Published : 17 Nov 2019 03:53 PM
Last Updated : 17 Nov 2019 03:53 PM

ஷிகர் தவணை நீக்கி விட்டு ஒருநாள், டி20-யில் மயங்க் அகர்வால் கொண்டு வரப்பட வேண்டும்

டெஸ்ட் போட்டிகளிலேயே ஆக்ரோஷமாக ஆடி இரட்டைச் சதங்களை குவித்து வரும் மயங்க் அகர்வாலை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியிலும் சேர்க்க வேண்டும் என்ற வாதம் வலுத்து வருகிறது.

மேலும் ஷிகர் தவண் ஃபார்ம் நாளுக்கு நாள் சரிவடைந்து கொண்டே வரும் நிலையில் மயங்க் அகர்வால் அந்த இடத்துக்கு மிகவும் பொருத்தமானவர் என்ற பார்வை இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்திடம் அதிகம் வலுத்து வருவதாகத் தெரிகிறது. ஷிகர் தவண் சமீபத்தில் சையத் முஷ்டாக் அலி ட்ராபியில் கூட ஒரு டக் அடித்தார்.

இதனையடுத்து ஷிகர் தவணைத் தூக்கி விட்டு அவருக்குப் பதிலாக மயங்க் அகர்வாலை அணியில் சேர்க்க வேண்டும் என்று அவருக்கு ஆதரவு வலுத்துவருகிறது.

மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டால் அந்த இடத்தில் மயங்க் அகர்வால் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நியூஸிலாந்துக்கு இந்திய அணி சென்று 5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது, இதில் சிறப்புக் கவனம் செலுத்துமாறு ரோஹித் சர்மாவுக்கு மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரில் ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

மயங்க் அகர்வால் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 13 சதங்களை 50+ சராசரியுடன் 100+ ஸ்ட்ரைக் ரேட் என்று பிரமாதமாக ஆடிவருகிறார். இன்னொரு காரணமும் அகர்வாலின் தேவையை வலியுறுத்துகிறது, அது கே.எல்.ராகுலின் சீரற்ற பார்ம், மற்றும் அவரது காயங்களாகும்.

உலகக்கோப்பையின் போதே அகர்வால், கடைசி நேர மாற்றாக விஜய் சங்கருக்குப் பதிலாக அனுப்பப்பட்டார், ஆனால் விளையாட வாய்ப்பு கிட்டவில்லை.

மேலும் அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை மேலும் 2023 உலகக்கோப்பைக்கு முன்னதாக மயங்க் அகர்வால் 50-60 குறைந்த ஓவர் சர்வதேச போட்டிகளில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆடி தயாராகி விட்டால் இந்திய அணி தொடக்கத்தில் மிகவும் வலுவான அணியாகத் திகழும். 2023 உலகக்கோப்பைக்கு ரோஹித் சர்மா இருப்பதே கடினம் என்ற நிலை உருவாகலாம். கிரிக்கெட்டில் எதுவும் சொல்ல முடியாது, ஆகவே மயங்க் அகர்வாலை நிச்சயம் தயார் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது

இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் தீப் தாஸ் குப்தாவும் மயங்க் அகர்வாலைக் கொண்டு வருவதை ஆதரிக்கிறார், “தொடக்க வீரராக ஒருநாள், டி20யிலும் அகர்வாலை கொண்டு வருவதை இந்தியா அணி நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும். அவர் வெள்ளைப்பந்தில் இன்னும் இயல்பாக ஆடக்கூடியவர். சிகப்புப் பந்து கிரிக்கெட்டுக்காக அவர் பிரமாதமாக தன் ஆட்டத்தைத் தகவமைத்துக் கொண்டுள்ளார்.

மயங்க் அகர்வாலின் திறமை பற்றி கேள்வியே இல்லை. ட்ரைவ்கள், மட்டையை படுக்கை வசமாக வைத்து ஆடும் புல், ஹூக் ஷாட்கள், ஒருநாள் போட்டிகளுக்கான புதுவகை ஷாட்கள் என அவரிடம் உத்திகள் ஏராளமாக உள்ளன. முன்பு சிறு அதிரடி இன்னிங்ஸ்களை ஆடுபவர் இனி பெரிய இன்னிங்ஸ்களை ஆட முடியும்” என்று கூறுகிறார்.

டெஸ்ட் இன்னிங்ஸ்களிலும் சிக்சர்களை அதிகம் அடிக்கிறார் அகர்வால், அன்று வங்கதேசத்துக்கு எதிரான 243 ரன்களில் 8 கிளீன் சிக்சர்களை அடித்திருந்தார். டி20-யில் கூட கொஞ்சம் காத்திருக்கலாம் ஆனால் ஒருநாள் போட்டிகளுக்கு மயங்க் அகர்வாலின் தேவை இப்போது அதிகமாகியுள்ளது.

கவனிக்குமா இந்திய அணி நிர்வாகம்? பொறுத்திருந்து பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x