Last Updated : 24 Nov, 2019 03:07 PM

 

Published : 24 Nov 2019 03:07 PM
Last Updated : 24 Nov 2019 03:07 PM

50 நிமிடத்தில் முடிந்தது:இன்னிங்ஸ் வெற்றியுடன் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்திய அணி சாதனை ;வேகப்பந்துவீச்சாளர்கள் புதிய மைல்கல்

கொல்கத்தாவில் நடந்த வங்கதேசம் அணிக்கு எதிரான 2-வது மற்றும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.

152 ரன்களுக்கு 6 விக்கெட் என்ற நிலையில் இன்று நண்பகலில் ஆட்டத்தைத் தொடங்கிய வங்கதேசம் அணி கூடுதலாக 43 ரன்கள் சேர்த்து 195 ரன்களுக்கு 2-வது இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. நண்பகல் ஆட்டத்தைத் தொடங்கிய வங்கதேசம் அணி 50 நிமிடங்கள் மட்டுமே களத்தில் தாக்குப்பிடிக்க முடிந்தது.

ஆட்டநாயகன் விருதையும், தொடர் நாயகன் விருதையும் இசாந்த் சர்மா பெற்றார்.

இரு இன்னிங்ஸிலும் விளையாடிய வங்கதேச அணியால், இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைக் கூட தொடமுடியவில்லை என்பது வேதனை.

இந்திய அணி போன்ற வலிமையான அணி முன் வழக்கமான சிவப்புபந்தில்கூட வங்கதேச அணியால் தாக்குப்பிடிக்க முடியாது. டெஸ்ட் போட்டியில் அதிகமாக விளையாடிய அனுபவம் இல்லாத வீரர்களைக் அதிகம் கொண்ட வங்கதேச அணியுடன் அதிலும், பிங்க் பந்தில் விளையாடி இந்திய அணி வென்றுள்ளது.

பகலிரவு டெஸ்ட் போட்டியில், பிங்க் பந்தில் கிடைத்த முதல் வெற்றி என்பது இந்திய அணிக்கு பெருமை சேர்க்கும் விஷயம்தான். வரலாற்றில் முக்கியத்துவத்தும் பெறக்கூடிய வெற்றிதான்.

ஆனால், தென் ஆப்பிரிக்கத் தொடரில் கிடைத்த டெஸ்ட் வெற்றியும், வங்கதேசத்துக்கு எதிராக கிடைத்த டெஸ்ட் வெற்றியும் இந்திய அணிக்கு ஒரு தரப்பானதாகவே இருக்கிறது.

பிங்க் பந்தில் இந்திய அணி விளையாடத் தொடங்கும் போது, இந்திய அணியின் வலிமைக்கு நிகராக சவால் விடுக்கும் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகளுடன் விளையாடி இருந்தால், போட்டி இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.

இந்திய அணியில் அபாரமாக பந்துவீசிய மும்மூர்த்தி வேகப்பந்துவீ்ச்சாளர்கள் முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர்தான் வெற்றிக்கு முக்கியக் காரணமாகும். வேகப்பந்துவீச்சாளர்கள் 3 பேரும் சேர்ந்து இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

சுழற்பந்துவீச்சாளர்கள் யாவரும் எந்த விக்கெட்டையும் வீழ்த்தவில்லை. இந்தியாவின் வரலாற்றில் ஒரு டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியது இதுதான் முதல் முறையாகும்.

முதல் இன்னிங்ஸில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளையும், 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். உமேஷ்யாதவ் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும், 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்
இந்திய அணி தொடர்ச்சியாக பெறும் 7-வது டெஸ்ட் வெற்றி இதுவாகும். ஒட்டுமொத்தமாக உள்நாட்டில் தொடர்ச்சியாக 12 டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக பிங்க் பந்தில் விளையாடிய இந்திய அணி அதில் இன்னிங்ஸ் வெற்றியும் பெற்று சாதித்துள்ளது.

இதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இரு போட்டிகளில் வென்று தொடரைக் கைப்பற்றி 120 புள்ளிகளை இந்திய அணி பெற்றது. ஒட்டுமொத்தமாக 420 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் இருக்கிறது.

முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 106 ரன்னிலும், இந்திய 9 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்து 241 ரன்கள் முன்னிலை பெற்றது.

241 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடத் தொடங்கிய வங்கேதசம் அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் சேர்த்திருந்தது. முஷ்பிகுர் ரஹிம் 59 ரன்களில் களத்தில் இருந்தார்.

இன்று முஷ்பிகுர் ரஹிம், இபாதத் ஹூசைன ஆட்டத்தைத் தொடங்கினர். ஆட்டம் தொடங்கிய 2-வது ஓவரில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் கோலியிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து இபாதத் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த அல்அமின் ஹூசைன், முஷ்பிகுருடன் சேர்ந்தார். முஷ்பிகுர் ரஹிம் அவ்வப்போது துணிச்சலாக சில பவுண்டரிகள் அடித்து ஸ்கோரை உயர்த்தினார். ரஹிம் 74 ரன்கள் சேர்த்திருந்தபோது, உமேஷ் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்த சிறிது நேரத்தில் 21 ரன்கள் சேர்த்திருந்த அல்அமின் , உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்

41.1 ஓவர்களில் 195 ரன்களுக்கு 2-வது இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது வங்கதேசம் அணி. இந்திய அணித் தரப்பில் உமேஷ் யாதவ் 5 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x