Last Updated : 20 Nov, 2019 09:47 PM

 

Published : 20 Nov 2019 09:47 PM
Last Updated : 20 Nov 2019 09:47 PM

மே.இ.தீவுகள் தொடரில் ரோஹித்துக்கு ஓய்வளிப்பது சரியாகுமா? தவண் வெளியே; தோனி உள்ளே?

டிசம்பர் மாதம் நடக்க உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டால் அந்தத் தொடர் ரசிக்கத்தகுந்த தொடராக அமையுமா என்று ரசிகர்களின் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கெனவே தோனி உலகக்கோப்பை போட்டிக்குப் பின் களமிறங்காமல் தவிர்த்து வரும்போது, ரோஹித் சர்மாவுக்கும் ஓய்வு அளிப்பது ரசிகர்களை வெறுப்பின் உச்சத்துக்கு தள்ளி போட்டியின் சுவாரஸ்யத்தைக் குறைத்துவிடும்.

டிசம்பர் மாதத்தில் இந்திய அணியுடன் 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணி விளையாட உள்ளது. இதில் டி20 போட்டிகள் டிசம்பர் 6-ம்தேதி (மும்பை) 8-ம் தேதி (திருவனந்தபுரம்), 11-ம் தேதி (ஹைதராபாத்) நடக்க உள்ளன. அதேபோல, ஒருநாள் போட்டிகள் சென்னை (டிச.15), விசாகப்பட்டினம் (டிச.18), கட்டாக் (டிச22) ஆகிய இடங்களில் நடக்க உள்ளன.

இந்தத் தொடருக்கான இந்திய அணி நாளை (வியாழக்கிழமை) தேர்வு செய்யப்பட உள்ளது. அனேகமாகத் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்தின் கடைசிக் கூட்டம் இதுவாகத்தான் இருக்கும் எனத் தெரிகிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஜனவரி மாதம் நடக்கும் தொடருக்கு அனேகமாக புதிய தேர்வுக்குழு தேர்வு செய்யப்படும் எனத் தெரிகிறது.

ஆனால், இப்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வி என்னவென்றால், இந்திய அணியில் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு உள்நாட்டில் நடக்கும் போட்டிகளில் ஓய்வு அளித்துவிட்டால் எவ்வாறு போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என்பதுதான் கேள்வியாகும். இதில் ஏற்கெனவே தோனி வேறு விளையாடவில்லை என்பது ரசிகர்களின் ஏகவருத்தமாக இருந்து வருகிறது.

ரோஹித் சர்மா, விராட் கோலி, தோனி ஆகியோர் இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் மட்டுமல்ல, வர்த்தக ரீதியாகவே மிகவும் கவனிப்பைப் பெற்றவர்கள். இவர்கள் மூவரும் உள்நாட்டில் விளையாடினால் வர்த்தக ரீதியாகவும், ரசிப்பு ரீதியாகவும் கவனிப்பைப் பெறும்.

இதில் தோனியும், ரோஹித் சர்மாவும் உள்நாட்டில் விளையாடாமல் அல்லது தேர்வு செய்யப்படாமல் இருந்தால் அந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என்பது கேள்விக்குள்ளாகும் விஷயம்.

விராட் கோலி தொடர்ச்சியாக விளையாடி வருகிறார் என்ற காரணத்தைக் கூறி வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அடுத்ததாக ரோஹித் சர்மாவின் தொடர்ச்சியான உழைப்பைக் காரணம் காட்டி உள்நாட்டில் விளையாடும் போட்டியில் ஓய்வு அளிக்க உள்ளார்கள்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியோடு சேர்த்து காலண்டர் ஆண்டில் ரோஹித் சர்மா 60 போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாடியுள்ளார். 25 ஒருநாள் போட்டிகள், 11 டி20 போட்டிகள் இதில் அடங்கும். ரோஹித் சர்மாவின் உழைப்பைப் பார்க்கும்போது அடுத்துவரும் போட்டித் தொடரின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு ஓய்வு அவசியம்தான்.

அதேசமயம் உள்நாட்டில் ரோஹித் சர்மாவுக்கு என தனியாக மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அவரைத் தொடருக்குத் தேர்வு செய்யாமல் ஓய்வு அளிப்பது தொடரின் சுவாரஸ்யத்தை நீர்த்துப்போகச் செய்யும். தோனி வழக்கமான பயிற்சிக்குத் திரும்பினாலும், ஒருநாள், டி20 தொடரில் தேர்வு செய்யப்படுவது மிகவும் அரிதுதான். ஆனால், ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படும் பட்சத்தில், தோனி தேர்வு செய்யப்பட்டால்தான் இந்தப் போட்டித் தொடர் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தும் விதத்தில் இருக்கும்.

