சொந்த மண்ணில் மேகாலயா அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த  ‘நட்சத்திர’ மும்பை

மும்பையை நொறுக்கிய ரவி தேஜா, சஞ்சய் யாதவ். மேகாலயா வீரர்கள்.
மும்பையை நொறுக்கிய ரவி தேஜா, சஞ்சய் யாதவ். மேகாலயா வீரர்கள்.
Updated on
1 min read

வான்கடே மைதானத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டி20 போட்டித் தொடரில் ஷ்ரேயஸ் அய்யர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் கொண்ட மும்பை அணி கடந்த சீசனில்தான் மைய நீரோட்ட கிரிக்கெட்டுக்கே வந்த மேகாலயா அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

பிளேட் லீக் டீமான மேகாலயா முதலில் பந்து வீசி மும்பையை 157/6 என்று மட்டுப்படுத்தியது. பிறகு இலக்கை 19.2 ஓவர்களில் வெற்றிகரமாக விரட்டி அதிர்ச்சித் தோல்வியடையைச் செய்தது.

மேகாலயா அணியின் துவாரகா ரவி தேஜா 45 பந்துகள்ல் 61 நாட் அவுட், சஞ்சய் யாதவ் 44 பந்துகளில் 55 ரன்கள். ரவிதேஜா மேலும் பந்து வீச்சில் இந்திய வீரர் ஷ்ரேயஸ் அய்யர் விக்கெட்டையும் வீழ்த்தி தன் நாளை பொன்னாளாக்கிக் கொண்டார்.

மும்பை இத்தனைக்கும் அதிரடியாகத் தொடங்கியது, அந்த அணியின் ஜெய் பிஸ்தா, ஆதித்ய தாரே இருவரும் 8.2 ஓவர்களில் 73 ரன்களை விளாசினர். ஆனால் அதன் பிறகு மும்பை அணியின் நட்சத்திர அதிரடி வரிசை கட்டுப்படுத்தப்பட்டது. ஷ்ரேயஸ் அய்யர், சித்தேஷ் லாத், சூரியகுமார் யாதவ் ஆகியோர் பந்துக்கு ஒரு ரன் என்ற விகிதத்தில்தான் ரன்களைச் சேர்க்க முடிந்தது.

9வது ஓவரில் தொடக்க வீரர்களான ஜெய் பிஸ்தா, ஆதித்ய தாரே இருவரும் மேகாலயா மீடியம் வேகப்பந்து வீச்சாளர் ஸ்வரஜீத் தாசிடம் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு மேகாலயா பவுலர்கள் அபய் நேகி, அமியாங்க்‌ஷு சென், ரவி தேஜா ஆகியோர் மும்பையை தங்களது விக்கெட்டுகளால் முடக்கினர்.

158 ரன்கள் இலக்கை எதிர்த்துக் களமிறங்கிய மேகாலயா அணியில் தொடக்க வீரர் புனீத் பிஷ்ட் 12 பந்துகளில் 23 ரன்கள் விளாசினார். 4 ஒவர்களில் 41 ரன்களை மேகாலாய எடுத்தாலும் 3 விக்கெட்டுகளை இழந்து கொஞ்சம் தடுமாறியது. அதன் பிறகுதான் ரவி தேஜா மற்ரும் சஞ்சய் யாதவ் கூட்டு சேர்ந்தனர். இவர்கள் 12.3 ஓவர்களில் 92 ரன்கள் கூட்டணி அமைத்து வெற்றிக்கு வித்திட்டனர்.

தொடரில் மும்பையிம் முதல் தோல்வி இது என்பதால் குரூப் டி-யில் அதன் நிலையை இந்தத் தோல்வி பாதிக்காது என்றாலும் மேகாலயா அணியுடனான இந்தத் தோல்வி மும்பை ஓய்வறையில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in