Published : 21 Nov 2019 04:05 PM
Last Updated : 21 Nov 2019 04:05 PM

நல்ல தொடக்கத்தை வீணடித்த பாகிஸ்தான்; விக்கெட்டை வீசி எறிந்த ஹாரிஸ் சொஹைல், பாபர் ஆஸம்: 240 ரன்களுக்கு ஆல் அவுட்

பிரிஸ்பனில் ஏகப்பட்ட பில்ட் - அப்களுக்குப் பிறகு இன்று பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடங்கியது, டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி முதலில் பேட் செய்யும் முடிவை தைரியமாக எடுத்தது குறிப்பிடத்தக்கது.

அபாரமாகத் தொடங்கி எந்த ஒரு வாய்ப்பையும் அளிக்காமல் பிரிஸ்பனின் லேசான கிரீன் டாப் பிட்சில் ஹேசில்வுட், கமின்ஸ், ஸ்டார்க், லயன் உள்ளிட்ட ஜாம்பவான்களுக்கு எதிராக உணவு இடைவேளை வரை விக்கெட்டையிழக்காமல் பிறகு முதல் விக்கெட்டுக்காக 33 ஓவர்களில் 75 ரன்களைச் சேர்த்து எதிர்பாராத அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.

பிட்சில் கொஞ்சம் ஈரப்பதம் இருந்ததால் பந்துகள் வேகமாக வரவில்லை. ஆஸ்திரேலிய பவுலர்கள் பந்தின் தையலை வன்மையாக பிட்சில் அடித்து பந்தை குட்லெந்தில் எழுப்பக் கூடியவர்கள், ஸ்விங் அவ்வளவாக அவர்களுக்கு வராது, ஒருவேளை ஈரப்பதம் இருக்கும் போது இந்தியாவின் இஷாந்த்சர்மா, ஷமி, பும்ரா, உமேஷ் போல் ஸ்விங் செய்திருந்தால் பாகிஸ்தான் 3-4 விக்கெட்டுகளை உணவு இடைவேளைக்கு முன்னதாகவே இழந்திருக்கும், ஆனால் ஆஸ்திரேலிய பவுலர்கள் பாகிஸ்தான் தொடக்க வீரர்களின் மட்டைக்கு வீசவில்லை, அவர்களை மட்டையில் ஆட வைக்கவில்லை. அதற்காக பாகிஸ்தானின் அசார் அலி, ஷான் மசூதின் உறுதியை குறைக்கவில்லை, மிகப்பிரமாதமாக ஆடினர், நேர் ட்ரைவ், கவர் ட்ரைவ், பிளிக்குகள் என அவ்வப்போது பவுண்டரிகளையும் அடித்தனர்.

ஆஸி.யில், பிரிஸ்பனில் குறிப்பாக வெயில் அடித்து பிட்ச் காய்ந்த பிறகு பந்துகளில் வேகம் கூடும். அப்படித்தான் உணவு இடைவேளைக்குப் பிறகு 75/0 என்ற நிலையிலிருந்து பாகிஸ்தான் 95/5 என்று ஆனது.

முதல் விக்கெட்டாக ஷான் மசூத் 97 பந்துகளில் போராடி எடுத்த 27 ரன்கள் மூலம் நன்றாக ஆடிவந்த போது கமின்ஸ் பந்து ஒன்று குட்லெந்தில் பிட்ச் ஆகி சற்றே வெளியே எடுக்க அந்தக் கடினமான கோணத்தில் மசூத் தடுமாறி எட்ஜ் செய்தார் ஸ்மித் கேட்சை எடுத்தார்.

தன் கூட்டாளி பிரிந்தவுடனேயே கேப்டன் அசார் அலி 104 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 39 ரன்களில் ஹேசில்வுட் பந்து ஒன்று மீண்டும் குட்லெந்தில் ஆஃப் ஸ்ட்ம்பில் பிட்ச் ஆகி மட்டை விளிம்பில் பட பர்ன்ஸ் ஸ்லிப்பில் அருமையாக கேட்ச் எடுத்தார். அதன் பிறகு நின்று ஆட வேண்டிய ஹாரிஸ் சோஹைல் 1 ரன்னில் ஸ்டார்க்கின் வெளியே சென்ற பந்தை, ஆடாமல் விட்டிருக்க வேண்டிய பந்தை காலை நகர்த்தாமல் ஆடி பெய்னிடன் கேட்ச் ஆகி வெளியேறினார்.

