30 பந்துகளில் 91 ரன்; கேகேஆர் அணியுடன் எந்தவிதமான மனக்கசப்பும் இல்லை: டி10 போட்டியில் காட்டடி அடித்த கிறிஸ் லின்

கிறிஸ்லின் : கோப்புப்படம்
கிறிஸ்லின் : கோப்புப்படம்
Updated on
2 min read

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி என்னை விடுவித்ததால், அந்த அணியுடன் எனக்கு எந்தவிதமான மனக்கசப்பும் இல்லை. சீரான நட்புறவு இருக்கிறது என்று டி10 கிரிக்கெட் லீக்கில் விளையாடிவரும் ஆஸி.வீரர் கிறிஸ் லின் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு நாடுகளின் அபுதாபி நகரில் 3-வது ஆண்டாக டி10 கிரிக்கெட் லீக் போட்டித் தொடர் தொடங்கி நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. மொத்தம் 10 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்படுகிறது.

இதில் மராத்தா அரேபியன்ஸ், டீம் அபுதாபி, கர்நாடக டஸ்கர்ஸ், டெக்கான் கிளாடியேட்டர்ஸ், டெல்லி புல்ஸ், பங்களா டைகர்ஸ், குவாலாண்டர்ஸ், நார்தன் வாரியர்ஸ் ஆகிய அணிகள் விளையாடுகின்றன.

அபுதாபியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் மராத்தா அரேபியன்ஸ் அணியை டீம் அபுதாபி அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற டீம் அபுதாபி அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த மராத்தா அரேபியன்ஸ் 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் சேர்த்தது. 139 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய டீம் அபுதாபி, 3 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் சேர்த்து 24 ரன்களில் தோல்வி அடைந்தது.

தொடக்க வீரராகக் களமிறங்கிய கிறிஸ் லின் 30 பந்துகளில் 90 ரன்கள் சேர்த்து அரங்கை சிக்ஸர், பவுண்டரி மழையில் நனையவைத்தார். இவரின் கணக்கில் 9 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடங்கும். கிறிஸ் லின் ஸ்ட்ரைக் ரேட் நேற்று 303 ஆக இருந்தது.

2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து கிறிஸ் லின் கழற்றி விடப்பட்ட நிலையில் அது தவறான முடிவு என்பதை கிறிஸ் லின் தனது அதிரடி ஆட்டம் மூலம் நிரூபித்துள்ளார்.

கேகேஆர் அணிக்காக 41 போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் லின் 1280 ரன்கள் சேர்த்துள்ளார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 140. தற்போது கேகேஆர் அணி கிறிஸ் லின்னை கழற்றிவிட்டுள்ளதால் ஏலத்தின் மூலம் வேறு அணி எடுக்க வாய்ப்புள்ளது. இதற்கு முன் டி10 கிரிக்கெட் லீக் போட்டியில் இங்கிலாந்து வீரர் அலெக் ஹேல்ஸ் 32 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை கிறிஸ் லின் முறியடித்துவிட்டார்.

இந்தப் போட்டி முடிந்த பின், கிறிஸ் லின் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ''கேகேஆர் அணி நிர்வாகிகள், ஊழியர்கள், பயிற்சியாளர் அனைவருடனும் எனக்கு இன்னும் நல்ல நட்புறவு இருக்கிறது. எந்தவிதமான மனக்கசப்பும் இல்லை. எங்களின் நட்புறவு முன்பு இருந்ததைக் காட்டிலும் இன்னும் வலுவாகத்தான் இருக்கிறது.

என்னைக் காட்டிலும் சிறந்த வீரர்கள் கேகேஆர் அணியால் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் நோக்கம் தொடரை வெல்வதற்குத்தான் முன்னுரிமை. பயிற்சியாளர் மெக்கலமும் அதைத்தான் விரும்புகிறார்.

ஐபிஎல் ஏலம் வரும்போது, நான் நன்றாக ரன்களை ஸ்கோர் செய்தால், சில பயிற்சியாளர்கள் என்னைத் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. நேர்மறையாகவே சிந்திப்போம். இந்த ஆட்டத்தில் 139 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர். அதிலும் முதல் ஆட்டத்திலேயே எங்கள் அணி 100 ரன்களைத் தாண்டியுள்ளது மகிழ்ச்சி" எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in