காயம் காரணமாக ஹர்திக்பாண்டியா, புவனேஷ் குமார், பும்ரா ஆகியோர் ஓய்வில் இருப்பதால் அவர்களும் இந்தத் தொடருக்குத் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை. ரோஹித் சர்மா, தோனியும் இல்லாமல் இருந்தால், இந்தத் தொடர் முற்றிலும் விறுவிறுப்பு இல்லாத நிலை மட்டுமே இருக்கும்.

இந்திய அணியில் மற்றொரு 'வேஸ்ட் லக்கேஜ்ஜாக' தற்போது விமர்சிக்கப்படுபவர் ஷிகர் தவண். உலகக் கோப்பைப் போட்டிக்குப் பின் ஷிகர் தவண் பேட்டிங்கை மறந்தவாறுதான் விளையாடி வருகிறார். இதில் ஆஸ்திரேலியாவின் கூக்கபுரா பேட்டை வேறு பயன்படுத்தி வருகிறார்.

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரிலும் (42,31,19) தவண் ஜொலிக்கவில்லை. உள்நாட்டில் நடக்கும் முஷ்டாக் அலி தொடரிலும் பங்கேற்று தவண் பயிற்சி எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் (0,9,6,19,33) மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

இந்தத் தொடரில் சுவாரஸ்யத்தை அதிகரிக்க வேண்டும் என இந்திய அணி நிர்வாகம் விரும்பும்பட்சத்தில், ஷிகர் தவணை முதலில் கழற்றிவிட வேண்டும். அதற்கு பதிலாக தற்போது சூப்பர் ஃபார்மில் இருக்கும் மயங்க் அகர்வாலைத் தேர்வு செய்ய வேண்டும். அல்லது கே.எல்.ராகுலை பரிசீலிக்க வேண்டும்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் மட்டுமல்லாது, முதல் தரப்போட்டிகளிலும் மயங்க் அகர்வால் சிறப்பான ஃபார்மில் இருந்து வருகிறார். ரோஹித் சர்மா ஒருவேளை தேர்வு செய்யப்பட்டால்கூட தொடக்க வீரராக தவணுக்குப் பதிலாக அகர்வாலைத் தேர்வு செய்யலாம்.

அடுத்து முக்கியமான வீரர் ரிஷப் பந்த். தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பர் என்று தொடர்ந்து கூறி ரிஷப் பந்த் தோளில் மறைமுகமான அழுத்தத்தை அதிகரித்துவிட்டார்கள். இதனால் ரிஷப் பந்த் தனது வழக்கமான பேட்டிங்கை வெளிக்கொண்டுவர முடியாமல் தவிக்கிறார். அவருக்கு சில போட்டிகளில் ஓய்வு அளித்து, துடிப்பான வீரராக இருக்கும் சஞ்சு சாம்ஸனைத் தேர்வு செய்யலாம்.

பல போட்டிகளில் சஞ்சு சாம்ஸனை அணிக்குத் தேர்வு செய்தும் அவரை விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு வழங்கவில்லை. ஆதலால், மே.இ..தீவுகள் தொடரில் சாம்ஸனுக்கு வாய்ப்பு வழங்கி சோதித்துப் பார்க்கலாம்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் துபே, சர்துல் தாக்கூர்தான் அணியில் மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய தீபக் சாஹர் அணியில் உறுதியான இடம் பிடித்துவிட்டார். ஆனால், சீனியர் வீரர்களான உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா டெஸ்ட் அணிக்கு மட்டுமே என்று ஓரம்கட்டப்பட்ட சூழல் வந்துவிட்டது.

சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் வரிசையில் வாஷிங்டன் சுந்தர், குர்னல் பாண்டியா இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் கோலியின் நம்பிக்கையைப் பெற்ற சுந்தருக்கே அதிகமான வாய்ப்பு இருக்கும். அதேபோல, யஜுவேந்திர சாஹல் அணியில் இடம் பெற்றால், ரவிந்திர ஜடேஜா இடம் பெறுவாரா என்ற கேள்வியும் எழுகிறது.

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் ரன்களை வாரி வழங்கி கலீல் அகமது தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் இருந்தாலும், அவரின் கட்டுக்கோப்பில்லாத பந்துவீச்சு அணிக்குப் பலநேரங்களில் ஆபத்தாக அமைந்துவிடுகிறது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் மட்டுமே கலீலைத் தேர்வு செய்யலாம் இல்லாவிட்டால், உமேஷ் யாதவ் வாய்ப்பு பெறுவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x