

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரமின் கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் கராச்சியில் உள்ள அந்நாட்டு தேசிய விளையாட்டு மைதானத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
இது குறித்து வாசிமின் மேலாளர் அர்சலான் ஹைதர் கூறும்போது, "வாசிம் தனது காரை ஓட்டிக் கொண்டு வந்தார். அப்போது அவரது கார் அருகே மற்றொரு கார் இடிப்பதுபோல வந்தது. திடீரென உள்ளே இருந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டனர்" என்றார்.
வாசிம் அக்ரம் மீதான தாக்குதலுக்கான பின்னணி இதுவரை தெரியவில்லை. தாக்குதல் குறித்து பாகிஸ்தான் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்தத் தாக்குதல் குறித்து ஜியோ சானலுக்கு வாசிம் அக்ரம் கூறும்போது, "நான் காரை விட்டு இறங்கி சென்றபோது, எனது கார் மீது துப்பாக்கியால் சுட்டனர். தோட்டா எனது கார் சக்கரம் மீது பட்டது. இதில் எனக்கு காயம் ஏற்படவில்லை. காரின் அடையாள எண் மற்றும் அடையாளங்களை போலீஸாரிடம் தெரிவித்துள்ளேன்" என்றார்.
பாகிஸ்தான் தேசிய விளையாட்டு மைதானத்தில் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்க வாசிம் சென்று கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.