Published : 21 Nov 2019 05:22 PM
Last Updated : 21 Nov 2019 05:22 PM

பிங்க் பந்து கனமாக உள்ளது, த்ரோ செய்வது கூட கடினமாக உள்ளது: விராட் கோலி பேட்டி

வங்கதேசத்துக்கு எதிராக வெள்ளிக்கிழமைய (22-11-19) அன்று கொல்கத்தாவில் முதல் முதலாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் நூதனமான பிங்க் நிறப்பந்தில் இந்திய அணி ஆடுகிறது.

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை ஆகிய நாடுகள் பிங்க் நிறப்பந்தில் ஆடிவிட்டன, ஆனால் அந்த நாடுகளெல்லாம் இதனை இவ்வளவு பெரிய சாதனையாகக் கருதவில்லை, ஆனால் ஆடப்போவது இந்தியாவல்லவா? எனவேதான் இத்தனை பிட்ல் அப் தேவைப்படுகிறது.

என்ன கேப்ட்ன்களுக்கு ஏகப்பட்ட சவால்கள் உள்ளன, டாஸ் வென்று பேட்டிங்கா, பீல்டிங்கா, என்பது முதல் ஸ்பின்னர்களை எப்போது கொண்டு வருவது, என்பது போக முதலில் ஸ்பின்னர்களே தேவையா இல்லையா, விளக்கொளியில் பிங்க் பந்துகள் எப்படி நடந்து கொள்ளும், பந்து பனிப்பொழிவினால் ஈரமானால் இன்னும் கனமாகிவிடும் பவுண்டரிகள் அடிப்பது கடினம், பீல்டிங், பவுலிங் அனைத்துமே கடினம்.

இந்நிலையில் பிங்க் பந்து பற்றி தன் முதற்கட்ட அனுபவங்களை விராட் கோலி பகிர்ந்து கொண்டார்:

“5 நாள் கிரிக்கெட் என்ற போது பொதுவாகவே பந்துகள் கொஞ்சம் அதிகமாக வினையாற்றும். இதில் பந்து தெரியாமல் போனால் இன்னும் கடினம். புதிய வண்ணத்தை கண்கள் பழகிக் கொள்வது சிரமம்.

ஆஃப் ஸ்டம்ப் எங்கிருக்கிறது என்பதில் கவனம் தேவை. நாங்கள் நேற்று பயிற்சி செய்த போது பந்து நமக்கு அருகில் இருப்பது போல் தெரிகிறது, ஆனால் அவ்வளவு அருகில் இல்லை என்பதே உண்மை. அதன் பளபளப்பு செயற்கைப் பந்து போல் உள்ளது. பந்து சிகப்புப் பந்தை விட கடினமாக உள்ளது. கனமாக உள்ளது, விக்கெட் கீப்பருக்கு த்ரோ செய்வதற்குக் கூட கூடுதல் சக்தி தேவைப்பட்டது. பகல்வேளையில் உயரமான கேட்ச்களை எடுப்பது கடினம். நண்பகலில் கேட்ச்களில் வெள்ளை நிறப்பந்து போல் தெரிகிறது.

எவ்வளவு விரைவில் நம் கையை பந்து மோதும் என்பதும் தெரியவில்லை. பந்தும் சிகப்புப் பந்தை விட வேகமாகப் பறக்கிறது. அதன் கூடுதல் பளபளப்பு அதனை வேகமாக பயணிக்க வைக்கிறது.

பனிப்பொழிவு பற்றி இப்போது எதுவும் கூற முடியவில்லை, எப்போது பனிப்பொழிவு தொடங்கும் என்பதும் சரியாகத் தெரியவில்லை. மற்ற இடங்களில் பகலிரவு டெஸ்ட் ஆடுவதற்கும் இந்தியாவில் ஆடுவதற்கும் இதுதான் வித்தியாசம்.

பிங்க் பந்தில் ஆடுவதற்கு தயாரிப்பு தேவை அதனால்தன ஆஸ்திரேலியாவில் கேட்ட போது மறுத்தோம், நம் நாட்டில் பிங்க் நிறப்பந்தில் ஆடி அது எப்படி செயல்படுகிறது என்ற அனுபவத்தைப் பெற்ற பிறகு எந்த நாட்டில் வேண்டுமானாலும் பிங்க் பந்துகளில் ஆடலாம். ” என்றார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x