பாபர் ஆஸம் 4வது பந்தில் அதிர்ச்சிகரமாக ஜோஷ் ஹேசில்வுட்டின் வெளியே சென்ற பந்தை அனாவசியமாக ஒரு பெரிய டிரைவ் ஆட முயன்று ஸ்லிப்பில் பர்ன்ஸிடம் கேட்ச் ஆனார். ஹாரிஸ் சொஹைல், பாபர் ஆஸம் இருவரும் தூக்கி எறிந்த விக்கெட்டுகளினால் பாகிஸ்தான் இன்னிங்ஸே மாறிப்போனது. இப்திகார் அகமெட் 7 ரன்களில் நேதன் லயன் பந்தை தேவையில்லாமல் மேலேறி வந்து கடைசியில் தடுத்தாட அது கால்காப்பு, மட்டை உள்விளிம்பில் பட்டு ஷார்ட் லெக்கில் கேட்ச் ஆனது. 75/0 லிருந்து 94/4 என்று ஆனது பாகிஸ்தான்.

ஆசாத் ஷபிக், மொகமது ரிஸ்வான் இணைந்து தேநீர் இடைவேளை வரை சேதமில்லாமல் ஸ்கோரை 125/5 என்று உயர்த்தினர் தேநீர் இடைவேளை முடிந்து ரிஸ்வான் சில பிரமாதமான பவுண்டரிகளை விளாசினார் குறைந்த ஓவர்களில் 7 பவுண்டரிகள் வரை வந்தது. 34 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் ரிஸ்வான் 37 ரன்கள் எடுத்து ஆக்ரோஷம் காட்டினார். ஆனால் கமின்ஸ் பந்தை காலை நகர்த்தாமல் மட்டையை மட்டும் விட மெலிதான எட்ஜ் பெய்னிடம் கேட்ச் ஆனது. அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது, ஆனால் அது கமின்ஸின் நோ-பால், 3ம் நடுவரும் நோ-பால் என்று அதை தீர்ப்பளிக்காமல் சரியான பந்து என்றார். தவறான தீர்ப்பில் ரிஸ்வான் அவுட் ஆனார்.

143/6 என்ற நிலையில் ஆசாத் ஷபிக் , பவுலர் யாசிர் ஷா (26 ரன்), இணைந்து 84 மிக முக்கிய ரன்களைச் சேர்த்தனர். ஸ்கோர் 227 ஆக இருந்த போது யாசிர் ஷா, ஸ்டார்க் யார்க்கரில் பவுல்டு ஆக, அடுத்த பந்தே ஷாஹின் அப்ரீடி எட்ஜ் செய்து வெளியேற, 16 வயது நசீம் ஷா தன் டெஸ்ட் வாழ்க்கையின் முதல் பந்தையே ஹாட்ரிக்கை தடுக்கும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டார், ஸ்டார்க்கின் ஹாட்ரிக் பந்து என்ன ஆனது என்று நசீம் ஷாவுக்கு தெரியவில்லை, மட்டையின் உள்விளிம்பில் பட்டு ஹாட்ரிக் தடுக்கப்பட்டது. கடைசியில் நசீம் ஷாவையும் ஸ்டார்க் தன் பந்து வீச்சில் தானே கேட்ச் எடுத்து வீழ்த்த பாகிஸ்தான் 240 ரன்களுக்குச் சுருண்டது. இன்றைய தின ஆட்டமும் முடிவுக்கு வந்தது. ஸ்டார்க் 4 விக்கெட், கமின்ஸ் 3, ஹேசில்வுட் 2, லயன் 1 விக்கெட்.

பயிறி ஆட்டங்க்ளில் சதங்களைக் கண்ட ஆசாத் ஷபீக் 134 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்து கமின்ஸின் அபாரமான இன்ஸ்விங்கரில் பவுல்டு ஆனார். பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்ச ஸ்கோரை எடுத்தவர் ஆசாத் ஷபீக்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x