

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஆதாயம் பெறும் வகையில் இரட்டை பதவி வகித்துச் செயல்படுகிறார் எனக் கூறப்பட்டு அளிக்கப்பட்ட புகாரை பிசிசிஐ நெறிமுறை அதிகாரி தள்ளுபடி செய்தார்
மத்தியப்பிரதேச கிரிக்கெட் அமைப்பின் வாழ்நாள் உறுப்பினர் சஞ்சீவ் குப்தா கடந்த அக்டோபர் 4-ம் தேதி பிசிசிஐ நெறிமுறை அதிகாரி ஜெயினுக்கு புகார் அனுப்பி இருந்தார். அந்தப் புகாரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பெங்கால்(மேற்கு வங்க) கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருந்து கொண்டு, பிசிசிஐ அமைப்பின் பிரதிநிதியாகவும் இருக்கிறார். பிசிசிஐ விதிப்படி ஆதாயம் தரும் இரட்டைப் பதவிகளில் ஒருவர் இருக்கக் கூடாது என்று அதில் தெரிவித்திருந்தார்.
ஆனால், பிசிசிஐ தலைவராக கங்குலி கடந்த அக்டோபர் 23-ம் தேதி பொறுப்பு ஏற்பதற்கு முன்பாகவே பெங்கால் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதையடுத்து, இந்த புகாரை விசாரித்த நெறிமுறை அதிகாரி சவுரவ் கங்குலி எந்தவிதமான இரட்டை ஆதாயம் பெறும் பதவியிலும் இல்லை எனக் கூறி புகாரைத் தள்ளுபடி செய்தார்
இதுதொடர்பாக நெறிமுறை அதிகாரி ஜெயின் வெளியிட்ட அறிவிப்பில், " என்னைப் பொறுத்தவரை பிசிசிஐ தலைவர் பதவியை ஏற்கும் முன்பே முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது பெங்கால் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் மீது எந்தவிதமான இரட்டை ஆதாய பதவிக்கான குற்றச்சாட்டு ஏதும் கூற இயலாது. அவருக்கு எதிராகக் கொடுக்கப்பட்டுள்ள புகார் தேவையில்லாதது. ஆதலால், இதைத் தள்ளுபடி செய்கிறேன்" எனத் தெரிவித்தார்