

2022-ம் ஆண்டு கத்தாரில் நடைபெறும் ஃபீபா உலகக்கோப்பைக் கால்பந்து போட்டிகளுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்தியா கிட்டத்தட்ட இழந்து விட்டது, காரணம் ஓமனிடம் நேற்று தோற்றதன் மூலம் 2வது தோல்வியைப் பதிவு செய்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
மஸ்கட்டில் சுல்தான் குவாபூஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஓமனுக்கு எதிரான உ.கோப்பை தகுதிச் சுற்று கால்பந்தாட்டத்தில் இந்திய அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
இந்தத் தோல்வியினால் குரூப் ஈ-யில் இந்திய அணி 4ம் இடத்தில் உள்ளது. மொத்தம் 3 புள்ளிகளே பெற்றுள்ளதால் கிட்டத்தட்ட உலகக்கோப்பைக் கால்பந்து தகுதி வாய்ப்பை இழந்து விட்டது என்றுதான் கூற வேண்டும்.
ஓமனுக்கு தொடக்கத்திலேயே பெனால்ட்டி வாய்ப்பு கிடைக்க அதனை மோசின் அல் கஜானி என்ற வீரர் வெளியே அடித்து வாய்ப்பை நழுவ விட்டார். ஆனால் இதெ கஜானிதான் 33ம் நிமிடத்தில் கோலை அடித்தார், அதுவே வெற்றிக்கான கோலாக அமையும் என்று அவர் அப்போது கருதவில்லை. ஆனால் ரீப்ளேயில் மோசின் அல் கஜானி சற்றே ஆஃப் சைடு போல் தெரிந்தது.
ஆனால் இந்த தீர்ப்பினால்தான் இந்தியா தோற்றது என்று கூறுவதற்கில்லை, காரணம் ஓமன் கோல்களை நோக்கிய இந்திய வீரர்களின் முயற்சியில் எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லை, ஓமன் கோல் கீப்பர் அலி அல் ஹாப்ஸி பெரும்பாலும் ஜாலியாகவே இந்திய அணியின் முயற்சிகளை எதிர்கொண்டார், அவ்வளவு பலவீனமான முயற்சிகளாகி விட்டன அவைகள்.
இந்த ஆண்டில் நடக்கும் கடைசி உலகக்கோப்பைத் தகுதிச் சுற்றாகும் இது. 2020-ல் இந்தியாவில் இந்திய அணி கத்தார் அணியை மார்ச் 26ம் தேதியும், பிறகு வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொண்டு அந்த அணியுடன் ஜூன் 4ம் தேதியும், பிறகு ஆப்கானுக்கு எதிராக ஜூன் 9ம் தேதியும் இந்திய அணி மோதுகிறது. உலகக்கோப்பை தகுதி வாய்ப்புகள் கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில் 2023 ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றுகளில் ஆடும் வாய்ப்பு உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது.