Last Updated : 24 Nov, 2019 04:50 PM

 

Published : 24 Nov 2019 04:50 PM
Last Updated : 24 Nov 2019 04:50 PM

'தாதா' அணியிலிருந்துதான் எல்லாம் தொடங்கியது; அவரிடம் இருந்துதான் கற்றோம்: கங்குலிக்கு கோலி புகழாரம்

டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவது என்பது மனரீதியானது. இதை தாதா கங்குலி தலைமையில் ஏற்றபின்தான் கற்றோம், அனைத்து தாதாவில் இருந்துதான் தொடங்கியது என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டினார்

கொல்கத்தாவில் முதல் முறையாக நடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பகலிரவு டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணியை இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணிவென்றது.

பகலிரவு டெஸ் போட்டியில் முதல்முறையாகப் பங்கேற்ற இந்திய அணி இதில் வெற்றியும் பெற்றது. இதன் மூலம் வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய வேகப்பந்துவீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகியோர் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்கள். இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளை வீழ்த்திய இஷாந்த் சர்மா தொடர் நாயகன், ஆட்டநாயகன் விருது வென்றார்.

டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 7-வது வெற்றியையும், உள்நாட்டில் தொடர்ந்து 12-வது முறையாக டெஸ்ட் தொடரையும் வென்றுள்ளது.

இந்த வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மனரீதியான போராட்டம் நிறைந்தது. தாதா கங்குலி தலைமையில் அணி இருந்தபோது அங்கிருந்துதான் நாங்கள் கற்கத் தொடங்கினோம். அதன்படி விளையாடுகிறோம். அனைத்தும் தாதா அணியில் இருந்துதான் தொடங்கியது.

நம்பிக்கை என்பது டெஸ்ட் போட்டிகளில் முக்கியமானது. நேர்மையாகச் சொல்கிறோம் கடினமாக உழைத்தோம், அதற்கான வெகுமதி கிடைத்து வருகிறது.

வெற்றிக்கு முக்கியக் காரணம் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள். பாரம்பரியமாகச் சுழற்பந்துவீச்சாளர்களை ஊக்குவிக்கும் மைதானத்தில் இப்போது வேகப்பந்துவீச்சாளர்கள் கோலோச்சுவது எந்த சூழலிலும் தங்களால் சிறப்பாகப் பந்துவீச முடியும் என்பதைக் காட்டுகிறார்.

அதேபோல வெளிநாடுகளில் நாங்கள் சென்று விளையாடும்போதும் இதே நம்பிக்கை அவசியம். இதேபோன்று இந்திய அணியின் வேகப்பந்துவீ்ச்சாளர்கள் பந்துவீசினால், எங்கு வேண்டுமானாலும், எந்த அணிக்கு எதிராகவும் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும்.

சுழற்பந்துவீச்சாளர்கள் கூட வெளிநாடுகளில் சென்று விளையாடும் போது அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். நம்முடைய எண்ணம் சரியான திசையில் இருந்தால், வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு, நாம் அனுபவிக்கலாம்.

அரங்கு நிறைய ரசிகர்கள் இருப்பது மிகச்சிறப்பானது. இந்த போட்டி விரைவாக முடிந்துவிடும் என்பதாலேயே ஏராளமான ரசிகர்கள் இன்று வந்துள்ளார்கள். டெஸ்ட் போட்டிகள் உயிர் பெற்று வருகிறது என்பதற்கு இந்த ரசிகர்கள் கூட்டம் சரியான உதாரணம்.

வழக்கமான சிவப்பு பந்தில் விளையாடுவதைக் காட்டிலும் இந்த பிங்க் பந்தில் விளையாடுவது சற்று கடினமாகத்தான் இருந்தது. பந்து குறித்து நானும், பந்துவீச்சு பயிற்சியாளரும் ஆலோசித்தோம். முதலில் இந்த பந்து ஸ்விங் ஆகவில்லை, ஆனால், சூழலுக்கு ஏற்ப நாங்கள் சமாளித்துப் பந்துவீசினோம்
இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x