

சீனாவில் நடந்த உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீ ரைபிள் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றார்.
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் சீனாவில் நடந்து வருகின்றன. இதில் இன்று நடந்த 10 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் 250.8 புள்ளிகளைப் பெற்று இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் பெற்றுத் தந்தார்.
இப்போட்டியில் இரண்டாவது இடம் தைவானின் லின் யிங் ஷினுக்குக் கிடைத்தது (பெற்ற புள்ளிகள் 250.7 ). மூன்றாவது இடம் ரோமேனியாவின் லாரான் கோமனுக்குக் கிடைத்தது (பெற்ற புள்ளிகள் 229).
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதலில் 17 வயதுக்கு உட்பட்ட ஜூனியர் பிரிவுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் தங்கப்பதக்கம் வென்றார்.
முன்னதாக, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் (ஐஎஸ்எஸ்எப்) உலகக்கோப்பை போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்றார். இந்நிலையில் சீனாவில் நடந்த உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இளவேனிலுக்கு மீண்டும் தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள காராமணிக் குப்பத்தில் பிறந்தவர் இளவேனில். இவருடைய தாத்தா தமிழ்ப் பற்றாளர். இளவேனிலின் தந்தை வாலறிவன், அகமதாபாத்தில் உள்ள தனியார் வேதியியல் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருக்கிறார். தாய் சரோஜா, தனியார் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வருகிறார்.