Last Updated : 22 Nov, 2019 02:19 PM

 

Published : 22 Nov 2019 02:19 PM
Last Updated : 22 Nov 2019 02:19 PM

பகலிரவு டெஸ்ட் போட்டி: பிங்க் பந்துக்கும்- வழக்கமான சிவப்பு பந்துக்கும் என்ன வேறுபாடு?

பிரதிநிதித்துவப்படம்

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இந்தியா, வங்கதேச அணிக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பகலிரவு டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது

உலகில் டெஸ்ட்கிரிக்கெட் விளையாடும் அனைத்து அணிகளும் பிங்க் நிறப்பந்தில் விளையாடும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்டன. ஆனால், இதுவரை இந்தியா, வங்கதேசம் அணிகள் மட்டுமே விளையாடாமல் இருந்த நிலையில், இப்போது களம் காண்கின்றன.

பாரம்பரியமாக பகல் நேரத்தில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் சிவப்பு நிறப் பந்துகளே பந்துவீசப் பயன்படும். ஆனால், பகலிரவு டெஸ்ட் போட்டியில் சிவப்பு நிறப் பந்துக்கு பதிலாக பிங்க் நிறப்பந்து பந்துவீசப் பயன்படுகிறது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் பிங்க் நிறப்பந்துக்கும், சிவப்பு நிறப்பந்துக்கும் இடையே வேறுபாடு இருக்கிறதா என்ற கேள்வி இருக்கிறது. சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் கூட பிங்க் நிறப்பந்தில் விளையாட சிறப்புப் பயிற்சி ஏன் எடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்ற சந்தேகம் இருக்கிறது

பந்துவீச்சாளர்களுக்கு பிங்க் பந்து பந்துவீச எளிதாக இருக்குமா, பேட்ஸ்மேன்களுக்கு உதவுமா, மற்ற பந்துகளைக் காட்டிலும் இதில் என்ன வேறுபாடு, போட்டியில் எவ்வாறு தாக்கத்தை பிங்க் பந்து ஏற்படுத்தும் என்ற கேள்விகள் எழுகின்றன

பிங்க் பந்துக்கும், சிவப்பு பந்துக்கும் இடையே வேறுபாடு என்ன?

வழக்கமான டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் சிவப்பு பந்துக்கும், பிங்க் பந்துக்கும் இடையே இருக்கும் வேறுபாடு பந்தை தயாரிக்கும் தோல்(லெதர்). இறக்குமதி செய்யப்படும் தோல் மூலம் பிங்க் பந்து தயாரிக்கப்படுகிறது.

மற்றவகையில் பந்துக்குள் இருக்கும் உட்பொருளில் எந்தவிதமான மாறுபாடும் இல்லை. கார்க் மற்றும் கம்பளியால் பந்தின் உட்பொருள்இருக்கும்.

சிவப்பு பந்தை தயாரிக்க 2 நாட்கள் ஆகும்போது, பிங்க் பந்தை தயாரிக்க 8 நாட்கள் ஆகும். பிங்க் பந்து விட்டம் 22.5 செ.மீ ஆகும். அதாவது ஹாக்கி பந்து அளவுக்கு ஏறக்குறைய இருக்கும். பிங்க் பந்தில் மொத்தம் 78 தையல்கள் போடப்பட்டிருக்கும்.

சிவப்பு பந்தில் வெள்ளை நூலில் தையல்களும், பிங்க் பந்தில் கறுப்பு நூலில் தையல்களும் போடப்பட்டு இருக்கும். சிவப்பு பந்தில் வழுவழுப்பு தன்மைக்காக மெழுகு பூச்சு இருக்கும். விளையாடத் தொடங்கும்போது மெழுகைப் பந்து இழுத்துக் கொண்டுவிடும் என்பதால், ரிவர்ஸ் ஸிங் செய்ய பந்துவீச்சாளர்களுக்கு ஏதுவாக இருக்கும். ஏதாவது ஒருபக்கத்தை மட்டும் தேய்வதுபோன்று பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவார்கள்.

ஆனால், பிங்க் பந்தில் மெழுகு பயன்படுத்த முடியாது. அதற்குப் பதிலாக பியு எனப்படும் பந்துகளுக்கான பாலிஷ் பயன்படுத்தப்படும். இதனால் 40 ஓவர்கள் வரை பிங்க் பந்தின் நிறம் குறையாமல் இருக்கும்.

சிவப்பு, பிங்க், வெள்ளைப் பந்துகளில் 6 வரிசை தையல்கள் இருக்கும். இதில் டியூக்ஸ், எஸ்ஜி பந்துகளில் கையால் 6 வரிசை தையல்கள் இருக்கும். கூக்கபுரா பந்தில் உட்புறத்தில் மட்டும் இரு தையல்கள் கையால் போடப்பட்டு இருக்கும். 4 தையல்கள் எந்திரத்தால் இருக்கும். சர்வதேச அளவில்பிங்க் பந்தின் மதிப்பு ரூ.8000, உள்நாட்டில் ரூ.2,700 ஆகும்.

