Published : 20 Nov 2019 10:13 AM
Last Updated : 20 Nov 2019 10:13 AM

தோனி என் பந்துகளை சேப்பாக்கம் நெடுக அடித்து நொறுக்கினார், பிறகு சிக்சர் கொடுக்காமல் அவருக்கு வீசினேன்: இளம் ஸ்பின்னர் சாய் கிஷோர்

தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிஸ்ரீநிவாசன் சாய் கிஷோர் என்ற இடது கை ஸ்பின்னர் சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். குறிப்பாக இவர் பவர் ப்ளேயில் வீசியே இவரது சிக்கன விகிதம் 3.86 ஆக இருந்தது.

23 வயதாகும் இவர் சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு ஆடியுள்ளார். தமிழ்நாடு அணி முஷ்டாக் அலி டி20 தொடரில் சூப்பர் லீக் கட்டத்துக்கு உயர சாய் கிஷோரின் பவுலிங்கும் ஒரு குறிப்பிடத்தகுந்த அம்சமாகும்.

வாஷிங்டன் சுந்தர் அணியில் இருந்தும் பவர் ப்ளேயில் சாய் கிஷோர் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவர் இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திர அதிரடி வீரர் எம்.எஸ்.தோனியின் மோதிர விரலாக் குட்டு வாங்கியவர். சிஎஸ்கே அணியின் வலைப்பயிற்சியில் இவர் வீசிய போது தோனி இவரது பந்துகளை மைதானம் நெடுக அடித்து நொறுக்கினார்.

அந்த அனுபவம் குறித்து ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்துக்கு சாய் கிஷோர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

“சிஎஸ்கே வலைப்பயிற்சியில் பந்து வீசியது, அங்கு நேரத்தைச் செலவிட்டது மதிப்பு மிக்க அனுபவமாக இருந்தது. முதல் 2 நாட்கள் நன்றாக வீசினேன். 3ம் நாள் நான் எப்படி வீசுகிறேன் என்று சரியாகக் கணித்து விட்டார்கள் போலும், மைதானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் என் பந்துகளை அடித்து நொறுக்கினார். யார்? தோனிதான். லைனை மாற்றினேன், லெந்த்தை மாற்றினேன் ஆனாலும் தோனி என் பந்துகளை மைதானம் நெடுக அடித்து நொறுக்கினார்.

சிஎஸ்கேவுடன் வலைப்பயிற்சி என்பது சரியான ஒரு பட்டறைப் பயிற்சி காலக்கட்டமாகும். ஹர்பஜன் சிங் இருந்தார், தோனி இப்படி போட்டு சாத்துகிறாரே என்ன செய்வது என்று அவரிடம் கேட்டேன். எப்போதும் அடிவாங்கும்போது தப்பித்தல் வழியாக பாதுகாப்பு உத்திக்குச் சென்று பதட்டமடையக் கூடாது. இது கூடாது என்றார் ஹர்பஜன் சிங். என்ன வீசுகிறோமோ அதை தன்னம்பிக்கையுடன் பதற்றமடையாமல் வீசு என்றார், அப்படியும் தோனி அடிக்கிறாரா அடிக்கட்டும் என்றார்.

அடுத்த 2 நாட்கள் தோனிக்கு வீசினேன் கொஞ்சம் பரவாயில்லை என்பது போல் வீசினேன். ஒரு செஷனில் ஒரு சிங்கிள் சிக்ஸ் கூட நான் கொடுக்கவில்லை. அனைத்துப் பகுதிகளிலும் அடித்து நொறுக்கப்பட்டது ஒரு பவுலராக என்னிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தியது” என்று கூறிய சாய் கிஷோர், தானும் விஜய் சங்கர் போல் ஒரு மடிப்பாக்கம் பையன் தான் என்றார்.

சாய் கிஷோர் ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x