Last Updated : 24 Nov, 2019 11:12 AM

 

Published : 24 Nov 2019 11:12 AM
Last Updated : 24 Nov 2019 11:12 AM

இந்திய அணிக்கு செல்லப்பிள்ளையான ரிஷப் பந்த்; அப்போ சாம்சன் கதி...!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் ரிஷப் பந்த்திற்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தது. இதுபோன்ற விமர்சனங்களுக்கு இனி வாய்ப்பளிக்கக் கூடாது என்ற தொலைநோக்கு பார்வையில் கடந்த தொடரில் பெஞ்சில் உட்கார வைத்திருந்த சாம்சனை தற்போது அணியிலிருந்தே ஒட்டுமொத்தமாக நீக்கி விமர்சனங்களுக்குத் தீர்வு கண்டுள்ளனர் நமது தேர்வுக்குழுவினர்(?).


அப்படி என்னதான் மற்றவர்களிடம் இல்லாத திறமை இருக்கிறது ரிஷப் பந்திடம்? ஜிம்னாஸ்டிக் திறமையா, புள்ளிங்கோ ஹேர் ஸ்டைலா? கண்டிப்பாக அவர் ஒரு விக்கெட் கீப்பர் இல்லை என்பது கல்லி கிரிக்கெட் ஆடுபவர்களுக்குக் கூட தெரியும்போது, கீப்பர்தான் பந்துவீச்சாளர்களின் தன்னம்பிக்கை என்பது விக்கெட் கீப்பரான தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத்துக்கு தெரியவில்லையா. விருதிமான் சாஹாவின் மீள்வருகைக்கு பிறகு நமது டெஸ்ட் அணியின் செயல்பாட்டை பார்த்தும் எப்படி தெரியாமல் இருக்கும்.

ரிஷப் பந்த் முதல் ஸ்லிப்பிற்கு நேராக செல்லும் பந்தை பிடிக்க புல் லெந்த் டைவ் அடித்து கையுறையில் எட்ஜ் வாங்குவதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. பந்து வருவதை கணித்து சிறிய கால் நகர்த்தலில் எளிதாக மற்ற கீப்பர்கள் பிடிக்கக்கூடிய பந்துகளுக்குத்தான் இவ்வளவு சிரமப்படுகிறார். அதைச் சுட்டி காட்டுவதற்கு பதிலாக கில்கிறிஸ்ட் போல டைவ் அடிக்கக்கூடிய கீப்பர் கிடைத்து விட்டார் என்று இனியும் கொண்டாடிக் கொண்டிருந்தால் டிஆர்எஸ் என ஒன்று இருப்பதை நாம் மறந்துவிட்டு ஆடுவதைத் தவிர வேறு வழியில்லை.

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பரூக் என்ஜினியர் மட்டுமே எல்லா பந்துகளுக்கும் டைவ் அடிப்பது மட்டுமே விக்கெட் கீப்பிங் கிடையாது என்றார். விக்கெட் கீப்பர்கள் உருவாக முடியாது, பிறக்க வேண்டும் என்றவர்களை காணவில்லை.

இந்திய அணிக்கு விக்கெட் கீப்பிங்கை விட பேட்டிங்தான் முக்கியம் என்ற முடிவில் இருந்தால் தாராளமாக கேஎல்.ராகுலையே கீப்பராக்கி விடலாம். ரிஷப் பந்தை விட்டால் வேறு கீப்பர்கள் இல்லை என்ற நிலை இல்லவே இல்லை.

தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தினேஷ் கார்த்திக்குக்கு இனி இடமில்லை என்பது புரிகிறது. நீண்ட காலமாக தங்களை உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து நிரூபித்தும் இஷான் கிஷான், சஞ்சு சாம்சன் போன்றோரை ஏன் ஒளித்து வைக்க வேண்டும். ஆனால் இவர்களைத் தாண்டி எம்எஸ்கே பிரசாத் அவ்வப்போது கேஎஸ் பரத் என்ற விக்கெட் கீப்பரைப் பற்றி பேசி சம்பந்தமே இல்லாமல் புளங்காகிதம் அடைந்து வருகிறார். ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதைத் தவிர அவரிடம் எந்த காரணமும் இல்லை. உள்ளூர் போட்டிகளில் அவருக்கு வாய்ப்புகள் கொட்டப்பட்டு வருகிறது. எந்த போட்டியிலாவது ஏதாவது அற்புதம், அதிசயம் நிகழ்த்த மாட்டாரா என வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறார் தற்போதைய தேர்வுக்குழு தலைவர்.

ரிஷப் பந்துக்குள் ஏராளமான திறமைகள் ஒளிந்து கிடக்கிறது, அவருக்கு இன்னும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பவர்கள் கவனிக்க, கண்டிப்பாக மே.இ.தொடரின் ஏதேனும் ஒரு ஆட்டத்திலாவது ரிஷப் தனது ஐபிஎல் பாணி ஆட்டத்தைக் காட்டக்கூடும். ஆனால் அதற்கு இதுவரை கொடுத்திருக்கும் விலை அதிகம். இவருக்கு வழங்கப்பட்ட அளவு சர்வதேச டி20 போட்டி வாய்ப்புகளை வழங்கியிருந்தால் புஜாரா போன்றவர்கள்கூட ஆன்ட்ரே ரஸ்ஸல்களாக அவதாரம் எடுத்திருப்பார்கள்.

ரோஹித்சர்மாவுக்கும், ரவீந்திர ஜடேஜாவுக்கும் இதேபோல்தான் தொடர்ந்து இடமளித்தனர் எனலாம். ஆனால் இதேபோன்று தூக்கிவைத்து கொண்டாடித்தான் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அஜித் அகர்கரையும், அடுத்த கபில்தேவ் என வர்ணிக்கப்பட்ட இர்பான் பதானையும் மீண்டும் அணிக்குள்ளேயே வராமல் செய்தனர். ஆனால் இவர்கள்கூட துவக்க காலத்தில் சாதித்தனர்.

ஒன்று மட்டும் நன்றாகப் புரிகிறது, தற்போதைக்கு அணியின் செல்லப்பிள்ளை போல் நடத்தப்படும் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பர் இடத்திற்குப் போட்டு வைத்திருக்கும் துண்டு போல உள்ளார். அந்த இடம் தோணிக்காகவா? கேஎஸ் பரத்துக்காகவா? என்பதுதான் புதிர். இல்லையென்றால் சர்வதேச போட்டிகளில் பயிற்சி எடுக்கும் பாக்கியம் எல்லாம் எல்லோருக்கும் கிடைத்து விடாது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x