்றிக்கு 48 ரன்கள் அருகில் வந்து தோல்வி கண்டது. 364 ரன்கள் இலக்கை துரத்துவதே லட்சியம் என்றார் அப்போது விராட் கோலி.
அதேபோல் பாகிஸ்தானுக்கு எதிராக பல்லகிலேயில் இலங்கை அணி கடும் ஆக்ரோஷத்துடன் ஆடியது, ஆனால் சமயோசித புத்தி சாதுரியமற்ற தாக்குதல் ஆட்டம் தோல்வியையே பெற்றுத் தந்தது.
இந்த இரண்டு தருணங்களிலும் ஆக்ரோஷம் பற்றிய நோக்கம் சரியாகவே பாராட்டப்பட்டது. பாதுகாப்பாக ஆடுவது, டிராவுக்கு ஆடுவது என்பது முந்தைய விளையாட்டுப் பண்பாட்டின் எச்ச சொச்சம் என்றவாறு இப்போது பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த நோக்கம் தக்க வைக்கக் கூடியதுதானா?
திங்களன்று ரவி சாஸ்திரி கூறும்போது, “அடிலெய்டில் விளையாடியது போன்று ஆடி தோல்வி தழுவுவது பிரச்சினையல்ல. ஏனெனில் அத்தகைய கிரிக்கெட் ஆட்டத்தின் மூலம்தான் வெற்றி பெறுவதற்கான உத்வேகம் கிடைக்கும்” என்றார்.
ஆனால் கோலியிடம் உள்ள அணியோ பெரும்பாலும் தோனியின் அணியே. அணுகுமுறையில் கூர்மையான மாற்றம் சொல்வதற்கு எளிது, சாதிப்பது கடினம்.
பேட்டிங் வரிசை மாறிக் கொண்டேயிருக்கிறது, பந்துவீச்சு வரிசையில் உத்தரவாதங்கள் இல்லை.
இலங்கை அணியில் 2-வது போட்டியுடன் சங்கக்காரா ஓய்வு பெறுகிறார். இலங்கை அணி மேத்யூஸ் தலைமையில் எழுச்சியுற விரும்பும் அணி, இந்திய அணியும் கோலியின் தலைமையில் ‘வெற்றி’ என்ற தாரகமந்திரத்துடன் களமிறங்குகிறது.
எனவே ரவி சாஸ்திரி கூறுவது போல், இலங்கைக்கு வரும் இளம் இந்திய அணி இது, இலங்கை அணியிலும் இளம் திறமைகள் உள்ளனர், எனவே இளம் வீரர்களுக்கு இடையிலான ஒரு சவாலாக இந்தத் தொடர் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எது எப்படியாயினும், ஒரு நல்ல விறுவிறுப்பான டெஸ்ட் ஆட்டத்தை இரு அணிகளும் வழங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.