

இந்திய வீரர்களிடம் ஆரோக்கியமான போட்டி நிலவுவதாக, வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி முதல் இன்னிங்ஸில் 106 ரன்களில் சுருண்டது. வங்கதேசத்துக்கு எதிராக இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஷமி ஆகியோர் சிறப்பாகப் பந்து வீசினர்.
இஷாந்த் சர்மா 12 ஓவர்கள் வீசி 4 மெய்டன்கள் எடுத்து 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உமேஷ் யாதவ் 7 ஓவர்கள் 2 மெய்டன்கள் எடுத்து 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷமி 10.3 ஓவர்கள் வீசியதில் 2 மெய்டன்கள் எடுத்து 36 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் 5 விக்கெட்டுகள் எடுத்தது குறித்து இஷாத் சர்மா கூறும்போது, “ எங்களிடம் ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. போட்டி இருந்தால்தான் அது ஒவ்வொரு பந்து வீச்சாளரையும் ஊக்கப்படுத்தும். இதில் அனைவரும் சிறப்பாக விளையாடும்போது யாரையாவது வெளியே உட்கார வைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இதற்கு மிகப் பெரிய உதாரணம் அனுமா விஹாரி. அவர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடினார். ஆனால் அடுத்த போட்டியில் நாங்கள் ஐந்து பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் அவர் விலகக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நாங்கள் சரியாகப் பந்து வீசினோம். அதனால் எங்களால் விக்கெட்டுகளை எடுக்க முடிந்தது. ஆடுகளமும் சரியாக இருந்தது. நான் இப்போட்டியில் வித்தியாசமாக எதையும் செய்யவில்லை. நான் எனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்த விரும்பினேன். நான் எனது திறன்களை உணர்ந்து அதை ஆட்டத்தில் செயல்படுத்தினேன்” என்று இஷாந்த் சர்மா தெரிவித்தார்.