

அபுதாபி டி10 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவின் கிறிஸ் லின் புதுவிதமான காட்டடியில் 30 பந்துகளில் 91 ரன்கள் விளாசி சாதனை புரிந்துள்ளார். இதற்கு முன்பாக 2018-ல் அலெக்ஸ் ஹேல்ஸ் 32 பந்துகளில் 87 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
மராத்தா அராபியன்ஸ் அணிக்கு ஆடும் கிறிஸ் லின் தன் 30 பந்துகளில் 9 பவுண்டரிகள் 7 சிக்சர்களை விளாசினார், அதாவது 16 பந்துகளில் 78 ரன்கள். இவரது ஸ்ட்ரைக் ரேட் 303 . புக் கிரிக்கெட்டில் கூட ஆடிக்கொண்டே இருக்கும் போது சைபர் வந்து விடும். ஆனால் கிறிஸ் லின் ஆட்டத்தில் ஓய்வு ஒழிச்சலே இல்லாத அதிரடியைப் பார்க்க முடிந்ததகா ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கொல்கத்தா அணி 2020 ஐபிஎல் ஏலத்தை முன்னிட்டு கிறிஸ் லின்னை விடுவித்தது. இது பெரிய தவறு என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
“கிறிஸ் லின்னைத் தக்கவைக்காமல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெரும் தவறிழைத்து விட்டது. கிறிஸ் லின் நம்ப முடியாத ஒரு இன்னிங்சை ஆடினார். நம்பவே முடியாத ஷாட்கள்.
ஐபிஎல் ஆட்டங்களிலேயே லின்னை நான் பார்த்திருக்கிறேன் கொல்கத்தாவுக்காக சில நம்ப முடியாத தொடக்கங்களை கொடுத்துள்ளார். அவரை ஏன் கொல்கத்தா விட்டு விட்டது, நிச்சயம் இது மோசமான முடிவாகும்” என்று யுவராஜ் சிங் ஆதங்கப்பட்டுள்ளார்.