Published : 19 Nov 2019 09:18 PM
Last Updated : 19 Nov 2019 09:18 PM

வேகமாக வீசிவிட்டால் வேகப்பந்து வீச்சாளரா அல்லது பேட்ஸ்மெனை அடிவாங்கச் செய்தால் போதுமா? - கபில்தேவ் விளக்கம்

உலகக்கோப்பை வென்று இந்திய கிரிக்கெட்டின் முகத்தையே மாற்றிய ஆல்ரவுண்டர்-முன்னாள் கேப்டன் கபில் தேவ் வேகப்பந்து வீச்சு என்றால் என்ன என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

“பேட்ஸ்மெனை அடிவாங்கச் செய்தால் வேகப்பந்து வீச்சாளர் என்று அர்த்தமா? நாம் எதிர்பார்த்ததை விட பந்து மட்டையைக் கடந்து கண்ணிமைக்கு நேரத்துக்குள்ளாக செல்கிறதே அதுதான் வேகப்பந்து வீச்சு.

பேட்ஸ்மென்களுக்கு எப்போதும் ஒரு பயம் இருக்கும். ஆயிரமாயிரம் ரன்களை ஒரு பேட்ஸ்மென் குவித்திருக்கலாம் ஆனால் ஒரு உண்மையான வேகப்பந்து வீச்சாளரின் பந்து வீச்சை இவர்கள் அவ்வளவு மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வதில்லை.

சுனில் கவாஸ்கர் கூட கூறியுள்ளார், அனைத்து பேட்ஸ்மென்களும் வேகப்பந்து வீச்சை மகிழ்ச்சியுடன் ஆட விரும்புவதில்லை. 145 கிமீ வேகம் வீசுபவர் வேகப்பந்து வீச்சாளர். மட்டையை எதிர்பார்த்ததை விட கடந்து செல்லுமாறு வீசுபவர் வேகப்பந்து வீச்சாளர், பவுன்சரில் பேட்ஸ்மெனைக் குனிய வைப்பவர் வேகப்பந்து வீச்சாளர். விலாவிலோ தலையிலோ பேட்ஸ்மெனை அடிவாங்கச் செய்பவர் மட்டும்தான் வேகப்பந்து வீச்சாளர் என்பது அல்ல.

ஆஸ்திரேலியாவின் ஜெஃப் தாம்சன் தான் ஒரே வேகப்பந்து வீச்சாளர், ஏனெனில் அவரிடம் வெறும் காட்டு வேகம் மட்டுமே இருக்கும்.

டெனிஸ் லில்லி வேகத்துடன் ஸ்விங்கையும் இணைப்பவர், மால்கம் மார்ஷலும் அப்படியே. கிரிக்கெட்டில் மிகச்சிறந்த தடகளத் திறமையுடைய மைக்கேல் ஹோல்டிங், இவரும் உண்மையான வேகம் காட்டுவார், ஆனால் கடைசியில் ஆன்டி ராபர்ட்ஸ்தான் விக்கெட்டுகளை வீழ்த்துவார், காரணம் அவரிடம் இருக்கும் துல்லியமான ஸ்விங் மற்றும் தேவையான வேகம், ஸ்விங் மிக மிக முக்கியம். ஏனெனில் பந்துகள் ஸ்விங் ஆகும் போது எந்த ஒரு பேட்ஸ்மெனும் சீராக நல்ல முறையில் ஆடிவிட முடியாது” என்று நீண்ட விளக்கம் அளித்தார் கபில்தேவ்.

ஆனால் இம்ரான் கானை கபில் தேவ் குறிப்பிடாமல் விட்டு விட்டார்.

-ஸ்போர்ட்ஸ்டார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x