வேகப்பந்து வீச்சில் சிவப்பு பந்துக்கும், பிங்க் பந்துக்கும் வேறுபாடு ஏற்படுமா?

ஆமாம், நிச்சயம் ஏற்படும். பிங்க் பந்தில் வேகம் அதிகமாக இருக்கும். அதாவது சிந்தடிக்,லிலன்(சணல்) கலவை பந்தில் இருக்கிறது. பகல் நேரத்தில் பந்துவீசும் போது உதவியாக இருக்கச் சிந்தடிக்கும், இரவுநேரத்தில் பனிப்பொழிவின் போது பந்தை இருக்கமாகப் பிடிக்க லினன் பயன்படும். லினன் இரவுநேரத்தில் பனியை உறிந்துகொள்ளும். பொதுவாகச் சிவப்பு பந்தில் விளையாடும் போட்டி சூரியன் மறைவுக்குள் முடிந்துவிடும். ஆனால், பிங்க் பந்து நண்பகலுக்குப்பின் தொடங்கி, இரவுவரை நடக்கும் என்பதால் பந்து தயாரிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிங்க் பந்து பந்துவீச்சாளர்களுக்கு கூடுதலாக உதவுமா?

சந்தேகமே இல்லை. போட்டி தொடங்கும்போது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இந்த பந்துகள் அதிகமான ஸ்விங் ஆகும். முதல் 15 ஓவர்களுக்கு அதிகமான ஸ்விங் ஆகும். பந்து புதிதாக நீண்டநேரம் இருக்கும் என்பதால் வேகம் அதிகமாக இருக்கும். இதனால்,வேகப்பந்துவச்சுக்கு கூடுதலாக ஒத்துழைக்கும்.

அதேசமயம், சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் ஒத்துழைக்கும். கூக்கபுரா பந்துகள் எந்திரங்கள் மூலம் தைக்கப்படுபவை, பந்துவீச்சாளர்களுக்கு 45 ஓவர்களுக்கு மேல் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு உதவாது. ஆனால் பிங்க் பந்து கையால் தைக்கப்படுபவை என்பதால், அதிகமான கிரிப் இருக்கும், நன்றாக டர்னாகும், பந்துகள் எழும்பும்.45 ஓவர்ளுக்கு பின்பும் நன்றாகப் பந்துவீச முடியும்

பிங்க்-சிவப்பு பந்து எடையில் வித்தியாசம் இருக்கிறதா?

எந்த கிரிக்கெட் பந்தை எடுத்துக் கொண்டாலும் அதன் எடை 156 முதல் 162 கிராமுக்குள் இருக்க வேண்டும். அவ்வாறு அதிகமாகச் சென்றால் அது நிராகரிக்கப்படும். பிங்க் பந்து எடை 156 கிராம் இருக்கும்.

மூன்று பந்துகள் தயாரிக்கப்படும் தோல் ஒன்றுபோலத்தான் இருக்கும். தரத்தில் வேண்டுமானால் மாறுபடலாம். பிங்க் பந்துக்கும், வெள்ளைப் ப ந்துக்கும் இடையே வண்ணம் குறையாமல் இருக்க பிங்க் பந்தில் லாக்கர் கோட்டிங் கொடுக்கப்படும். மற்ற பந்தில் வாக்ஸ் கோட்டிங் இருக்கும்.

வெள்ளைப்பந்துகள் வேகமாக பேட்ஸ்மேனை நோக்கி வேகமாக வரும், அதிகமான பவுன்ஸ் ஆகும். ஏனென்றால் ஒருநாள் போட்டியிலும், டி20 போட்டியிலும் பார்வையாளர்கள் சிக்ஸர், பவுண்டரியை அதிகமாக பார்க்க வேண்டும் என்பதால், வெள்ளைப்பந்து பவுன்ஸ் ஆகும் வகையில் இருக்கும். ஆனால், பிங்க் பந்து அந்த வகையில் இருக்காது

பேட்ஸ்மேன்களுக்கு பிங்க் பந்து சாதகமாக இருக்குமா?
பிங்க் பந்தில் பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வது கடினமாக இருக்கும். பந்துவீச்சாளர்கள் கையில் இருந்து பந்து வெளியேறுவதற்கும், பந்து தரையில் பிட்ச் ஆவதற்கும் இடையே வேகம் அதிகமாக இருக்கும். இதனால் பந்தை கணித்து ஆடுவதில் சிரமம் இருக்கும். இது பந்துவீச்சாளர்களுக்கு சற்று சாதகமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x