

மும்பையில் நடந்த ஹாரிஸ் ஷீல்ட் கிரிக்கெட் போட்டியில் சில்ரன் வெல்ஃபேர் ஸ்கூல் அணியின் அனைத்து வீரர்களும் டக் அவுட் ஆக, 7 ரன்கள் எக்ஸ்ட்ராவில் வர அந்த அணி மொத்தமே 7 ரன்கள்தான் எடுத்தது. எதிரணியான சுவாமி விவேகானந்தர் பன்னாட்டுப் பள்ளி 39 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 761 ரன்கள் எடுத்தது, இந்த அணியின் மீட் மயேகர் அதிரடியாக 338 ரன்களை விளாசியுள்ளார்.
நாக் அவுட் போட்டியான இதில் சில்ரன் வெல்ஃபேர் ஸ்கூல் அணியின் ஆட்டம் மறக்கப்பட வேண்டிய ஒன்றானது. அனைத்து வீரர்களும் டக் அவுட் ஆகி தேவையில்லாத புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர். வந்த 7 ரன்களும் 6 வைடுகள் ஒரு பைய் ஆகியன மூலம் வந்தது. 6 ஓவர்களில் ஆல் அவுட் ஆகியுள்ளனர்.
விவேகானந்தா இன்டெர்நேஷனல் ஸ்கூலின் வேகப்பந்து வீச்சாளர் 3 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதனையடுத்து இதுவரை எந்த ஒரு கிரிக்கெட்டிலும் இல்லாத வகையில் சில்ரன்ஸ் வெல்ஃபேர் பள்ளி அணி 754 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.
ஆசாத் மைதானில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த விவேகானந்தா பள்ளி அணியின் மீட் மயேகர் என்ற வீரர் 134 பந்துகளில் 56 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 338 ரன்கள் எடுத்து வீழ்த்த முடியாமல் நின்றார்.
3 மணி நேரத்தில் 45 ஓவர்களை வீசத் தவறியது சில்ரன்ஸ் வெல்ஃபேர் பள்ளி, 39 ஓவர்களை மட்டுமே வீசியதால் அபராதமாக 156 ரன்கள் விவேகானந்தா அணிக்கு வழங்கப்பட்ட கொடுமையும் நடந்துள்ளது.